கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் அவரது 100வது படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் வசூல் சாதனையையும் செய்த படம் ‘கேப்டன் பிரபாகரன்’. ஆர்கே செல்வமணி இயக்கத்தில் 1991 ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டில் வெளியானது இந்த படம். “கேப்டன் பிரபாகரன்’ திரைப்படம் வெளியாகி 34 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், தற்போது நவீன தொழில்நுட்பங்களுடன் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு புது வடிவம் பெற்று, வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி மீண்டும் வெளியீடு செய்யப்படுகிறது. தமிழகமெங்கும் சுமார் 500 திரையரங்குகளில் ஸ்பேரோ சினிமாஸ் சார்பாக கார்த்திக் வெங்கடேசன் இந்த படத்தை வெளியிடுகிறார். இப்படத்தின் முன்னோட்டக்காட்சி வெள்ளோட்டம் விடப்பட்ட நிகழ்வில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் பேசும்போது: “தமிழ் சினிமாவின் ஒரு எவர்கிரீன் படம் தான் கேப்டன் பிரபாகரன். இது கேப்டனின் 100வது படம் என்றாலும் கூட அவர் மறைந்து அதன் மீண்டும் வெளியிடப்படுவதால் இதை அவரது முதல் படம் போல நாம் கொண்டாட வேண்டும். கேப்டன் நடித்த 156 படங்களில் இனி ஒவ்வொரு வருடமும் அவர் நடித்த படங்கள் இப்போதைய இளைஞர்களுக்காக மீண்டும் வெளியீடு செய்யப்படும். இன்றைய திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு கூட அது ஒரு பாடமாக அமையும். கேப்டனும் ராவுத்தர் வாப்பாவும் இணைந்த பல படங்கள் வெற்றி படங்களாக அமைந்தன. நான் குழந்தையாக இருந்தபோது படப்பிடிப்பில் ஒவ்வொரு நாளும் நடந்த சம்பவங்களை எங்களிடம் தவறாமல் பகிர்ந்து கொள்வார்.. இன்று அவரைப் பற்றி அவருக்கு நெருக்கமான, அவருடன் பணியாற்றியவர்கள் தங்கள் அனுபவங்களை பற்றி இங்கு பேசியதெல்லாம் நான் ஏற்கனவே கேட்டது தான். அந்தவகையில் எனக்கு ஒரு டைம் ட்ராவல் பண்ணியது போன்ற உணர்வு இந்த விழாவில் கிடைத்தது” என்று பேசினார்.******
இயக்குனர் ஆர்.கே செல்வமணி பேசும்போது, “என்னை நம்பி என் அப்பா அம்மாவே பணம் கொடுக்க யோசித்த சமயத்தில் விஜயகாந்த்தும் ராவுத்தரும் ஒரு கோடி ரூபாய் போட்டு என்னை நம்பி படம் எடுத்தார்கள். திரைப்படத் துறையில் என்னுடைய பெற்றோர்கள் என்றால் இவர்கள் இருவரும் தான். புலன் விசாரணை சமயத்தில் தான் அவரது திருமணம் நடைபெற்றது. அப்போது அந்த கூட்டத்தில் நான் அவருக்காக கொண்டு சென்ற கிப்ட் கீழே விழுந்து விட்டது. அதை எடுக்க முயற்சித்த போது, அதை விடுப்பா நீ தான் எனக்கு மிகப்பெரிய கிஃப்ட் என்று என்னை கட்டி அணைத்தார் கேப்டன். அன்று முதன் முதலில் ஈழத் தமிழர்களுக்காக தமிழ் சினிமாவில் இருந்து குரல் கொடுத்த முதல் மனிதர் விஜயகாந்த் தான். அப்போதுதான் இந்த படத்திற்கு பிரபாகரன் என பெயர் வைக்க முடிவு செய்தோம். அது கூட சேர்த்து தளபதி பிரபாகரன் என வைக்கலாம் என்று சொன்னேன் ஆனால் அது சரி வராது என்று என்றபோது தான் திடீரென கேப்டன் பிரபாகரன் என டைட்டில் தோன்றியது. உடனடியாக அதை வைக்க ஒப்புக்கொண்டார் விஜயகாந்த். இந்த படத்தின் சம்ண்டை காட்சியில் கயிறு கட்டிக்கொண்டு ஒரு கையில் துப்பாக்கியுடன் அவர் நடித்த போது திடீரென கயிறு அறுந்து விட்டது. கடவுள் அருளால் அருகில் இருந்த பாறையில் விழுகாமல் பக்கத்திலிருந்து புதரில் விழுந்து உயிர் கிடைத்தார் விஜயகாந்த். அடிபட்ட வலியை மறைத்துக் கொண்டு இதை ஸ்டண்ட் மாஸ்டரிதம சொன்னால் அதன் பிறகு எனக்கு சரியாக ஷாட் வைக்க மாட்டார்கள் என அதை சொல்லாமல் மறைத்தவர் விஜயகாந்த். இப்படி தனது வலியை கூட மறைத்துக் கொண்டு அந்த படம் நன்றாக வர வேண்டும் என உழைப்பவர்தான் விஜயகாந்த்.
இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணனுக்கு பதிலாக சரண்யா தான் நடிக்க இருந்தார். ஆனால் அந்த மலை கிராம பெண்ணுக்கான உடையை அணிவதிலும் இன்னும் சில பிரச்சினைகள் இருந்ததால் அவர் இதிலிருந்து விலகிக் கொண்டார். எங்களுடன் 90 நாட்கள் பயணிக்க ஒரு பெண் வேண்டும், அது சாதாரண நடிகையாக இருக்கட்டும், அல்லது புதுமுகமாக கூட இருக்கட்டும் என்று நினைத்து தேடியபோது தான் ரம்யா கிருஷ்ணன் வந்தார்.. ஆனால் அவர் இந்த படத்தில் நடித்து 35 வருடங்கள் கழித்தும் கூட அந்த ஆட்டமா பாடலை பார்க்கும்போது அவ்வளவு உற்சாகமாக இருக்கிறது. நான் உதவி இயக்குனராக இருந்தபோது அவர் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்தார். முதன்முதலாக நான் கிளாப் அடித்ததே ரம்யா கிருஷ்ணன் நடித்த காட்சிக்குத்தான். இந்த விழாவிற்கு என் மனைவி ரோஜா மூலமாக அவருக்கு அழைப்பு விடுத்தேன். மறக்காமல் வந்துவிட்டார்.
இந்த படத்தில் சரத்குமார் நடித்தபோது அவருக்கு கழுத்தில் அடிபட்டுவிட்டது. நான்கு நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடைபெற்றது. அதனால் அவரை மாற்றி விடலாமா என்று நினைத்தபோது, விஜயகாந்த் அதை திட்டவட்டமாக மறுத்து விட்டார். இரண்டாவது படமாக சரத் இதில் நடிக்கிறார்.. வளர்ந்து வரக்கூடிய நடிகர்.. அவரை நீக்கி விட்டால் அவருடைய திரையுலக வாழ்க்கையை பாதிக்கும்.. அவர் திரும்பி வந்த பிறகு நாம் படப்பிடிப்பை நடத்திக் கொள்ளலாம் என பெருந்தன்மையாக கூறினார். இப்படி சில விஷயங்களால் படம் தள்ளித்தள்ளி போனதால் தான் இது 100வது படமாக வரும் பெருமையையும் பெற்றது.
இப்போதைய சூழலில் உலக அழகி போன்ற கதாநாயகி, மிகப்பெரிய கேமராமேன், ஹாலிவுட் இருந்து மேக்கப் மேன் 100 கோடியை தொடக்கூடிய பிரம்மாண்டமான கதை என்று தான் பல பேர் எதிர்பார்க்கிறார்கள், ஆனால் விஜயகாந்த் கதையை மட்டுமே நம்பி வருவார், விஜயகாந்த் சாரை பொருத்தவரைக்கும் அரசியலில் நடிக்க தெரியாது. நிஜத்தில் எப்படி இருந்தாரோ அப்படியே இருந்தார். அதனாலேயே சில பேரின் கிண்டல்களுக்கு ஆளானார். மற்றவர்கள் உள் வாழ்க்கை, வெளி வாழ்க்கை என இரண்டு விதமாக இருப்பார்கள். ஆனால் கேபடனுக்கு அகமும் புறமும் ஒன்றே. நூறு ஜென்மத்திற்கு சேர வேண்டிய புண்ணியங்களை தனது வாரிசுகளுக்காக சேர்த்து கொடுத்துவிட்டு போய் இருக்கிறார் கேப்டன் விஜயகாந்த்” என்று கூறினார்.