முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் (1.8.2025) தலைமைச் செயலகத்தில், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில் மாநிலத்தின் சுற்றுலாத் தலங்களை உலகத்தரத்தில் மேம்படுத்தும் நோக்கில், குண்டாறு அணை, ஏலகிரி, பூண்டி நீர்த்தேக்கம், முத்துக்குடா கடற்கரை மற்றும் மதுரை ஓட்டல் தமிழ்நாடு வளாகம் ஆகியவற்றில் 18 கோடியே 12 இலட்சம் ரூபாய் செலவில் முடிவுற்ற 5 புதியதிட்டப்பணிகளையும், அருங்காட்சியக துறை சார்பில், சென்னை, எழும்பூர், அரசு அருங்காட்சியக வளாகத்தில் 6 கோடியே 84 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய நிருவாகக் கட்டடத்தையும் திறந்து வைத்தார். ஏராளமான உள்ளூர் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துதல், அன்னியச் செலாவணியினை ஈட்டுதல் ஆகியவற்றில் சுற்றுலாத் துறை முக்கிய பங்காற்றுகிறது. இந்தியாவில் சிறப்பான சுற்றுலாத்தலங்கள் அதிகமுள்ள மாநிலங்களில் தமிழ்நாடு முக்கிய இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் பல்வகையான சுற்றுலாத் தலங்கள், பழம்பெரும் திருக்கோயில்கள், இயற்கை எழில் கொஞ்சும் மலைமற்றும் வனப்பகுதிகள், அழகிய கடற்கரைகள் போன்ற பல்வேறு சுற்றுலாத் தலங்கள் பலதரப்பட்ட சுற்றுலாப் பயணிகளையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. இத்தகைய பெரும் வாய்ப்புகள் அடங்கிய சுற்றுலாத்துறையை மேம்படுத்திட தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டின் சுற்றுலாத்தலங்களை மேம்படுத்தும் நோக்கில், தென்காசிமாவட்டம், குண்டாறு அணையில் 1 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள தளங்கள், வரவேற்பு மையம், உணவகக் கட்டடம் உள்ளிட்ட பல்வேறு பணிகள், திருப்பத்தூர் மாவட்டம். ஏலகிரியில் 2 கோடியே 98 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள நுழைவுப் பகுதி, உணவகக்கட்டடம் உள்ளிட்ட சுற்றுலா உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் திருவள்ளூர் மாவட்டம், பூண்டி நீர்த்தேக்கத்தில் 3 கோடியே 58 இலட்சம் ரூபாய் செலவில் சுற்றுலாத்தலமாக மாற்ற ஏதுவாககட்டப்பட்ட உணவகக் கட்டடம்; புதுக்கோட்டைமாவட்டம், முத்துக்குடா கடற்கரையில் 3 கோடியே 6 இலட்சம் ரூபாய் செலவில் சுற்றுலாத்தலமாக மாற்றிக்கட்டப்பட்ட பார்வையாளர்கள் கூடம், நிருவாகக்கட்டடம், வாகன நிறுத்துமிடம், நடைபாதை, படகுத்துறை உள்ளிட்ட பல்வேறு பணிகள், மதுரைமாவட்டம், ஓட்டல் தமிழ்நாடு வளாகத்தில் 7 கோடிரூபாய் செலவில் கட்டப்பட்ட விருந்து மண்டபக்கட்டடம், நவீன சமையலறைக் கட்டடம் மற்றும் பிறஉட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய புதிய உணவகக்கட்டடம்; என மொத்தம் 18 கோடியே 12 இலட்சம் ரூபாய் செலவில் முடிவுற்ற சுற்றுலா மேம்பாட்டு பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். சென்னை அரசு அருங்காட்சியக வளாகத்தில் உள்ள பாரம்பரியக் கட்டடங்களுடன் ஒத்திசையும் வகையில் முகப்புத் தோற்றம் நன்கு அழகுற வடிவமைக்கப்பட்டு, இயக்குநர், உதவி இயக்குநர்கள் மற்றும் அனைத்து காப்பாட்சியர்கள் மற்றும் அனைத்துக் அலுவலகப் பணியாளர்களுக்கான அறைகள், கூட்டஅரங்கு, பிறவசதிகளுடன் தரை மற்றும் முதல் தளத்துடன் ரூபாய் 6 கோடியே 84 இலட்சம் மதிப்பீட்டில் 10,532 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள புதிய நிருவாகக் கட்டடம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், சுற்றுலாத் துறை அமைச்சர் ஆர். ராஜேந்திரன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் க. மணிவாசன், அருங்காட்சியகங்கள் துறை இயக்குநர் கவிதா ராமு, சுற்றுலாத்துறை இயக்குநர் தா.கிறிஸ்துராஜ், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் பொது மேலாளர் ச.கவிதா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.