சிறை கைதி பாலாஜி மரணம் குறித்து காவல்த்துறை விளக்கம்

தங்க முகையதீன்

———–

தாம்பரம், ஜூலை.17- 12.07.2026 அன்று மதியம் 13.30 மணியளவில், சேலையூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அற்புதம் தலைமையிலான காவல் துறையினர் எம்.சி.சி. கல்லூரி முன்பு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில் ஒரு சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் அதிகளவில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அந்த சரக்கு ஆட்டோவில் பயணம் செய்த இருவர் ராமநாதன்,

பாலாஜி, ஆகியோரை காவலர்கள் கைது செய்தார்கள். ராமநாதனிடமிருந்து ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டது. மேலும், பறிமுதல் செய்யப்பட்ட தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் அனைத்தும் எடைபோடப்பட்டதில் அவற்றின் மொத்த எடை 506.15 கிலோ கிராம் என தெரியவந்தது. மேற்கண்ட தடைசெய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு, சேலையூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கின் விசாரணையை சேலையூர் காவல் நிலைய ஆய்வாளர் மேற்கொண்டு வருகிறார்.

இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட இரு குற்றவாளிகளும் 12.07.2026 அன்று தாம்பரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவத் தகுதிச் சான்று பெறப்பட்ட பின்னர் அன்றைய தினமே புழல் சிறையில் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனிடையே, மூன்று நாட்கள் கழித்து நீதிமன்றக் காவலில் இருந்த கைதி பாலாஜிக்கு 15.07.2026 அன்று காலை 06.40 மணியளவில் புழல் சிறையில் திடீரென மார்பு வலி ஏற்பட்டு, உடனடியாக காலை 07.10 மணியளவில் உரிய காவல் பாதுகாப்புடன் சிறை ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் காலை 07.45 மணியளவில் அவர் உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.” என்று தாம்பரம் காவல்த்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.