“வல்லமை” திரைப்பட விமர்சனம்

பிரேம்ஜி, திவதர்ஷினி, தீபா சங்கர், வழக்கு எண் முத்துராமன், சி.ஆர்.ரஜித், சூப்பர்குட் சுப்பிரமணி, சுப்பிரமணியன் மாதவன், விது, போர்வாள் திலீபன் ஆகியோர் நடிப்பில், கருப்பையா முருகன் தயாரித்து கதை வசனம் பாடல்கள் எழுதி இயக்கியிருக்கும் படம் “வல்லமை”. மனைவியை இழந்த பிரேம்ஜி தனது 13 வயது மகள் திவதர்ஷினியுடன் கிராமத்திலிருந்து பிழைப்பு தேடி சென்னைக்கு வருகிறார். அங்கு ஒரு ஆட்டோ ஓட்டுநரின் உதவியால் சுவரொட்டி பதாகை ஒட்டும் வேலையும், குடியிருக்க வாடகைக்கு சின்ன வீடும் கிடைக்கிறது. தனது மகளை அரசு பாடசாலையில் 8ஆம் வகுப்பில் சேர்த்து படிக்க வைக்கிறார். சில நாட்கள் கழித்து தனது மகள் திவதஷினி பருவ வயதை எட்டிவிட்டால் என்ற சந்தோஷத்தில் ஆலோசனை பெற பெண் மருத்துவர் தீபா சங்கரிடம் அழைத்து வருகிறார். பரிசோதித்த மருத்துவர், திவதர்ஷினி பருவ வயதை எட்டவில்லை மயக்க நிலையில் கற்பழிக்கப்பட்டிருக்கிறாள் என்று கூறுகிறார். பதறிப்போன பிரேம்ஜி மகளை சீரழித்தவன்  யார்? என்பதை கண்டுபிடித்து பழி தீர்த்தாரா? அல்லது வெளியே தெரிந்தால் மகளின் எதிர்காலம் வீணாகிப் போய்விடுமென்று விட்டுவிட்டாரா? என்பதுதான் படத்தின் கதை. கதையின் முடிவை அனைவரும் ஏற்றுக் கொண்டு கைத்தட்டி வரவேற்கும் முடிவாக சொல்லியிருக்கும் இயக்குநர் கருப்பையா முருகன் மிகவும் பாராட்டுதலுக்குறியவர். அருமையான முடிவை திரையில் காட்டியிருக்கிறார். பாதிக்கப்பட்டவர்கள் திருப்தியடைய வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு படத்தை தயாரித்திருக்கிறார். இதுவரை பிரேம்ஜியை ஒரு கலகலப்பான நகைச்சுவை நடிகராகத்தான் பார்த்திருப்போம். இன்னும் சொல்லப்போனால் விருந்து இலையில் ஓரமாக வைத்திருக்கும் ஊறுகாய் போலத்தான் பிரேம்ஜியை பார்த்திருப்போம். ஆனால் இப்படத்தில் விருந்து இலையில் வைக்கப்பட்டிருக்கும் அனைத்து பதார்த்தங்களும் பிரேம்ஜியாகத்தான் பார்க்க முடியும். தனக்குள் இருக்கும் யதார்த்தை நடிப்பின் மூலம் காட்டியிருக்கிறார். பாசமிகு தந்தையின் செயலை பிரேம்ஜியின் நடிப்பில் காணலாம். சிறுமி தீபதர்ஷினி திரைவானில் நட்சத்திரமாக ஜொலிக்க வாய்ப்பு அஹிகமிருக்கிறது. தீபா சங்கரின் அசால்ட்டான நடிப்பு பாராட்டுதலுக்குரியது. படத்தில் வழக்கு எண் முத்துராமன் கதாபாத்திரம் வீணடிக்கப்பட்டிருக்கிறது. இசையும் ஒளிப்பதிவும் படத்துக்கு பலம் சேர்த்திருக்கின்றன.