“நீளிரா” திரைப்பட விமர்சனம்

கார்த்திகேயன் எஸ். தயாரிப்பில், சோமிதரன் இயக்கத்தில் நவீன் சந்திரா, சோமநாத், ரூபா கொடுவாயூர், கபிலா வேணு, விது, சிதுகுமரேசன், ரோஹிட் கொகடே ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “நீளிரா”. இலங்கை ராணுவத்துக்கும் ஈழ விடுதலைப் போராளிகள் இயக்கத்துக்கும் இனக்கலவரம் நடந்த 1988 ஆம் ஆண்டின் காலகட்டம். இருதரப்பினருக்குமிடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்த இந்திய ராணுவம் இலங்கைக்கு சென்றது. அமைதிக்கான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், இந்திய ராணுவமும் ஈழப் போராளி இயக்கமும் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்ட காலகட்டத்தில், ஒரு ஈழத் தமிழரின் வீட்டில் திருமணம் நடக்கவிருப்பதாக கதை சித்தரிக்கப்பட்டிருக்கிறது. வடகிழக்கு மாகாணமான யாழ்பாணத்தில் ஈழப்போராளிகளை தாக்குவதற்காக இந்திய ராணுவம், போராளிகள் தங்கி இருப்பதாக நினைத்து ஒரு வீட்டுக்குள் அத்துமீறி நுழைகிறார்கள். ஆனால் அந்த வீட்டுக்குள் இருப்பவர்கள் அந்த வீட்டில் நடக்கவிருக்கும் திருமணத்துக்காக வந்திருந்த அப்பாவி மக்கள் என்பதும் திருமணம் நடக்க இந்திய ராணுவத்திடம் அனுமதியும் வாங்கியுள்ளார்கள் என்பதையும் வீட்டுக்குள் நுழைந்த இராணுவ தளபதி தெரிந்து கொள்கிறார்.  இந்த வீட்டில் போராளிகள் தங்கியிருப்பதாக வந்த தகவலின் பேரில் தவறுதாலாக வந்துவிட்டோம் என்று கூறி திருமணத்துக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு வெளியேறும்போது, உள்ளேயிருக்கும் இராணுவத்தினரை தாக்க போராளிகள் அவ்வீட்டை முற்றுகையிட்டு கொள்கிறார்கள். இப்போது இந்திய இராணுவம் அவ்வீட்டில் தஞ்சமடைகிறது. வீட்டுக்கு வெளியே ஈழப் போராளிகளின் முற்றுகை. வீட்டுக்குள் திருமண நிகழ்வுக்காக வந்திருந்த அப்பாவி ஈழத்தமிழ் மக்கள். இந்த மூன்று நிகழ்வையும் ஒரே நேரத்தில் கையாண்டு ஈழ மக்களின் வலியை வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் சோமிதரன்.  இந்திய ராணுவ தளபதியாக நடித்த்ருக்கும் நவீன் சந்திரா, மனித நேயமிக்க மனிதராகவும் அதே நேரத்தில் இராணுவ தளபதியின் கம்பீரத்தையும் வெளிப்படுத்தி நடித்திருப்பது பாராட்டும்படியுள்ளது. திருமணக்கனவோடு மகிழ்திருந்த ரூபா கொடுவாயூர் தனது மனவலியை தத்ரூபமாக வெளிப்படுத்தி நடித்திருக்கிறார். சனந்த், கபில வேணு, ரோஹித் கோகடே, விது, சித்து குமரேசன், நவயுகா, சுவாதி கிருஷ்ணன், நமசிவாயம் தம்பிப்பிள்ளை, காயல் வின்சென்ட் ஆகியோர் குடும்ப உறுப்பினர்களாகவும், போராளியாகவும், இராணுவ வீரர்களாகவும் அந்தந்த மண்ணின் மக்களாகவே வாழ்ந்துள்ளனர். இசையமைப்பாளர் கே-யின் பின்னணி இசை படத்தின் ஆன்மாவாகச் செயல்பட்டு படத்தின் உணர்ச்சிகரமான மற்றும் பதற்றமான சூழலுக்கு உயிர் கொடுத்துள்ளது. ஒளிப்பதிவாளர் செல்வரத்தினம் பிரதீபன் – இரவு நேரக் காட்சிகளை இயல்பான ஒளியில் படமாக்கி, அந்த ஒரு வீட்டிற்குள்ளேயே கேமராவை சுழலவிட்டு, மௌனத்திற்கும், சத்தத்திற்கும் இடையே ஊசலாடும் உணர்வுபூர்வமான இறுக்கத்தை பார்வையாளர்களிடையே பதற்றத்துடன் கடத்தியுள்ளார். படத்தொகுப்பாளர் ராதா ஸ்ரீதர் 90 நிமிடங்களில் படத்தைத் தொய்வில்லாமல் கச்சிதமான வேகத்தில் நகர்த்தியுள்ளார். இயக்குநர் சோமிதரன் ஒரு முன்னாள் பத்திரிகையாளர் என்பதால், போரின் அரசியலை விட அதன் பாதிப்பிற்குள்ளாகும் சாமானிய மக்களின் வாழ்வியலை மிக நுணுக்கமாகப் பதிவு செய்துள்ளார். தனது சொந்த அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு, ஈழத்து மண்ணின் மணம் மாறாமல் 92 நிமிடங்கள் மட்டுமே ஓடும் இந்தப் படத்தை ஒரு நிமிடம் கூட வீணடிக்காமல் நேரடியாக கதைக்குள் செல்கிறார். இனப்படுகொலை நடந்த காலத்தில் ஈழ மகக்ளின் வாழ்வியலை அப்படியே நம் கண்முன் திரையில் காட்டியிருக்கும் இயக்குநர் சோமிதரன், இயக்குநர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனாராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் மூலம் இயக்குநர் பாலுமகேந்திராவின் கனவை நினைவாக்கியிருக்கிறார் சோமிதரன்.