*போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த பெண் உட்பட 7 குற்றவாளிகளை கைது செய்து, 700 கிராம் மெத்தம்பெட்டமைன், 1 கைத்துப்பாக்கி மற்றும் 15 தோட்டாக்கள் 6 செல்போன்கள் பறிமுதல் செய்த, காவல்அதிகாரிகள் மற்றும் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் வெகுமதி வழங்கி பாராட்டினார். தமிழக முதலமைச்சர் தமிழ்நாட்டில் போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு 11.08.2023 அன்று “போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு” என்ற திட்டத்தை துவக்கி வைத்து, போதை பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின. பேரில், சென்னை பெருநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அனைத்து வகையான போதைப் பொருட்களை கடத்தி வருபவர்கள், பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்கள், மற்றும் பயன்படுத்துபவர்கள் மீதான கடுமையான நடவடிக்கை எடுப்பதற்காக சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு துவக்கப்பட்டு, போதை பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பிரிவினர், சென்னை பெருநகர காவல், நுண்ணறிவுப்பிரிவு இணை ஆணையாளர் ஜி.தர்மராஜன் மேற்பார்வையில், நுண்ணறிவுப்பிரிவு துணை ஆணையாளர் ஆர்.சக்திவேல், தலைமையில் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு உதவி ஆணையாளர், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் அடங்கிய குழுவினர் சென்னை பெருநகரம் முழுவதும் தீவிரமாக கண்காணித்து, உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கடந்த 04.06.2025 அன்று போதை பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு, சென்னை பெருநகர காவல், உதவி ஆணையாளர் மனோஜ்குமார் தலைமையிலான காவல்குழுவினர், ஆர்.கே நகர் காவல் குழுவினருடன் ஒருங்கிணைந்து, இரயில்வே யார்டு அருகே கண்காணித்து, மெத்தபெட்டமைன் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த 6 நபர்கள், முகமது அலி, வ/முகமது அசார், ரியாஸ், அமீனா ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.35 லட்சம் மதிப்புள்ள 700 கிராம் மெத்தம்பெட்டமைன், 1 கைத்துப்பாக்கி, 15 தோட்டாக்கள், 3 ஐபோன் உட்பட 6 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு, இதன் தொடர்ச்சியாக தலைமறைவு எதிரி 7.இளையராஜா என்பவரும் கடந்த 05.06.2025 அன்று கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார். மேற்கண்ட சிறப்பாக செயல்பட்ட உதவி ஆணையாளர் மனோஜ்குமார் மற்றும் காவல் ஆய்வாளர்கள் ஜானி செல்லப்பா, ராஜாசிங், உதவி ஆய்வாளர்கள் பொன் பாண்டியன், ஜெயகுமார், தலைமைக் காவலர்கள் சுந்தரமூர்த்தி முதல்நிலைக்காவலர் மணிகண்டன், காவலர்கள் ஹரி, சுதாகர், ராஜா, கண்ணன் பெண் காவலர் கோபிகா ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையர் ஆ.அருண், நேரில் அழைத்து, வெகுமதி வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியின் போது நுண்ணறிவுப்பிரிவு இணை ஆணையாளர் தர்மராஜன், மற்றும் துணை ஆணையாளர் சக்திவேல், உடனிருந்தனர்.