-தங்க முகையதீன்-
கருப்பசாமி தயாரிப்பில் சுகவனம் இயக்கத்தில் பரோட்டா முருகேசன், கார்த்திகேசன், சித்ரா நடராஜன், முருகன், சேனாபதி, விஜயன், விகோடன் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “ஒண்டிமுனியும் நல்லபாடனும்”. கோயம்புத்தூரை ஒட்டியுள்ள ஒரு அழகான கிராமத்தில் விஜயன் சிறுவனாக இருக்கும்போது கிணற்றில் தவறி விடுந்துவிடுகிறான். அவன் உயிர் பிழைக்க வேண்டி தான் வளர்த்துவரும் ஒரு கிடா குட்டியை ஒண்டிமுனி சாமிக்கு நேர்ச்சையாக்குகிறார். மகனும் உயிர்பிழைத்துவிடுகிறான், குட்டிக்கிடாவும் வளர்ந்து பெரியதாகிவிடுகிறது. இப்போது அந்த கிடாவை ஒண்டிமுனி சாமிக்கு வெட்டி படையலாக்க வேண்டும். ஆனால் அந்த கிராமத்திலுள்ள மேல்சாதியை சேர்ந்த பண்ணையார் கார்த்திகேசனுக்கும் முருகனுக்கும் கோவிலின் முதல் மரியாதையை யார் பெறுவது என்பதில் தீராத பகை ஏற்பட்டு கோயிலில் பூஜைகள் நடக்கக்கூடாது என்று கட்டளை போட்டுவிடுகிறார்கள். இந்த கட்டளையை மீறி தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பரோட்டா முருகேசனால் ஒண்டிமுனியன் சாமிக்கு கிடா வெட்டி படையல் போட்டாரா? இல்லையா? என்பதுதான் கதை. கடுகு சிறியது என்றாலும் காரம் பெரியது என்பதுபோல் கதை சிறியது என்றாலும் கதையின் கரு மிகப்பெரியது. குறைந்த செலவில் நிறைவான படத்தை கொடுத்திருக்கிறார் அக்குநர் சுகவனம். இவர் தனது கிராமத்தில் நடந்தேறிய உண்மைச் சம்பவங்களை ஒரு படமாக இல்லாமல் காவியப்படைப்பாக திரையில் காட்டி கைத்தட்டலை பெற்றிருக்கிறார். இக்கதையின் மொத்த பளுவையும் தன் தோளில் சுமந்து நடித்யிருக்கிறார் பரோட்டா முருகேசன். அவரின் அப்பாவியான தோற்றம் கதைக்கு நன்றாக துணை சேர்த்துள்ளது. கிராமத்தானின் வாழ்க்கை தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக காலில் மிதியடிகூட இல்லாமல் ஓடுவதிலும், ஏமாற்றத்தில் முகம் வாடுவதிலும் சந்தோஷ்த்தில் புன்னகையோடு முகம் பிரகாசிப்பதிலும் பரோட்டா முருகேசன் தனது உணர்வுகளை வெளிப்படுத்தி அபாரமாக நடித்துள்ளார். தேசிய விருதுக்கு தகுந்த நடிப்பை கொடுத்து உழைத்திருக்கிறார். இவருக்கு மகளாக நடித்திருக்கும் சித்ரா நடராஜனின் நடிப்பு கைத்தட்ட வைக்கிறது. தம்பி விஜயனுக்காக அவனின் காதலிக்கும், தந்தை பரோட்டா முருகேசனுக்கும் அறியுரைகூறும் காட்சிகள் அலாதியானது. கொங்கு தமிழ் அவரின் நாக்கில் நடனமாடுகிறது. ஒரு பவுன் தங்கநகைக்காக மனைவி சித்ராவை பிறந்த வீட்டுக்கு அனுப்பிய கணவன், மனைவியை பார்க்க வரும்போது அவனது விருப்பத்தை புரிந்துகொண்டு கணவனுக்கு இடம்கொடுக்கும் பெண்மையின் தன்மையை திரையில் காட்டியிருக்கும் சித்ரா நடராஜன் கிராமத்துப் பெண்ணாகவே மாறியிருக்கிறார். திரைவானில் அவருக்கொன்று ஒரு இடமிருக்கிறது. வாழ்த்துக்கள். சாராயத்துக்கு தொட்டுக்கொள்ள கோழி திருடும் விஜயன் காதலியின் ஆசைக்கு மோட்டார் சைக்கிள் வாங்க ஆட்டை விற்கும்போதும், பிறகு தந்தைக்காக அடங்கி நடக்கும் நல்லபிள்ளையாக நடிக்கும் காட்சியிலும் தனது தனித்துவத்தை காட்டியிருக்கிறார். படத்தின் நகைச்சுவைக்கு பண்ணையாரும் மாப்பிள்ளை கதாபாத்திரமும் துணை நிற்கின்றன. கிராமத்தின் அழகை படபிடித்த ஒளிப்பதிவாள்ர் தன் திறமை முழுவதையும் கொட்டியிருக்கிறார். படம் பார்ப்பவர்கள் கிராமத்துக்குள்ளேயே இருப்பதுபோல் உணரமுடிகிறது. நேர்த்தியான படபிடிப்பும் படத்தொகுப்பும் பாராட்டுதலுக்குறியது. மொத்தத்தில் இந்த படம் தேசிய விருதுக்கு தகுதியானது.

