தங்க முகையதீன்
————-
சு.வெங்கடேஸ்வரன் என்பவர் அளித்த புகாரில், தனது தாயார் யசோதா என்பவருக்குச் சொந்தமான நன்மங்கலம் கிராமத்தில் உள்ள 2,880 சதுர அடி கொண்ட நிலத்தை, அதே பகுதியைச் சேர்ந்த சாம்பசிவம் என்பவர் அபகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் புகார்தாரரின் மறைந்த தாயார் யசோதா என்பவர் உயிருடன் இருப்பது போல் ஒரு நபரைக்கொண்டு ஆள்மாறாட்டம் செய்தும், அரசு ஆவணங்களைப் போலியாகத் தயாரித்தும், சாம்பசிவம் தனது மருமகனின் நண்பரான சென்னை சிட்லபாக்கத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவருக்குப் பொது அதிகாரம் வழங்கி பின்னர், சாம்பசிவம் அந்த நிலத்தைத் தனது மனைவியின் பெயருக்குக் கிரைய ஆவணமாகப் பதிவு செய்து அனுபவித்து வந்துள்ளார் என்று அளித்த புகாரின் அடிப்படையில், தாம்பரம் மத்திய குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இவ்வழக்கின் எதிரிகளைக் கைது செய்ய தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் முனைவர் யு. அமல்ராஜ் உத்தரவுப்படி தனிப்படை அமைக்கப்பட்டு தேடியதில், எதிரிகளான சாம்பசிவம், ராமச்சந்திரன், ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து போலியாகத் தயாரிக்கப்பட்ட மூலப்பத்திரம், ராமச்சந்திரன் என்பவருக்கு வழங்கிய போலி பவர் ஆவணம் மற்றும் போலி கிரையப் பத்திரம் ஆகியவற்றை கைப்பற்றியும், எதிரிகளை சம்பந்தப்பட்ட நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர்ப்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இவ்வழக்கில் போலி ஆவணங்கள் தயாரிக்க மூளையாகச் செயல்பட்டவர்கள் மற்றும் இக்குற்றச் செயலுக்குத் துணையாக இருந்த நபர்கள் மீது மேற்கொண்டு கைது நடவடிக்கை தொடரும், என தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் எச்சரித்துள்ளார்.

