ஏ.எல்.உதயா த்கயாரிப்பில் பிரபு ஶ்ரீநிவாஸ் இயக்கத்தில் உதயா, அஜ்மல், யோகிபாபு, ஜான்விகா கலகேரி, ஷந்த்ஹிகா, பவன், தயா பன்னீர் செல்வம், ஶ்ரீதர், பிரபு ஶ்ரீநிவாஸ், பிரபு சாலமன், ஷங்கர்பாபு, ஜெயகுமார், தீபா, சுபத்ரா, டி.சிவா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “அக்யூஸ்ட்”. எம்.எல்.ஏ கொலை வழக்கு குற்றவாளியான உதயாவை சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ஒரு உதவி ஆய்வாளரும் கடைநிலைக் காவலர்கள் இருவரில் ஒருவரான அஜ்மலும் செல்கிறார்கள். வழியில் உதயாவை கொலை செய்ய கர்நாடகா விலுள்ள ஒரு ரவுடிக் கும்பல் துரத்துகிறது. அதிலிருந்து தப்பிக்க காவலர்கள் மூவரும் சேலம் செல்லும் அரசு பேருந்தில் மாறி செல்கிறார்கள். அந்த பேருந்தையும் ரவுடிக்கும்பல் துரத்தி பேருந்துக்குள் சென்று ஒர் காவலரை வெட்டிக் கொல்கிறார்கள். உதவி ஆய்வாளர் படுகாயம் அடைகிறார். பேருந்தும் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகிறது. அதிலிருந்து கைதி உதயாவை அஜ்மல் காப்பாற்றி சேலம் நீதிமன்றத்துக்கு இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்கிறார். இதை அறிந்த போலீஸ் உயரதிகாரி உதயாவை கொலை செய்ய ரவுடிகளுக்கு கட்டளையிடுகிறார். அதற்கு காவலர் அஜ்மல் தடையாக இருந்தால் அவரையும் கொலை செய்யும்படியும் கட்டளையிடுகிறார். அந்த ரவுடிக் கும்பலிலிருந்து உதயாவை அஜ்மல் காப்பாற்றி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினாரா?. உதயாவை கொல்ல உயர்காவல்த்துறை அதிகாரி ஏன் ரவுடிக்கும்பலுக்கு கட்டளையிடுகிறார்? உதயா யார்? என்பதுதான் கதை. ரவுடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், காதல், நகைச்சுவை காட்சிகளில் அசத்தியிருக்கும் உதயா, கணக்கு என்ற தனது கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருப்பதோடு, அளவாக நடித்து பார்வையாளர்களின் பாராட்டையும் பெற்று விடுகிறார். நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்தால் நிச்சயம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களின் பட்டியலில் உதயா இடம் பிடிப்பது உறுதி. கடைநிலை காவலராக நடித்திருக்கும் அஜ்மல், மிடுக்காகவும், துடுக்காகவும் நடித்திருக்கிறார். அவ்வபோது தனது வருங்கால மனைவியுடன் கைத்தொலைபேசியில் பயந்தும், பாசமாகவும் பேசும் காட்சிகளில் பிரமாதப்படுத்துகிறார். நாயகியாக நடித்திருக்கும் ஜான்விகா காளக்கேரி, எளிமையாக இருந்தாலும், நடிப்பு மற்றும் நடனத்தில் அசத்தியிருக்கிறார். அஜ்மலின் ஜோடியாக தொலைபேசியில் காதல் செய்யும் சாண்டிகாவின் நடிப்பு பாராட்டத்தக்கது. விடுதி உரிமையாளராக நடித்திரும்கும் யோகிபாபு வரும் காட்சிகள் அனைத்தும் நகைச்சுவை கலாட்டாதான். படத்தின் உச்சக்கட்ட காட்சியில் உதயா யார் என்பதை விவரிக்கும் இயக்குநர் பிரபு ஶ்ரீநிவாஸ் பார்வையாளர்களின் மனதில் பதிகிறார்.
“அக்யூஸ்ட்” திரைப்பட விமர்சனம்
