Iசென்னை, அரும்பாக்கம், ராமகிருஷ்ணா தெருவில் வசித்து வரும் ஆரோக்கியராஜ், என்பவர் எலக்ட்ரீஷியன் வேலை செய்து வருகிறார். இவருக்கு 2023ம் ஆண்டு அவரது நண்பர் மூலம் அறிமுகமான வெங்கடேசன் என்பவர் தனது மனைவி மற்றும் மகளுடன் அரும்பாக்கம் பகுதியில் வெளிநாட்டில் வேலைக்கு ஆட்களை அனுப்பும் நிறுவனம் நடத்தி வருவதாகவும், ஆரோக்கியராஜுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகவும் கூறியதன்பேரில், ஆரோக்கியராஜ் தனக்கும் தனது நண்பர்கள் மற்றும் ஊரைச் சேர்ந்தவர்கள் என 26 நபர்களுக்கும் வெளிநாட்டில் வேலை வேண்டும் என கேட்டதன்பேரில், வெங்கடேசன் அதற்கான பணத்தை கேட்டபோது, ஆரோக்கியராஜ் மொத்தம் 27 நபர்களுக்கும் சேர்ந்து ரூ.48.5 லட்சம் பணத்தை, 2023ம் ஆண்டு பல தவணைகளாக இந்நிறுவனத்தின் உரிமையாளரான வெங்கடேசனின் மனைவி ஞானசுந்தரியின் வங்கி கணக்குகளுக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் வெங்கடேசன் மேற்படி நபர்களுக்கு வெளி நாடுகளுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி பணி நியமன ஆணைகளை வழங்கியும், வெளிநாட்டிற்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தி வந்து, மேற்படி அலுவலகத்தை மூடிவிட்டு தலைமறைவானதையடுத்து, ஆரோக்கியராஜ் பணிநியமன ஆணைகள் மற்றும் ஆவணங்களை சம்பந்தப்பட்ட தூதரகத்தில் காண்பித்து விசாரித்ததில், வெங்கடேசன் வழங்கிய பணி நியமன ஆணைகள் மற்றும் ஆவணங்கள் போலி என தெரியவந்ததன்பேரில், இது குறித்து ஆரோக்கியராஜ் அரும்பாக்கம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், போலீசார் மோசடி பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அரும்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர், தீவிர விசாரணை செய்ததில் புகார்தாரர் குறிப்பிட்டிருந்தது உண்மையென தெரியவந்ததின்பேரில், ரூ.48.5 லட்சம் பணத்தை பெற்று மோசடி செய்த வெங்கடேசன், வ/50, கேளம்பாக்கம், சென்னை மற்றும் அவரது மகள் மோனிஷா ஆகிய 2 நபர்களை கைது செய்தனர். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய மற்றொரு தலைமறைவு எதிரியை காவல் குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட எதிரிகள் இருவரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.