டிஜிட்டல் இடைவெளியை இணைக்கும் சமமான கல்வி தேவை – குடியரசுத் துணைத் தலைவர்

ஜூன் 30, 2020. உலக அளவிலான தொடக்கக் கல்வியையும் சமத்துவமான இடைநிலை மற்றும் உயர்நிலைக் கல்வியையும் அடையும் வகையில் டிஜிட்டல் இடைவெளியைப் போக்க வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் திரு. எம். வெங்கைய நாயுடு வலியுறுத்தினார்.

“கல்வியின் எதிர்காலம் – ஒன்பது பெரிய போக்குகள்” என்ற நூலை அவர் காணொளிக் காட்சி வழியாக வெளியிட்டுப் பேசினார். மத்திய மாநில அரசுகளின் முயற்சியில் லாப நோக்கின்றி இயங்கும் ஐசிடி அகாதெமி (ICT Academy) இந்த நூலை பிரசுரித்துள்ளது. குடியரசுத் துணைத் தலைவர் பேச்சு:

தொழில்நுட்பம் புதிய புதிய வழிவகைகளைக் காண்பதற்கான கதவுகளைத் திறந்து விடுகிறது. அதே சமயம் நம் சமுதாயத்தில் மிகப் பெரிய டிஜிட்டல் இடைவெளி இருப்பதையும் நமக்கு உணர்த்துகிறது. தொழில்நுட்பம் என்பது எல்லோருக்கும், எப்போதும் கிடைக்கும் வகையில் அமைந்திருக்க வேண்டும். டிஜிட்டல் கருவிகளைப் பயன்படுத்தாத இயலாத சூழ்நிலையில் பல குழந்தைகள் உள்ளன. இந்த இடைவெளியைப் போக்க நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது பொது முடக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் ஆன்லைன் வழியாகக் கல்வி கற்பதில் பல குழந்தைகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். தற்போதைய வழிமுறையிலிருந்து ஆன்லைன் கல்வி முறைக்கு மாறுவதற்கு பல குழந்தைகளைக் கைப்பிடித்து அழைத்துச் செல்ல வேண்டியிருக்கிறது. ஆன்லைன் வழியாகக் கல்வி பயில்வதற்காக அவர்களுக்கு போதிய பயிற்சியும் தேவைப்படுகிறது.
இந்தியாவில் உள்ள பல பெற்றோர்களுக்கு டிஜிட்டல் வசதியில்லை. இந்த இடைவெளியை நீக்குவதற்கான சவால் அரிதான செயல் மட்டுமின்றி, சிக்கலானதும் கூட. இந்நிலையில், தனியார் நிறுவனங்கள், குறிப்பாக தொழில்நுட்ப நிறுவனங்கள் சூழலுக்கு ஏற்ப மலிவான விலையில் கற்பவர்களின் தேவைக்கு ஏற்ப பொருள்களை உற்பத்தி செய்ய வேண்டும். இது நமது குழந்தைகளுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை அமைத்துத் தருவதற்கும் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கும் முக்கிய பங்களிப்பைச் செலுத்துவதற்கு இதுதான் உங்களுக்கான தருணம்” – இவ்வாறு குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு பேசினார்.