சங்கிகளின் சதிக்கு இரையாக வேண்டாமென ஜவாஹிருல்லா தோழமைக் கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தின் அமைதியைக் குலைத்து, சமூகங்களிடையே வெறுப்பை விதைத்து, அரசியல் ஆதாயத்தை அறுவடை செய்திடத் துடிக்கின்ற ஃபாசிச மதவாத சக்திகளின் சதியை முறியடித்து, தமிழகம் சமூக நீதியின் கருப்பை, சமூக நல்லிணக்கத்தின் கோட்டை என்பதை நிலைநாட்டிட, கருத்தியல் போராளிகள் மிகுந்த கவனத்தோடு செயல்பட வேண்டும் என்பதை மிகுந்த அன்போடும், கருத்தியல் போராளிகள் மீது உள்ள உரிமையோடும் வலியுறுத்தி வேண்டுகிறோம். “பிறர் வணங்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் இழிவுபடுத்தி ஏசாதீர்கள்” என்று திருக்குர்ஆன், முஸ்லிம்களுக்குக் கட்டளையிடுகிறது. அதனால் உண்மையான முஸ்லிம் களோ, முஸ்லிம்களின் இயக்கமோ ஒருபோதும் பிறரின் வழிபாட்டுத் தெய்வங்களையோ, அவர்தம் சடங்கு சம்பிரதாயங்களையோ இழிவுபடுத்திப் பேச மாட்டார்கள், பேசக் கூடாது. இந்த நிலைப்பாட்டிற்கு அருள்மறைக் குர்ஆனின் வசனமே அடிப்படையாக உள்ளது.

சங்பரிவாரங்கள் ஆதரித்துக் காப்பாற்றத் துடிக்கும் மனுவாதத் தத்துவத்தால் தங்களின் தன்மானம் பாதிக்கப்படுவதாகக் கருதும் பெரியாரிய, அம்பேத்கரிய, மார்க்சிய கருத்துப் போராளிகள் உள்ளிட்ட தோழமை சக்திகள் தங்களின் கருத்தியல் போராட்டம் சமூக சமத்துவத்தையும், சமூக நீதியையும், சமூக நல்லிணக்கத்தையும் நிலைநாட்டுவதற்கே என்ற கருத்தில் தெளிவாக உள்ளனர். அக்கருத்தியலில் தமது தொண்டர்களை வழிநடத்தும் பெரியாரிய, அம்பேத்கரிய, மார்க்சிய தலைவர்களும் மிகுந்த பொறுப்புணர்வோடு தமது இயக்கங்களை வழிநடத்திச் செல்வதும் குறிப்பிடத்தக்கது.

இயக்கங்களைச் சாராத சில சகோதரர்கள் இணைய ஊடகங்களில் செய்துவிடுகிற ஒருசில வரம்பு மீறிய பதிவுகளை சங்கிகள் தமது துருப்புச் சீட்டாகப் பயன்படுத்திக் கொண்டு தமிழகத்தை கலவரக் காடாக்கிடவும், சங்கிகளுக்கு எதிரான சக்திகள் ஆட்சிக்கு வருவதைத் தடுத்திடவும் பெரும் சதிச்செயல்களில் ஈடுபடுகின்றனர். இதற்கு ஊடகங்கள் பலவும் ஒத்துழைக்கின்றன. இந்த ஒத்துழைப்பு விருப்பத்தின் பேரிலும், நிர்பந்தத்தின் பேரிலும் நிகழ்ந்து வருகிறது.

எனவே, பொதுவான பக்தர்களின் மனம் புண்படும்படியான பதிவுகளை அனைவரும் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறோம். ஒரு சதவீதம் கூட இல்லாத சங்கிகளும் அவர்தம் ஆதரவாளர்களும், ஒட்டுமொத்த இந்துக்களுக்கும் தாங்களே பிரதிநிதிகள் போலவும், ஒட்டு மொத்த இந்துக்களும் இவர்களின் பின்னால் இருப்பது போலவும் ஒரு பொய்யான மாயத் தோற்றத்தை உருவாக்க முயல யாரும் வாய்ப்பளித்துவிடக் கூடாது. இதைக் கட்டளைப் போல் கருதிடாமல், கனிவான அறிவுரையாக அனைத்துத் தோழர்களும் ஏற்க வேண்டும். ஏற்பீர்கள் என நம்புகிறோம். என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா அறிக்கையில் தெரிவித்துள்ளார்.