தாம்பரம் மாநகரக் காவல் ஆணையர் சஞ்சய் குமார் உத்தரவின் பேரில், குட்கா, பான் மசாலா போன்ற தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் சட்டவிரோத விற்பனை மற்றும் விநியோகத்தைத் தடுக்கும் பொருட்டு, தாம்பரம் மாவட்டக் காவல் துணை ஆணையர் கார்த்திகேயன் தலைமையில், அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இச்சிறப்பு அமலாக்க சோதனையில் 360 காவல் அதிகாரிகள், ஆளினர்கள் மற்றும் 16 உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் உள்ளடக்கிய 40 குழுக்கள் அமைக்கப்பட்டு, தாம்பரம் மாவட்டத்திற்கு உட்பட்ட 121 பள்ளிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர சோதனைகள் நடத்தப்பட்டன. இந்தச் சிறப்பு சோதனையின்போது மொத்தம் 254 கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டு, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களைச் சட்டவிரோதமாக வைத்திருத்தல் மற்றும் விற்பனை செய்ததில் தொடர்புடைய நபர்களுக்கு எதிராக 37 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 20 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். காவல் துறை மற்றும் உணவுப் பாதுகாப்பு துறையினரால், மேற்கொள்ளப்பட்ட இந்த அமலாக்க நடவடிக்கைகளின் விளைவாக, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை மற்றும் சேமிப்பு தொடர்பான சட்டரீதியான விதிமுறைகளை மீறிய 18 வணிக நிறுவனங்கள் உடனடியாக மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டன. இந்தச் சிறப்பு அமலாக்க சோதனைகளின் ஒரு பகுதியாக, (சிறுவர்கள்) புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கவும், பொதுச் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளைத் தீவிரமாகப் பின்பற்றுவதை உறுதி செய்யவும், பள்ளி மண்டலங்கள் மற்றும் இதர பாதிக்கப்படக்கூடிய பொது இடங்களில் காவல்துறையினர் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களுக்கு எதிராக தாம்பரம் மாநகரக் காவல் துறையின் தீவிர சோதனை
