பின்தங்கிய சமூதத்தை சார்ந்தவர்கள் மருத்துவம் படிக்க இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் – பிரதமர் மோடிக்கு சோனியாகாந்தி கடிதம்

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் நடத்தும் மருத்துவ கல்வி நிறுவனங்களில் நீட் தேர்வு மூலம்  நிரப்பப்படும் அகில இந்திய ஒதுக்கீட்டில், பிற பின்தங்கிய வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டுள்ளதை  தங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகின்றேன். அகில இந்திய ஒதுக்கீட்டின்படி, எஸ்சி. பிரிவினருக்கு 15  சதவிகிதமும், எஸ்டி. பிரிவினருக்கு 7.5 சதவிகிதமும், பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு 10  சதவிகிதமும் மத்திய, மாநில, யூனியன் பிரதேசங்கள் நடத்தும் மருத்துவ கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு
வழங்கப்பட்டுள்ளது. எனினும், அகில இந்திய பிற பின்தங்கிய வகுப்பினர் அமைப்பின் தரவுகளின் படி, கடந்த  2017 ஆம் ஆண்டிலிருந்து மாநில மற்றும் யூனியன் பிரதேங்களில் உள்ள மருத்துவ கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டைப் பின்பற்றாததால், 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிற பின்தங்கிய வகுப்பு மாணவர்கள் அகில இந்திய ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்புகளில் சேரும் வாய்ப்பை இழந்துள்ளது தெரியவந்துள்ளது. அரசியல் சாசனத்தின் 93 ஆவது சட்ட திருத்தத்தின்படி, தனியார் கல்வி நிறுவனங்கள், அரசு உதவி அல்லது அரசு உதவி பெறாதா மாநிலங்களில் செயல்படும் கல்வி நிறுவனங்கள், சிறுபான்மை கல்வி நிறுவனங்களில், சமூக ரீதியாக அல்லது கல்வி ரீதியாக பின்தங்கியோர் அல்லது எஸ்.சி,எஸ்டி பிரிவின ருக்கு இட ஒதுக்கீடு வழங்க சிறப்பு பிரிவுகளின் படி வழி வகை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பிற பின்தங்கிய வகுப்பினருக்கு மருத்துவ கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டின் படி சேர அனுமதி மறுப்பது, 93 ஆவது அரசியல் சாசன திருத்தத்தின் முக்கிய சாராம்சத்தை மீறுவதாக உள்ளது. மேலும், பிற பின்தங்கிய வகுப்பினர் மருத்துவக் கல்வி பெறுவதற்கு முட்டுக்கட்டை போடுவதாகவும் உள்ளது. எனவே, சமத்துவம் மற்றும் சமூக நீதி நலனை கருத்தில் கொண்டு, மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் நடத்தும் மருத்துவ கல்வி நிறுவனங்கள் உட்பட மத்திய அரசின் மருத்துவ கல்வி நிறுவனங்களில், பிற பின்தங்கிய வகுப்பினருக்கு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் இட ஒதுக்கீட்டை நீட்டிக்குமாறு மத்திய அரசை நான் தீவிரமாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு பிரதமர் மோடிக்கு சோனியாகாந்தி கடிதம் எழுதியுள்ளார்.