மருத்துவ படிப்புகளில் ஓபிசி இடஒதுக்கீட்டை அமலாக்க உடனடியாக சட்டமியற்றுக – சு வெங்கடேசன் எம்.பி

நாடாளுமன்ற மக்களவையில் மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து மத்திய அரசின் நிலை என்ன என்று கேள்வியெழுப்பியிருந் தேன்.  இதற்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் அஸ்வினிகுமார் சௌபே ஜூலை 10-ஆம் தேதி அனுப்பியுள்ள பதில் கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அகில இந்திய இட ஒதுக்கீடு முறைமை 1986 ல் தினேஷ் குமார் & இதரர் (எ) மோதிலால் நேரு மருத்துவ கல்லூரி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் 2007 வரை கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இட ஒதுக்கீடு இல்லாமல் தொடர்ந்தது. 2007 ஜனவரி 31 அன்று அபய் நாத் & இதரர் (எ) டெல்லி பல்கலைக் கழகம் & இதரர் வழக்கில் (ரிட் மனு எண் 138/2006) உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் 2007-08 கல்வியாண்டில் இருந்து எஸ்.சி பிரிவினர்க்கு 15% ம், எஸ்.டி பிரிவினருக்கு 7.5 % சதவீதமும் வழங்கப்பட்டது. மேலும் 2006 மத்திய அரசு கல்வி நிறுவனங்கள் (இட ஒதுக்கீடு & அனுமதி) சட்டத்தின் படி ஓ.பி.சி மாணவர்களுக்கு நாடு முழுமையும் உள்ள மத்திய கல்வி நிறுவனங் களில் 27% இட ஒதுக்கீடு மத்திய ஒதுக்கீட்டு இடங்களில் வழங்கப்பட்டது. மத்திய கல்வி நிறு வனங்கள் அல்லாத அகில இந்திய ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களில் ஓ.பி.சி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குகிற பிரச்சினை உச்ச நீதி மன்றத்தின் முன்பு ரிட் மனு 596/2015, சலோனி குமார் & இதரர் (எ) சுகாதார சேவை பொது இயக்குனரகம் வழக்காக நிலுவையில் உள்ளது.
இவ்வாறு அமைச்சர் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் அகில இந்திய ஒதுக்கீட்டு மருத்துவ படிப்பு இடங்களில் ஒபிசி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வாய்ப் பில்லை என்பதே அமைச்சர் பதிலின் சாராம்சம் ஆகும். சென்னை உயர்நீதிமன்றத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் தமிழக அரசும் தொடுத்த வழக்கில் உயர்நீதிமன்றம் திங்களன்று தீர்ப்பளித் துள்ளது.

தமிழகத்தில் மருத்துவ இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து உச்சநீதிமன்றம்தான் முடிவெடுக்க வேண்டுமென்ற இந்திய மருத்துவக் கவுன்சிலின் வாதத்தை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மேலும், தற்போதைய நிலையை கருத்தில்கொண்டு மருத்துவப்படிப்பில் ஒபிசி பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு சட்டமியற்றலாம் எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது. மத்திய கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும்போது மாநிலங்கள் மத்திய தொகுப்பிற்கு வழங்கும் இடங்களில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த முடியாது என்பதை ஏற்க முடியாது எனவும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. ஒபிசி இட ஒதுக்கீடு வழங்க சட்டரீதியாகவோ, அரசியலமைப்பு ரீதியாகவோ எந்தத் தடையும் இல்லை தெளிவுபடுத்தியுள்ள உயர்நீதிமன்றம் இது தொடர்பாக மத்திய அரசு மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தியுள்ளது. எனவே மத்திய அரசு தன்னுடைய பிடிவாத நிலையை தளர்த்தி மருத்துவப் படிப்புகளில் மத்திய தொகுப்பிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்க சட்டமியற்ற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.