“காந்தி கண்ணாடி” திரைப்பட விமர்சனம்

ஜெய்கிரண் தயாரிப்பில் ஷெரீப் இயக்கத்தில் பாலா, பாலாஜி சக்திவேல், அர்ச்சனா, நமீதா கிருஷ்ணமூர்த்தி, மதன், அமுதவாணன், நிகிலா, அபிலாஷ், ஜீவா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “காந்தி கண்ணாடி”.  பாலா நிகழ்ச்சிகள் ஏற்பாடுகள் செய்யும் நிறுவனம் ஒன்றை சென்னையில் நடத்தி வருகிறார். அவரிடம் தங்களுக்கு 60ஆம் திருமணம் நடத்திதரும் பொறுப்பை ஒப்படைக்கிறார் காவலாளியான பாலாஜி சக்திவேல். மனைவி அர்ச்சனாவின் இளம்வயது ஆசைகளை இந்த 60 ஆம் திருமணத்தில் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற தனது ஆசையை பாலாவிடம் சொல்கிறார். அதற்கு ரூபாய் 50 லட்சம் செலவாகும் என்கிறார் பாலா. ஒரு நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரியும் பாலாஜி சக்திவேலுவிடம் அவ்வளவு பணம் கையிறுப்பு இல்லாததால், தனது சொந்த ஊரிலுள்ள நிலத்தை ரூபாய் 80 லட்சத்துக்கு விற்று பணத்துடன் சென்னைக்கு வருகிறார். 60 ஆம் திருமணத்துக்கான ஏற்பாடுகளை பாலா கவனிக்க தொடங்கும்போது, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவிக்கிறது. பாலாஜி சக்திவேலுவிடமிருக்கும் 80 லட்சமும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள்தான். அனைத்தும் செல்லாமல் போய்விடுகிறது. திருமணத்துக்கு தேவையான பணத்தை வங்கியில் மாற்றமுடியவில்லை. தன் மனைவி அர்ச்சனாவின் இளமைக்கால ஆசைப்படி பாலாஜி சக்திவேலுவின் 60 ஆம் கல்யாணம் நடந்ததா? இல்லையா? என்பதுதான் கதை.

சமூக ஆர்வலர் பாலா இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கிறார். கதாபாத்திரத்திற்குத்தகுந்தாாபோல் அமைதியாக நடித்து உச்சக்கட்ட காட்சியில் அனைவரின் மனதிலும் நிறைந்துவிட்டார். படம் முழுவதும் படபடப்புடன் காணப்படுகிறார். அதை இயக்குநர் கவனிக்க தவறியிருக்கிறார். மிக அழுத்தமான கதையை அச்சமின்றி திரையில் காட்டியிருக்கும் இயக்குனரின் துணிச்சலுக்கு சலியூட் அடிக்க தோன்றுகிறது. பிரபல இயக்குநரான பாலாஜி சக்திவேலும் அர்ச்சனாவும் தங்களது அனுபவ முதிர்ச்சியை அழகாக வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக உச்சக்கட்ட காட்சியில் பார்வையாளர்களின் கண்களில் நீர் ததும்ப செய்துவிட்டார் அர்ச்சனா. காதலனுக்கு விட்டுக்கொடுத்து வாழும் வாழ்வியல் குணத்துடன் நமீதா நடித்திருப்பது பாராட்டுதலுக்குறியது. இப்படத்தில் மற்றுமொரு கண்ணுக்குத் தெரியாத கதாநாயகன் வசனம்தான். “என்னுள் இருக்கும் ஆகச் சிறந்த ஒன்று நீதான்” என காதலுக்கு கரைகட்டிய வசனங்கள் பரவசப்படுத்துகின்றன.