தமிழ்நாட்டில் 13134 பயனாளிகளுக்கு ரூ 47 கோடி வழங்கியுள்ளது சிறுபான்மையினர் மேம்பாட்டு நிதிநிறுவனம்

திருச்சி, ஜூலை13, 2020. இந்த ஆண்டு மார்ச் வரை தமிழ்நாட்டில் 13134 பயனாளிகளுக்கு ரூ.47 கோடியை தேசிய சிறுபான்மையினர் மேம்பாடு மற்றும் நிதி நிறுவனம் வழங்கியுள்ளது. தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் 1134 பயனாளிகளுக்கு ரூ 17 கோடி கடனும், குறு கடன்
திட்டத்தின் கீழ் மாநிலத்தில் 12,000 பயனாளிகளுக்கு ரூ 30 கோடியும் வழங்கப்பட்டது. கோவிட்-19 பெருந்தொற்று பொதுமுடக்கத்தால் சிறுபான்மை சமுதாயத்தினர் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்தக் கடன் உதவி அவர்களுக்கு ஒரு வரமாக அமைந்துள்ளது. இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், சமணர்கள் மற்றும் பார்சிகள் சிறுபான்மை சமுதாயத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். தற்சமயம், ஊரகப் பகுதிகளில் ஆண்டு வருமானம் ரூ 98,000 வரை இருக்கும் குடும்பங்களும், நகர்ப்புறங்களில் ரூ 1,20,000 வரை இருப்பவர்களும் தேசிய சிறுபான்மையினர் மேம்பாடு மற்றும் நிதி நிறுவனத்தின் திட்டங்களுக்குத் தகுதியுடைவர்கள் ஆவர்கள். இந்தியா முழுவதிலும் உள்ள 15 சிறுபான்மையினர் மேம்பாடு நிதி நிறுவனங்கள் உட்பட 37 செயல்பாட்டு முகமைகள் தேசிய சிறுபான்மையினர் மேம்பாடு மற்றும் நிதி நிறுவனத்துக்காக உள்ளன. பொருளாதார சாத்தியமுள்ள திட்டங்களுக்காக சிறுபான்மை சமுதாயங்களை சேர்ந்த தனிநபர்களுக்கு தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் கடன்களை வழங்குகிறது. தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள் மூலம் இந்தக் கடன்கள் வழங்கப்படுகின்றன.

மத்திய அரசின் ஆதரவுடன் ஐந்து திட்டங்களை தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் செயல்படுத்தி வருவதாக திருச்சிராப்பள்ளி சிறுபான்மையினர் நலன் அலுவலர் திரு. ஆர். வைத்தியநாதன் கூறினார். ரூ 20 லட்சம் முதல் ரூ 30 லட்சம் வரையிலானக் கடன்கள் சிறுபான்மை சமுதாய மக்களுக்கு தனிநபர் காலக் கடன் திட்டத்தின் கீழ் வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார். ஆறு முதல் எட்டு சதவீத வட்டி இந்தக் கடனுக்கு வசூலிக்கப்படுகிறது. திரும்பச் செலுத்தும் காலம் ஐந்து வருடங்கள் ஆகும். சிறுபான்மை சமுதாய மக்களின் சுய உதவிக் குழுக்களுக்கான குறு கடன் இரண்டாவது திட்டமாகும். சுய உதவிக் குழுவுக்கு ரூ 15 லட்சம் வரை கடன் இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. சுய உதவிக் குழுவில் உள்ள தனி நபர்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் ரூ 1.5 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. தாட்கோ வங்கியின் மூலம் வழங்கப்படும் வாகனக் கடன் மூன்றாவது திட்டமாகும். சிறுபான்மைச் சமுதாயங்களை சேர்ந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்விக் கடன் நான்காவது திட்டமாகும். இந்தியா மற்றும் வெளிநாட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழங்களில் படிக்கும் மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்கப்படுகிறது. தொழில்முறை படிப்புகளுக்கு 3 சதவீத வட்டியுடன் ரூ 15 லட்சம் கல்விக் கடனும், வெளிநாட்டுப் படிப்புகளுக்கு ரூ 20 லட்சமும் வழங்கப்படுகிறது. திரும்பச் செலுத்தும் காலம் 5 ஆண்டுகளாகவும், படிப்பை முடித்த பின்னர் தடைக் காலம் 6 மாதங்களாகவும் இருக்கும். இரண்டு கறவை மாடுகளை வாங்க ஆவின் மூலம் ரூ 50,000 கடன் வழங்கப்படுகிறது. கலப்பின ஒரு ஜோடி முர்ரா மாடுகள் வாங்க இந்தத் திட்டத்தின் கீழ் ரூ 70,000 வழங்கப்படுகிறது.

தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசின் பல்வேறு திட்டங்களை சிறுபான்மை சமுதாய மக்கள் பயன்படுத்துகின்றனர். பிரதமரின் ஜன் தன் திட்டத்தின் கீழ் தான் ரூ 500-ஐ பெறுவதாக கரூர் தண்ணீர்பள்ளி கிராமத்தை சேர்ந்த திருமதி. ரோசன் பீவி கூறினார். சிறுபான்மையினர் கடன் திட்டங்கள் உட்பட பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களுக்காக அரசுக்கு நன்றி தெரிவித்த அவர், பொதுமுடக்கத்தின் போது இன்னும் அதிகமாக நிதி உதவியை வழங்குமாறு அரசுக்கு கோரிக்கை வைத்தார். கோவிட்-19 பொதுமுடக்கத்தின் போது நிதி உதவி அளித்ததற்காக கரூரைச் சேர்ந்த திருமதி. ராஷியா பேகமும் அரசுக்கு நன்றி தெரிவித்தார். சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த மக்களுக்கென பிரத்யேகமாக சுய உதவிக் குழுவின் கீழ் வழங்கப்படும் சிறப்புக் கடனை சிறுபான்மை சமுதாயங்களைச் சேர்ந்த பெண்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். முழுமையாக முன்னேறினால் மட்டுமே ஒரு நாடு வளர்ச்சி அடையும் என்பதால் அனைத்து சமுதாயங்களை உள்ளடக்கிய வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்துகிறது.