தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை
மாவட்டத்தில் 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு 23.04.2026 அன்று
நடைபெற்று முடிவடைந்ததைத் தொடர்ந்து, டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர்,
திரு.வி.க.நகர், இராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி ஆகிய 5
சட்டமன்றத் தொகுதிகளின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இராணி மேரி
கல்லூரியிலும், பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், எழும்பூர், ஆயிரம் விளக்கு
மற்றும் அண்ணாநகர் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளின் மின்னணு வாக்குப்பதிவு
இயந்திரங்கள் லயோலா கல்லூரியிலும், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை,
தியாகராயநகர், மயிலாப்பூர் மற்றும் வேளச்சேரி ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் உள்ள பாதுகாப்பு அறைகளில் பாதுகாப்பாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள 3 வாக்கு எண்ணும் மையங்களில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளின் வெளியே 320 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, முதல் அடுக்கில் துணை இராணுவப் படையினரும், இரண்டாம் அடுக்கில் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினரும், மூன்றாம் அடுக்கில் ஆயுதப் படை மற்றும் சட்டம் ஒழுங்கு காவலர்களும் 3 சுழற்சி முறைகளில் 24 மணி நேரமும், கண்காணிக்கும் பணியில் 1,160 நபர்களும் ஈடுபட்டுள்ளனர். 28.04.2026 அன்று சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., பெருநகர சென்னை காவல் ஆணையாளர் அபின் தினேஷ் மோடக், இ.கா.ப., லயோலா
கல்லூரி மற்றும் இராணி மேரி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும்
மையங்களில் சட்டமன்றத் தொகுதி வாரியாக மேற்கொள்ளப்பட்டுள்ள
முன்னேற்பாட்டுப் பணிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்துப்
பார்வையிட்டு, ஆய்வு செய்தனர். இந்த ஆய்வுகளின்போது, பெருநகர சென்னை காவல் கூடுதல் ஆணையாளர் (தெற்கு)க.ச.நரேந்திரன் நாயர் இ.கா.ப., கிழக்கு மண்டல காவல் இணை ஆணையாளர் பண்டி கங்காதர், இ.கா.ப., தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

