சீனத் தலைவரை வரவேற்கிறோம் – இரா.முத்தரசன்

சீனப் பிரதமர் ஜி ஜின் பிங்க இந்தியப் பிரதமரைச் சந்திக்கும் நிகழ்வு, தமிழ்நாட்டின் சிற்ப கலைத்திறனை எடுத்துக்காட்டும் எழில்மிகு மாமல்லபுரத்தில் நடைபெற வுள்ளது. தமிழ்நாட்டுக்கும், சீனத்துக்கும் இடையிலான நட்புறவு மிகப் பழமை யானது. கடல் கடந்த வாணிபமும், பண்பாட்டுப் பரிமாற்றமும் நெருக்கமான உறவை ஏற்படுத்தியிருந்தன. சீனயாத்திரிகரான யுவான் சுவாங் பயணக் குறிப்புகள் பண்டைய தமிழகத்தின் சிறப்புக்களைப் பதிவு செய்திருக்கின்றன. வளர்ச்சி யடையாத விவசாய நாடாகத் திகழ்ந்த சீனநாட்டை, மாசேதுங் தலைமையில் நடந்த கம்யூனிஸ்ட் புரட்சி மாற்றியமைத்தது. உலக சோஷலிச நாடுகளில் ஏற்பட்ட தளர்வுக்குப் பின், அமெரிக்கா உலகை தனது தனி ஆளுமைக்குள் கொண்டுவர முயற்சித்தது. சீனாவும் தனது சோஷலிஸக் கட்டமைப்பை மாற்றிக் கொள்ளாம லேயே, சந்தைப் போட்டியில் இறங்குவதற்கு ஏற்பத் தன்னைத் தகவமைத்துக் கொண்டது. ஆயுதங்களால் மோதிக் கொள்ளாமல் வணிக மோதலின் மூலம் மேலாதிக்கத்தை நிலைநாட்ட அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் காட் ஒப்பந்தம், உலக வர்த்தகக் கழகம் ஆகியவற்றை உலக நாடுகள் மீது திணித்தன.

மற்றநாடுகளுக்காக விரித்த வலையில் அமெரிக்காவே சிக்கிக் கொண்டுள்ளது. வணிகப் போரில் தான் தொலைந்துவிடாமல் தப்பித்துக் கொள்ள உலகவர்த்தகம் கழகத்திலிருந்தே வெளியேறி, தன்னைப் பாதுகாத்துக் கொள்வது குறித்து இன்று அமெரிக்கா ஆலோசனை செய்கிறது. ஆதிக்கத்தைத் தகர்த்து அச்சநிலைக்கு அதை ஆட்படுத்திய பெருமை சீனாவையே சாரும். அது தனது அளப்பறிய ஆற்றலால் ஏராளமான பண்டங்களை உற்பத்தி செய்து, அமெரிக்கச் சந்தையில் குவித்தது. உலகமே பொருளாதார நெருக்கடிக்குள் ஆழ்ந்து கிடக்கும் நிலையில், ஒரு புதிய பொருளாதார முறைமையை உருவாக்கும் சூழலை இந்தியாவும், சீனாவும் சேர்ந்து ஏற்படுத்த முடியும். இந்தியாவை விட அதிக மக்கள் தொகை கொண்ட சீனம், தனது மக்களுக்கு வேலையின்மை, பட்டினி, பசி, கடன்கள் இல்லாத வாழ்க்கையை அளித்திருக்கிறது. அதனிடமிருந்து இந்தியா கற்றுக் கொள்வதற்கு நிறைய விஷ யங்கள் இருக்கின்றன. இந்தியரும், சீனரும் சகோதரர்கள் என்ற முழக்கம் இருநாடுகளுக்கும் புதிதல்ல. சீனா நமக்கு நெருக்கடி கொடுக்கும் என அச்சுறுத் தியே மேலைநாடுகள் பக்கம் நெருக்கம் ஏற்படுத்தப்பட்டது. அதனால் இன்று நமது நாடு பாதிப்புக்குத்தான் உள்ளாகி இருக்கிறது. இந்தியா தனது நட்புறவு நாடு, இருநாட்டு நலன்களும் ஒருசேரப் பாதுகாக்கப்படும் என்ற உறுதியை சீனா வழங்க வேண்டும். இந்த இருநாடுகளின் கூட்டுறவில் ஒரு புதிய உலக முறைமை உருவெடுக்க வேண்டும். பேச்சுவார்த்தை நடத்த தமிழநாட்டுக்கு வருகை தரும் சீனப் பிரதமர் ஜி ஜின் பிங் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு நெஞ்சார வரவேற்கிறது.
அவர்களது வரவு நல்வரவாகுக! இந்திய-சீன நட்புறவு ஓங்குக! உலக அமைதி நிலைபெறுக!