முதலமைச்சர் மகளிடமே ரூ.34 ஆயிரம் ஆன்லைன் மோசடி

ஆன்லைன் வர்த்தக தளத்தில் பழைய சோபாவை விற்பனை செய்ய முயன்றபோது, இணையதள மோசடியாளரிடம் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதா ரூ.34 ஆயிரம் இழந்தது தெரியவந்துள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மகள் ஹர்ஷிதா கேஜ்ரிவால் பழைய சோபா ஒன்றை விற்பனை செய்ய ஆன்லைன் வர்த்தக தளத்தில் விளம்பர செய்து இருந்தார். அதனை பார்த்து ஒருவர் ஹர்ஷிதாவை தொடர்பு கொண்டு அந்த சோபாவை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளார். இதையடுத்து தொடர்ந்து நடந்த பேச்சு வார்த்தை யில் ரூ.34 ஆயிரத்துக்கு அந்த சோபாவை வாங்க அந்த நபர் சம்மதம் தெரிவித் துள்ளார். மேலும் ஹர்ஷிதா கேஜ்ரிவால் வங்கி கணக்கை உறுதி செய்வதற்காக முதலில் கொஞ்சம் பணத்தை அனுப்பினார். பின் கியூஆர் கோடை அனுப்பி அதனை ஸ்கேன் செய்து மீதமுள்ளத் தொகையை பெற்றுக் கொள்ளுமாறு அந்த நபர் ஹர்ஷிதாவிடம் தெரிவித்தார். ஹாஷிதாவும் அந்த கோடை ஸ்கேன் செய்துள்ளார். உடனே அவரது வங்கி கணக்கிலிருந்து ரூ.20 ஆயிரம் டெபிட் ஆகி விட்டது. இதனையடுத்து ஹர்ஷிதா அந்த நபரிடம் விளக்கம் கேட்டதற்கு அந்த நபர் மற்றொரு கியூஆர் கோடை அனுப்பி அதே மாதிரி செய்யும்படி ஹர்ஷிதாவிடம் அந்த நபர் தெரிவித் துள்ளார். உடனே ஹர்ஷிதாவும் அது மாதிரி செய்துள்ளார். இந்த முறை அவரது வங்கி கணக்கிலிருந்து ரூ.14 ஆயிரம் எடுக்கப்பட்டது. இதனையடுத்து தான் ஏமாற்றம் பட்டோம் என்பதை ஹர்ஷிதா உணர்ந்தார்.

உடனே ஹர்ஷிதா முதல்வர் இல்லத்துக்கு அருகே இருக்கும், டெல்லி சிவில் லைன் போலீஸ் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தார்ர். இது தொடர்பாக போலீசார் கூறுகையில், “ஹர்ஷிதா கொடுத்த புகார் அடிப்படையில் எப்.ஐ.ஆர். பதிவு செய்து விசாரணைநடத்தி வருகிறோம். சைபர் பிரிவில் ஹர்ஷிதாவிடம் பேசிய நபரின் செல்போன் எண் குறித்து விசாரித்து வருகிறோம்“ எனத் தெரிவித்தனர். டெல்லி முதல்வர் மகளையே ஆன்லைனில் மோசடி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.