மாநில உரிமைகளை பாதுகாத்து  அரண் அமைத்துள்ள உச்ச நீதிமன்றத் தீர்ப்பு – இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி வரவேற்கிறது – முத்தரசன்

ஒன்றிய அரசு அதிகாரத்தில் உள்ள பாஜக, கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர் மூலமாக பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருகின்றது. குறிப்பாக தமிழ்நாட்டில் ஆளுநர் பொறுப்பில் இருக்கும் திரு ஆர்.என்.ரவி, அவர் நியமனம் செய்யப்பட்ட ஆரம்ப நாளில் இருந்து, மக்களால் தேர்வு செய்து அமைத்துள்ள திமுக மாநில அரசுக்கு எதிராக ஏராளமாக இடையூறுகளையும், தடைகளையும் ஏற்படுத்தி வருகிறார். அரசியலமைப்பு சட்டத்தின்படி பதவிப் பிரமாணம் செய்து, ஆளுநர் பொறுப்பை ஏற்றுக் கொண்ட திரு ஆர்.என்.ரவி, அரசியலமைப்பு வழங்கியுள்ள  அவரது கடமைப் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தவில்லை.  மாறாக, அதிகார அத்துமீறலில் ஈடுபட்டு, தனக்கு வானளாவிய அதிகாரம் இருப்பதாக ஆணவக்கொடி பிடித்து ஆடி வந்தார்.  

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் மாண்புகளையும், மரபுகளையும் உடைத்து அவமதித்து வந்தார். சட்டமன்றப் பேரவை நிறைவேற்றிய ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பிய மசோதாக்களை கிடப்பில் போட்டு, மக்கள் நலனுக்கு எதிராக செயல்பட்டு வந்தார். பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர்கள் நியமனத்தில் தமிழ்நாடு அரசின் உரிமையை நிராகரித்து, தமிழகம் எதிர்த்து வரும் புதிய கல்விக் கொள்கையை குறுக்கு வழியில் திணித்து, செயல்படுத்தும் செயலில் ஈடுபட்டு வந்தார். ஆளுநரின் வரம்பற்ற, அதிகார அத்துமீறலை எதிர்த்து, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் உரிமை மனுக்களை தாக்கல் செய்து சட்டப் போராட்டத்தை நடத்தி வந்தது.

 (08.04.2025) உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பு மாநில உரிமைகளை நிலைநாட்டி, ஆளுநரின் அதிகார அத்துமீறல் நடவடிக்கைகளுக்கு சம்மட்டி அடி கொடுத்துள்ளது. அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 200-ன் படி செயல்பட வேண்டியவர் ஆளுநர். ஆனால், தமிழ்நாடு ஆளுநர் அரசியலமைப்பு வழங்கிய கடமைப் பொறுப்புகளை நிறைவேற்றத் தவறியுள்ளார். ஆளுநர் அமைச்சரவையின் முடிவுப்படி தான் செயல்பட வேண்டும். அவருக்கென தனி அதிகாரம் ஏதும் இல்லை. பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர் தலையீடு தேவையில்லை. அது மாநில அரசின் உரிமையாகும்.

தமிழ்நாடு சட்ட மன்றம் நிறைவேற்றிய பத்து மசோதாக்களை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது சட்டவிரோதமாகும். அந்த மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளிக்கிறது. அவைகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன. இனி வரும் காலங்களில் சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றி, அரசு அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது ஆளுநர் 30 நாட்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும். குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் மசோதாக்கள் எனில் 90 நாட்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு நல்ல அம்சங்கள் நிறைந்துள்ளன. இப்படி, தமிழ்நாட்டுக்கு மட்டும் அல்லாமல் அனைத்து மாநிலங்களும் உரிமைகளை பாதுகாத்துக் கொள்ள உச்ச நீதிமன்றம் பல வகைகளில் அரண் அமைத்துக் கொடுத்துள்ளது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க, அரசியல் வரலாற்றில் புதிய மைல் கல்லாக அமையும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, அதிகார அத்துமீறல் குற்றம் புரிந்துள்ள, அரசியலமைப்பு கடமை பொறுப்புகளை  நிறைவேற்றாமல் அலட்சியப்படுத்திய திரு ஆர்.என்.ரவியை தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என குடியரசுத் தலைவரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.