“தீயவர் குலை நடுங்க” திரைப்பட விமர்சனம்

(தங்க முகையதீன்)


ஜி.அருள்குமார் தயாரிப்பில் தினேஷ் லட்சுமணன் இயக்கத்தில் அர்ஜூன், ஐஸ்வர்யா ராஜேஷ், அபிராமி வெங்கடாசலம், பிரவீன் ராஜா, லோகு, ராம்குமர், தங்கதுரை, பேபி அனிகா, பிரிய தர்ஷினி, வேலராமமூர்த்தி, பி.எல்.தேனப்பன், ஓ.ஏ.கே.சுந்தர் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “தீயவர் குலை நடுங்க”. லோகு பிரபலமான ஒரு எழுத்தாளர். தான் செய்த ஒரு தவறால் உறக்கமின்றி தவிக்கிறார். மன அமைதிக்காக இரவு நேரத்தில் காரில் பயணிக்கிறார். அப்போது திடீரென்று மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்த ஒரு மர்ம நபர் அவரின் காரை வழிமறிக்க, அந்த கார் நிலைதடுமாறி ஒரு சுவரில் மோதி விபத்துக்குள்ளாகுகிறது. காருக்குள்ளிருந்து தட்டுத்தடுமாறி லோகு ரத்தக் காயங்களுடன் வெளியே வந்து மண்டியிட்டு உட்காருகிறார். அப்போது அந்த முகமூடி நபர் காயத்துடன் தப்பி உட்கார்ந்திருக்கும் லோகுவை இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்கிறார். இந்த கொலையை காவல்த்துறை ஆய்வாளர் அர்ஜூன் விசாரிக்கிறார். சில நாட்கள் கழித்து ஈகிள் கட்டிட உரிமையாளர் ராம்குமாரையும் அதே முகமூடி நபர் கொலை செய்கிறார். அந்த முகமூடி நபர் யார்? எதற்காக கொலை செய்கிறார்? கொலைக்கான காரணம் என்ன? என்பதுதான் கதை? இதுவொரு துப்பறியும் நாவல்கதை போல் படத்தை இயக்குனர் இயக்கியுள்ளார். படத்தின் ஆரம்பத்திலேயே  அந்த முகமூடி நபர் ஒரு பெண் என்பது அவர் நடந்து வரும்போதே தெரிந்து விடுகிறது. படத்தின் இடைவேளியின்போது கொலையாளி யார் என்பதையும் காட்டிவிடுவதால் ரசிப்புத்தன்மை குறைந்துவிடுகிறது. அதற்கு ஈடுகட்டும் வகையில் உச்சக்கட்ட காட்சியில் கொலைக்கு காரணமானவன் யார் என்பதை காட்டும் காட்சி யாரும் எதிபாராத திருப்புமுனை காட்சியாகும். “நான் சட்டத்தையும் காப்பாற்றுவேன், சட்டத்திலிருந்தும் காப்பாற்றுவேன்” என்று அர்ஜூன் சொல்லும் வசனத்தின் மூலம்  படத்தின் கதைக்கருவை விளக்கிவிட்டார் இயக்குநர் தினேஷ் லட்சுமணன். காவல்த்துறை ஆய்வாளராக வரும் அர்ஜூன் உடல்மொழியாலேயே ரசிகர்களை கவர்ந்துவ்ஜ்டுகிறார். ஐஸ்வரியா ராஜேஷ் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பயிற்சியளிக்கும் காட்சியில் ஒரு தாயின் அரவணைப்பை காணமுடிகிறது. இதுவொரு மேலோட்டமான துப்பறியும் படம். இசையும் ஒளிப்பதிவும் படத்துக்கு துணை நிற்கின்றன.”