260 கிராம் ஓஜீ கஞ்சா, 1.5 கிலோ கஞ்சா, 10 மில்லி கஞ்சா ஆயில், 8 எம்.டி.எம்.ஏ. மாத்திரைகள், 6 செல்போன்கள், பணம் ரூ.2.65 லட்சம் மற்றும் 1 இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண், உத்தரவின் பேரில், போதை பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு, சென்னை பெருநகரில் போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு குற்றவாளிகளையும், வலைபின்னல் தொடர்புகளில் உள்ளவர்களையும் கண்டறிந்து கைது செய்து, உரிய நடவடிக்கை எடுத்து வரப்படுகிறது. மேலும் நான்கு மண்டல காவல் இணை ஆணையாளர்கள், 12 காவல் மாவட்டங்களில் காவல் துணை ஆணையாளர்கள் தலைமையிலான போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் ஒருங்கிணைந்து போதைப்பொருட்கள் நடமாட்டத்தை கண்காணித்து முழுவதுமாக கட்டுப்படுத்திட பல்வேறு தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, போதை பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல்குழுவினர் மற்றும் சூளைமேடு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் ஒருங்கிணைந்து, சூளைமேடு, கமலா நேரு நகர் பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த 4 நபர்களை பிடித்து விசாரணை செய்து, அவர்களை சோதனை செய்தபோது, ஓஜீ கஞ்சா, கஞ்சா ஆயில் உள்ளிட்ட போதைப்பொருள்கள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதன்பேரில் சூளைமேடு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, போதைப்பொருள் வைத்திருந்த பிரதாப், ஜனார்த்தனன், பூர்ணசந்திரன், அப்துல் வாசிம் ஆகிய 4 நபர்களை கைது செய்தனர். விசாரணையில் பிரதாப் யூடியூப் சேனல் நடத்தி வருவதும், ஜனார்த்தனன் பெங்களூரில் தனியார் மென்பெருள் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும், பூர்ணசந்திரன் கல்லூரியில் பிபிஏ படித்து வருவதும், அப்துல் வாசிம் தனியார் உணவகத்தில் மேலாளராக உள்ளதும் தெரியவந்தது.
போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவின் தொடர் நடவடிக்கையால் சூளைமேடு பகுதியில் 4 நபர்கள் கைது
