கிரிமினல் சட்டங்களைத் திருத்தும் முயற்சியைக் கைவிடவேண்டும் – மத்திய பாஜக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்

இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகியவற்றில் திருத்தம் செய்வதற்கு மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சனநாயகத்துக்கு எதிரான பல்வேறு திருத்தங்கள் மத்திய அரசால் அமைக்கப்பட்ட குழுவால் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே நடைமுறையில் இருக்கின்ற கிரிமினல் சட்டங்களை தடா, பொடா சட்டங்களைப் போன்ற கொடும் சட்டங்களாக மாற்றுவதற்கான இந்த முயற்சி யைக் கைவிடுமாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

இந்தியாவில் உள்ள கிரிமினல் சட்டங்களைத் திருத்தும் முயற்சி பாரதிய ஜனதா கட்சி முதலில் பதவியேற்றபோதே துவங்கி விட்டது. அப்போது உள்துறை அமைச்சராகவும் துணைப் பிரதம ராகவும் இருந்த எல்.கே. அத்வானி இதற்கென ஒரு குழுவை நியமித்தார். நீதிபதி மலிமத் அவர் கள் தலைமையில் உருவாக்கப்பட்ட அந்த குழு 158 பரிந்துரைகளை அரசுக்கு கொடுத்தது. அந்தப் பரிந்துரைகள் ஜனநாயக விரோதமாக உள்ளன என்று அப்போது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. அதன் பிறகு அப்படியே கிடப்பில் போடப்பட்டது.

இப்போது மோடி அரசு மீண்டும் கிரிமினல் சட்டங்களில் திருத்தம் செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. உள்துறை அமைச்சகத்தால் இதற்கென ஐந்து நபர்கள் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவின் முதன்மையான நோக்கங்களாக சில குறிப்பிடப் பட்டுள்ளன. காவல்துறையினரின் முன்பு ஒருவர் அளிக்கும் சாட்சியத்தை நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளக்கூடாது என்பது தற்போது நடைமுறையில் உள்ள சட்டமாகும். ஆனால் இப்போது செய்யப்படும் திருத்தத்தில் அதை நீதிமன்றம் சாட்சியமாக எடுத்துக் கொள்ளலாம் என்று மாற்றவேண்டும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. இது நம்முடைய அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரானதாகும். மேலும், காவல்துறையினரின் தான்தோன்றித்தனமான எதேச் சதிகாரப் போக்குகளை ஊக்கப்படுத்துவதாகும்.

அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு 20 (3 ), குற்றம் சாட்டப்படும் எவர் ஒருவரும் அவருக்கு எதிரான சாட்சியாக இருக்கும்படி நிர்ப்பந்திக்கக்கூடாது என்று கூறுகிறது. அதேபோல, இந்திய சாட்சிய சட்டத்தின் பிரிவு 25 மற்றும் 26 ஆகியவை போலீஸ் அதிகாரியின் முன்னால் அளிக் கப்படும் ஒப்புதல் வாக்குமூலத்தை சாட்சியமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று கூறுகிறது. காவலில் உள்ள ஒருவரை பலவந்தமாக ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கும்படி ஒரு போலீஸ் அதிகாரி வற்புறுத்தினால் அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்க இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 330 மற்றும் 331 ஆகியவை வழி செய்துள்ளன. இவற்றையெல்லாம் மாற்றிவிட்டு போலிஸ் அதிகாரியின் முன் அளிக்கும் ஒப்புதல் வாக்குமூலத்தை ஒருவருக்கு எதிரான சாட்சியமாக எடுத்துக் கொள்ளலாம் என்று இப்போது மாற்றம் செய்திருக்கிறார்கள். இது காவல்துறையினரின் காட்டாட்சிக்கே -கொடுங்கோன்மை ஆட்சிக்கே வழிவகுக்கும்.

ஏற்கனவே, தடா, பொடா ஆகிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்களில் இத்தகைய பிரிவுகள் சேர்க்கப்பட்டன. அவற்றையெல்லாம் நீதிமன்றங்கள் ரத்து செய்துள்ளன என்பது கவனத்திற் குரியதாகும். இதுபோன்ற பல ஜனநாயக விரோதமான சட்டத் திருத்தங்களை தற்போதுள்ள சனாதன பாஜக அரசு, கிரிமினல் சட்டங்களில் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது. இதை அனு மதித்தால் நமது நாடு சனநாயகப் பாதையிலிருந்து முற்றிலும் விலகி, அதற்கு நேரெதிரான நாச காரப் பாதையில் பயணிக்கும்- ஃபாசிசம் கோலோச்சும் சர்வாதிகார நாடாகி விடும். கொரோனா பேரிடர் பொது முடக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டு பாராளுமன்றத்தைப் புறக்கணித்து இப் படியான சட்ட திருத்தங்களைக் கொண்டுவர சனாதன பாஜக அரசு முற்படுவது அதனுடைய தீய உள்நோக்கத்தையே காட்டுகிறது. எனவே, சனநாயத்தைப் பாதுகாத்திட- இந்திய தேசத்தைப் பாதுகாத்திட இந்த குழுவின் செயல்பாட்டை உடனடியாக நிறுத்திவைக்க வேண்டும் என மைய அரசை வலியுறுத்துகிறோம். சட்டம் ஒழுங்கு என்பது மாநில அரசின் அதிகாரப் பட்டியலில் இருப்பதால் இந்தக் குழுவைத் தமிழக அரசு ஏற்கக்கூடாது என வலியுறுத்துகிறோம். நாட்டில் உள்ள அனைத்து ஜனநாயக சக்திகள் மற்றும் மனிதஉரிமை அமைப்புகள் இதற்காகக் குரல் எழுப்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு தொல். திருமாவளவன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.