இயக்குநர் ஜீத்து ஜோசப் கதையில் உருவாகியுள்ள நகைச்சுவை கலந்த காதல் குடும்பத் திரைப்படம் ‘சண்டக்காரி’. ஆர்.மாதேஷ் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள இப்படம், முன்னணி சினிமா தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்புடன் உருவாகியுள்ளது. காதல், நகைச்சுவை, மோதல், குடும்ப உணர்வுகள் என அனைத்து அம்சங்களையும் சரியான அளவில் கலந்து உருவாகியுள்ள ‘சண்டக்காரி’, ரசிகர்களுக்கு ஒரு முழுமையான பொழுதுபோக்கு விருந்தாக அமையும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். லண்டனில் இயங்கி வரும் முன்னணி சாப்ட்வேர் நிறுவனத்தை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை நகர்கிறது. ஸ்ரேயா, அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரியாக நடித்துள்ளார். அதே நிறுவனத்தில் பணிபுரியும் சாப்ட்வேர் ஊழியராக விமல் நடித்துள்ளார். பிரபு குணச்சித்திர வேடத்தில் சிறப்பாக நடித்துள்ளார். கே.ஆர். விஜயா, புன்னகை பூ கீதா, கிரேன் மனோகர் ஆகியோர் நடித்துள்ளார்கள்.******
அதிகாரி – ஊழியர் என இருவரும் எதிரெதிர் துருவங்களில் இருக்கும் நிலையில், இவர்களுக்கு இடையே உருவாகும் சம்பவங்களும், மோதல்களும், எதிர்பாராத திருப்பங்களும் கதையை சுவாரஸ்யமான பாதையில் நகர்த்துகின்றன. காதல், கோபம், ஈகோ என இருவருக்கும் இடையேயான ‘சண்டை’தான் படத்தின் மிகப்பெரிய சுவாரஸ்யமாக அமைந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.
இந்த இருவருக்கும் இடையில் மாட்டிக்கொண்டு தவிக்கும் கதாபாத்திரத்தில் சத்யன் நடித்துள்ளார். ஒவ்வொரு சூழ்நிலையிலும் விமல் – ஸ்ரேயா இடையேயான மோதலில் சிக்கிக்கொள்ளும் அவரது கதாபாத்திரம், படத்தின் காமெடி ஹைலைட்டுகளில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விமல் – ஸ்ரேயா – சத்யன் கூட்டணி திரையில் மிகப்பெரிய காமெடி கலாட்டாவை உருவாக்கியுள்ளதாக படக்குழுவினர் கூறுகின்றனர். இவர்களுடன் ‘கடலோர கவிதைகள்’ புகழ் ரேகா, ‘மஹதீரா’ வில்லன் நடிகர் தேவ் கில், உமா பத்மநாபன், மகாநதி சங்கர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

