கனடாவில் காலமான இலங்கையின் மூத்த ஊடகவியலாளர் சபேஸ்வரனின் மறைவிற்கு யாழ். ஊடக மன்றத்தின் இரங்கல்

இலங்கையில் நீண்ட காலம் அச்சு ஊடகங்களில் பணியாற்றி நன்கு அறியப்பெற்றவராக விளங்கிய ஆறுமுகம் சபேஸ்வரன் அவர்கள் கனடாவில் 29ம் திகதி புதன்கிழமை மாலை காலமானார். சிறிது காலம் உடல்நலன் குன்றியிருந்த அவர் சில நாட்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்ப்பட்ட நிலையில் புதன்கிழமை அன்று மரணத்தை தழுவினார். அன்னாரது மறைவையொட்டி யாழ்ப்பாண ஊடக மன்றம் பின்வரும் இரங்கல் அறிக்கையை அனுப்பிவைத்துள்ளது

நீண்ட கால ஊடக அனுபவத்தை அவர் கொண்டிருந்ததுடன் யாழ். பல்கலைக்கழக ஊடக வழங்கல் பயிற்சி மையத்தின் விரிவுரையாளராக கடமை புரிந்து பல ஊடகவியலாளர்களை உருவாக்கிய பெருமையும் அவரை சாரும். அத்துடன் தினக்குரல் பத்திரிகையின் முன்னைநாள் செய்தி ஆசிரியராகவும் சிறப்பாக பணியாற்றி பல விடயங்களை வெளிக்கொணர்ந்து சமூகத்துக்கு பல நல்ல விடயங்களை புரிந்ததில் அவரது பங்கு அளப்பரியது.

தமிழ் ஊடகத்துறையில் நீண்டகாலம் பணியாற்றிய அவர், ஊடகவியலாளர்களின் குரலாகவும், அவர்களின் உரிமைப் போராட்டங்களில் முன்னின்று உழைத்த ஒரு சிறந்த ஆளுமையுமாவார். அத்துடன் தமிழ் மக்களது உரிமைசார் போராட்டங்கள் தொடர்பான செய்திகளை நடுநிலையாக பிரசுரித்து தமிழ் மக்களின் போராட்டங்களுக்கு வலுச்சேர்த்ததில் அவரது பங்கு இன்றியமையாத ஒன்றாகும். அவரது உயிரும் உடலும் மறைந்தாலும் ஊடகத்துறையில் அவர் புரிந்த அர்ப்பணிப்புள்ள பணிகள் தமிழ் ஊடக வரலாற்றில் என்றும் அழியாத தடமாக நிலைத்திருக்கும்.

அன்னாரின் சாந்திக்காக இறைவனை பிரார்த்திப்பதோடு அவரை இழந்து வாடும் உறவுகளுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

இது இவ்வாறிருக்க கனடாவிலிருந்து சபேஸ்வரன் அவர்களது பூதவுடலை இலங்கைக்கு அனுப்பிவைக்க கனடாவில் வாழும் அவரது ஊடகத்துறை நண்பர்கள் ஏற்பாடுகளை கவனித்து வருவதாகவும் கனடா உதயன் ஆசிரியபீடத்திற்கு கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.