ஜன-1ல் வெளியாகும் ஜெய்பீம் நாயகி படத்தின் முதல் பார்வை பதாகை

கர்ணன், ஜெய்பீம் ஆகிய படங்களில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரங்களில் யதார்த்தமான நடிப்பை வழங்கியவர் நடிகை ரஜிஷா விஜயன். தற்போது கார்த்திக்கு ஜோடியாக சர்தார் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்தநிலையில் கடந்த 2019ல் மலையாளத்தில் ரஜிஷா விஜயன் நடித்து சூப்பர்ஹிட்டான ‘ஜூன்’ என்கிற படம் தற்போது தமிழில் தயாராகி வருகிறது. மலையாளத்தில் ஹிட்டான ஜோசப் படம் மூலம் புகழ்பெற்று தனுஷின் ஜகமே தந்திரம் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழுக்கு வந்த ஜோஜு ஜார்ஜ் இந்தப்படத்தில் ரஜிஷா விஜயனின் தந்தையாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அஹமது கபீர் இயக்கியுள்ள இந்தப்படத்தின் பாடல்கள் மற்றும் வசனங்களை நவீன் முத்துசாமி எழுதியுள்ளார். ஆன்ட் அண்ட் எலிபன்ட்ஸ் சினிமாஸ் (Ants to elephants cinemas) நிறுவனம் சார்பில் அனில் கே.ரெட்டி மற்றும் வி.ஜெயபிரகாஷ் ஆகியோர் இந்தப்படத்தை தயாரிக்கின்றனர்.

சென்னை-28 படம் முதல் நட்பு கூட்டணியாக வலம்வரும் இயக்குனர் வெங்கட்பிரபு, நடிகர்கள் வைபவ், பிரேம்ஜி மற்றும் எடிட்டர் பிரவீன் கே.எல் ஆகியோர் இந்தப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை வரும் ஜன-1 புத்தாண்டு தினத்தன்று வெளியிடுகின்றனர். இந்தப்படம் பற்றி தயாரிப்பாளர் அனில் கே.ரெட்டி மற்றும் வி.ஜெயபிரகாஷ் ஆகியோர் கூறும்போது, “மலையாளத்தில் சூப்பர்ஹிட்டான இந்தப்படம் நிச்சயம் தமிழ் ரசிகர்களுக்கும் பிடிக்கும்.. பாடல்கள் அனைத்தும் அங்கே மிகப்பெரிய ஹிட்.. இங்கே தமிழில் பிரபல முன்னணி பாடகர்கள் இந்த பாடல்களை பாடியுள்ளனர். இந்த படம் இளைஞர்களை கவர்வது மட்டுமல்ல, குடும்பத்துடன் பார்த்து ரசிக்க கூடிய ஒரு ஃபீல் குட் படமாகவும் இருக்கும். குறிப்பாக மலையாளத்தில் எப்படி நிவின்பாலிக்கு ஒரு பிரேமம் படம் அமைந்ததோ அதேபோல ரஜிஷா விஜயனுக்கு இந்த படம் நிச்சயமாக அமையும். விரைவில் ரிலீசாகும் விதமாக இந்தப்படம் தயாராகி வருகிறது. தமிழை தொடர்ந்து தெலுங்கிலும் இந்தப்படம் வெளியாக உள்ளது” என்று கூறியுள்ளனர்