குருஷேத்திரம் விமர்சனம் – மதன்

மகாபாரத புராணக் கதையில் கர்ணணின் மீது துரியோதனன் வைத்திருக்கும் கலங்கமற்ற நட்பை ஆழப்படுத்தி சொல்லிருக்கின்ற படம் குருஷேத்திரம். இதுவரை நாம் பார்த்த மகாபாரத திரைப்படக்கள் ஆனாலும் சரி, தொலைக்காட்சி தொடராக இருந்தாலும் சரி, பாண்டவர்களை நல்லவர்களாகவும், கெளரவர்களை கேட்டவர்களாக சித்தரித்து காட்டியிருப்பார்கள். இந்த குருஷேத்திரப் படத்தில் பாண்டவர்களின் பிறப்பு கீழ்த்தரமானது என்றும், திரெளபதி ஐவர்களுக்கும் மனைவியாக இருப்பதையும் துரியோதனனின் வாயிலாக சொல்ல வைத்திருக்கின்ற காட்சி பிரமிக்க வைக்கிறது. வில் வித்தையில் அர்ஜூனன்தான் சிறந்தவன் என்று துரோணாச்சாரியார் கூறும்போது, அதை இடமறித்து பார்வையாளர்களின் கூட்டத்திலிருந்த கர்ணன் என் வில்வித்தையையும் கண்ட பிறகுதான் யார் சிறந்தவர்கள் என்று தீர்மானிக்க வேண்டும் என்று கூறிகிறார். அர்ஜூனனின் வில்வித்தையைவிட கர்ணணின் வில்வித்தை சிறப்பாக இருப்பதை பார்த்த துரோணாச்சாரியார், நீ எந்த குலத்தை சேர்ந்தவன்? என்று கர்ணனைப் பார்த்து கேட்கிறார். நான் சூத குலத்தை சேர்ந்தவன் என்று கர்ணன் பதில் சொல்ல, உயர்ந்த சத்திரிய குலத்தில் பிறந்த அர்ஜூனனை எதிர்க்க சூத குலத்தில் பிறந்த உனக்கு தகுதி இல்லை. மண்டபத்தைவிட்டு வெளியேறு என்று கூறுகிறார் துரோணாச்சாரியார். இதைக்கேட்ட துரியோதணன், பீஷ்மர், துரோணாச்சாரியார், விதுரன் ஆகியோர் யாருக்கு பிறந்தார்கள் என்று பட்டியலிட்டு கூறுகின்ற காட்சியின் மூலம் உயர்ந்தவர்களாக சித்தரிக்கப்பட்டிருப்பவர்களின் தாய்மார்கள் யார்? எப்படி பிறந்தார்கள்? என்பதை நமக்கு விளங்க வைக்கிறார் இயக்குநர்.

யுத்த விதிமுறைகளுக்கு எதிராகத்தான் குருஷேத்திரப்போர் நடந்தது என்றும் இயக்குநர் வாயிலாக நமக்கு புலப்படுகிறது. அஸ்வத்தாமன் இறந்து விட்டான் என “தர்மவான்” என்று புகழப்படுகின்ற தர்மன், போர்களத்தில் பொய் உரைக்கின்றார். பொய்யுரைக்கச் சொன்னவர் கிருஷ்ண பரம்மாத்மா. யுத்தகளத்தில் மகன் அஸ்வத்தாமன் இறந்துவிட்டான் என்று தர்மன் கூறியதால் அதை நம்பி துக்கத்தில் ஆழ்ந்து விடுகிறார் தந்தை துரோணாச்சாரியார். ஆயுதம் இல்லாமல் இருக்கும் அந்த நேரத்தை பயன்படுத்தி துரோணாச்சாரியாரின் தலையை வெட்டி விடுகிறார்கள். அம்புகளை கொட்டுகின்ற மழைபோல் விடாமல் எய்து கொண்டிருக்கும் அபுமன்யூவின் வில்லை மறைந்திருந்து ஒடிக்கின்ற கர்ணனின் செயல். இதுவெல்லாம் யுத்த விதிமுறைகளுக்கு எதிரானது என்றாலும், போர்களத்தில் எதிரியை கொல்ல வழிமுறை தேவையில்லை என்பதை உணர்த்துகிறார் பரமாத்மா.

பஞ்சபாண்டவர்கள் தனது சிற்றப்பாவான பாண்டுவுக்கு பிறந்தவர்கள் இல்லை. அவர்களை பாண்டுவின் மனைவி குந்திதேவி தர்மதேவன் மூலம் தர்மனையும், இந்திரன் மூலம் அர்ஜூனனையும், வாயுதேவன் மூலம் பீமனையும் பெற்றெடுத்தார்கள். பாண்டுவுக்கு பிறக்காத அவர்களுக்கு ஏன் எனது ராஜ்யத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என்று துரியோதனன் உரிமை வழியில் வாதாடுவது மதிவழி நடப்பவர்களுக்கு சரியாகப்படும். ஆனால், விதி அதுவல்ல என்ற ஒரே வார்த்தைக்குள் இன்ப துன்பங்கள், தர்ம அதர்மங்கள் பொய் உரைத்தல் மெய் உரைத்தல் ஆக அத்தனையையும் தனக்குள் அடக்கிவிடுகிறது புராணங்கள் என்பதை அழகாக உணர்த்தியுள்ளார் இயக்குநர். நாகன்னா.

பெண்களை மானபங்கம் செய்வது இந்தக்காலத்தில் மட்டுமல்ல, அது புராணக்காலத்திலேயே நடந்திருக்கிறது என்பதை நிரூபிக்கும் காட்சிகள்தான் துச்சாதனன் திரெளபதியின் சேலையை உறுவும் காட்சி. இதற்கு பழிதீர்ப்பதுதான் குருஷேத்திரப்போர். இந்த படத்தில் கர்ணனின் மீது துரியோதணன் வைத்திருந்த கலப்படமற்ற நட்பின் அடையாளத்தை உச்சக்கட்ட காட்சியில் காண முடிகிறது.

இதில் துரியோதனாக தர்ஷனும், துச்சாதனனாக ரவி சேதான், தர்மனாக சஷி குமார், பீமனாக தனிஷ் அக்தர், அர்ஜூனனாக சோனு சூட், கர்ணனாக அர்ஜூனனும், திரௌபதியாக ஸ்நேகாவும் சகுனியாக ரவிசங்கரும் நடித்திருக்கிறார்கள்.

மொத்தத்தில் குருஷேத்திரபோர் மனித இயல்புக்குள் அடங்கிய தர்ம அதர்மங்கள் நிறைந்தது.