செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைதீர் கூட்டரங்கில் மக்கள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தி.சினேகா, தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து 356 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இம் மனுக்களை பெற்றுக்கொண்டு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கோரிக்கை மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார். அதனை தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியம் இணைந்து நடத்திய வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று வேலைவாய்ப்பினை பெற்ற 10 நபர்களுக்கு பணிநியமன ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்கள். செங்கல்பட்டு மாவட்டம் கீரப்பாக்கத்தில் நடைபெற்ற சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில், முகாமிலேயே 38 நபர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. மாவட்ட ஆட்சித்தலைவர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரிடம் இது போன்ற பணிகளை தொடர்ந்து செய்யுமாறும், பொதுமக்களுக்கு வேலைவாய்ப்பினை பெற்று தருமாறும் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், செங்கல்பட்டு நகரத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் சிஎன்ஜி எரிவாயு நிரப்பும் மையத்தினை அமைத்து தருமாறு மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் எரிவாயு நிரப்பும் மையம் அமைக்கும் பணியானது மிக நீண்ட செயல்முறையாகும் என்று தெரிவித்தார். மேலும் ஆட்சியர் மாவட்ட வழங்கல் அலுவலரிடம் இதற்கான பணிகளை விரைவாக மேற்கொண்டு உரிய காலத்திற்குள் கூட்டுறவுத்துறையின் மூலம் சிஎன்ஜி எரிவாயு மையம் அமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து முடிக்க வேண்டுமென்று அறிவுறுத்தினார். மேலும், இக்குறைதீர் கூட்டத்தில், சாலைவசதி, குடிநீர்வசதி வேண்டியும், இடுகாடு மற்றும் இடுகாட்டு பகுதிக்கு செல்வதற்கான பாதை அமைத்து தருமாறும், நெல் உலர் கலம் வேண்டியும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சித்லைவரிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.கணேஷ் குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) காஜா சாகுல் அமீது, உதவி இயக்குநர் (கலால்) ராஜன் பாபு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) நரேந்திரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் வேலாயுதம், மாவட்ட வழங்கல் அலுவலர் வெங்கடாசலம், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சுந்தர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கா.வெங்கடேஷ். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கதிர்வேல் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.