ரம்யா நம்பீசனின் ‘சூரிய அஸ்தமனக் குறிப்பேடுகள்’!

வெற்றிகரமான நடிகையாக வலம் வரும் ரம்யா நம்பீசன் சைபர் வெளியில் துவக்கியிருக்கும் ‘ரம்யா நம்பீசன் என்கோர்’ என்ற இணையதள நிகழ்ச்சி பரவலான கவனத்தை ஈர்த்து பலரது பாராட்டுக்களை தொடர்ந்து பெற்று வருகிறது. தன் திறமைகளை கலை வடிவத்தின் பல்வேறு தளங்களிலும் வெளிப்படுத்திவரும் ரம்யா, இன்னும் பல புதிய முயற்சிகளிலும் முனைப்புடன் ஈடுபடத் தொடங்கியிருக்கிறார். தற்போது இயக்குநர் பத்ரி வெங்கடேஷுடன் இணைந்து ரம்யா நம்பீசனின் சூரிய அஸ்தமனக் குறிப்பேடுகள் (Sunset Diary of Ramya Nambessan) என்ற சிறிய தொடர் நிகழ்ச்சி ஒன்றை வழங்குகிறார். எல்லோரும் விரும்பிப் பார்க்கும் வகையில், மாறுபட்ட உள்ளடக்கம் கொண்ட இவ்வகை நிகழ்ச்சி எதுவும் இணையத்தில் இதுவரை வந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சமூக ஊடகங்களின் இரைச்சல்களில் நம்மைத் தொலைத்திருப்பதை மறுபரிசீலனை செய்வதுடன், மகத்தான தருணங்களை நமக்கு வழங்கும் மனிதர்கள்பால் நமது கவனத்தை திருப்புவது பற்றிய நிகழ்ச்சி இது.

இந்த சிறிய தொடர் நிகழ்ச்சியை எழுதியிருக்கும் பத்ரி வெங்கடேஷ் கூறியதாவது…

“நம் மனதை செப்பனிடும் விஷயங்களை நாம் கற்றுக் கொள்கிறோம், அல்லது கற்றுக் கொள்ளத் தவறி விடுகிறோம். ஒவ்வொரு நிகழ்வின் மூலமும் வாழ்க்கை நமக்கு ஆழமான பாடத்தைக் கற்றுத் தருகிறது. சுற்றுச் சூழலை நான் புரிந்து கொண்ட விதத்தை, இந்த சிறிய தொடர் பதிவு செய்கிறது. என்னால் எழுதப்பட்டு ரம்யா நம்பீசனால் வழங்கப்படும் இந்த எளிய நிகழ்ச்சியில் நீங்களும் பங்கு கொள்ளுங்கள்”

மேலும் நிகழ்ச்சி குறித்து விவரித்து வழங்கும் ரம்யா நம்பீசன்  தெரிவித்ததாவது… “நம்மைச் சுற்றியுள்ள அற்புதமான மனிதர்களால் உருவாக்கப்பட்ட அழகான தருணங்களை, நாம் பல்வேறு அன்றாடப் பணிகளுக்கிடையே கவனிக்காமல் இருந்து வருகிறோம். இணைய உலகின் பக்கம் திரும்பி நமது பெரும்பாலான நேரத்தை அதில் செலவிடுகிறோம். இதை நாம் வருங்காலத்தில்தான் உணர்வோம். இணையங்களின் நம்பகத் தன்மையையும் முன்பு இருந்ததைப்போல் இல்லை. இந்த அடிப்படையில் உருவாக்கப் படுவதுதான் இந்த சிறிய தொடர். இந்தத் தொடரைப் பார்ப்பவர்கள் இதில் தங்களை அடையாளப் படுத்திக்கொண்டு, தங்களைத் தாங்களே புதுப்பித்துக் கொள்வார்கள் என நம்புகிறேன். என்னுடைய யூ ட்யூப் சேனலில் அழகியலுடன் கூடிய இதுபோன்ற சுவையான நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து தருவேன்” என்றார் ரம்யா நம்பீசன். ரியோ ராஜ் பிரதான வேடத்தில் நடிக்கும் ‘பிளான் பண்ணிப் பண்ணனும்’ படத்தில் தற்போது ரம்யா நம்பீசனும் இயக்குநர் பத்ரி வெங்கடேஷும் இணைந்து பணியாற்றி வருகின்றனர். இப்படம் இந்த ஆண்டு திரைக்கு வரவிருப்பது குறிப்பிடத் தக்கது.