மறைமலை அடிகளாரின் பிறந்த நாளில் அரசு மரியாதை

மறைமலை அடிகளாரின் இயற்பெயர் வேதாச்சலம். இவர் வடமொழியில் இருந்த தனது பெயரைத் தனித்தமிழில் மறைமலையடிகள் என மாற்றிக்கொண்டார்.  மறைமலையடிகள் 1876ஆம் ஆண்டு சூலை 15ஆம் நாள் நாகப்பட்டினத்தில் பிறந்தார். இவர் சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பொறுப்பேற்று மாணவர்களுக்கு எளிய முறையில் பாடம் கற்பித்தவர். திராவிட மஞ்சரி, பாசுகர ஞானோதயம், நீலலோசனி, ஞானசாகரம் ஆகிய இதழ்களில் இவரது கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன.  பட்டினப்பாலை, முல்லைப்பாட்டு ஆகிய நூல்களுக்கு ஆராய்ச்சியுரை எழுதியும், திருவொற்றியூர் முருகன்,  மும்மணிக்கோவை, சோமசுந்தரக் காஞ்சியாக்கம் முதலிய செய்யுள் நூல்களையும், சிந்தனைக் கட்டுரைகள், அறிவுரைக் கொத்து, சிறுவர்களுக்கான செந்தமிழ், முற்காலப் பிற்காலத் தமிழ்ப் புலவோர் போன்ற கட்டுரை நூல்களையும், குமுதவல்லி அல்லது நாகநாட்டரசி, கோகிலாம்பாள் கடிதங்கள் முதலிய புதினங்களையும் எழுதியுள்ளார்.  வடமொழியில் காளிதாசர் எழுதிய சாகுந்தலத்தை மொழிபெயர்த்துச்  சாகுந்தல நாடகம் என்ற பெயரில் நூலையும்,  அம்பிகாபதி அமராவதி என்ற நாடக நூலையும் எழுதியுள்ளார்.  மேலும், சைவம், தமிழ் இரண்டையும் தம் இரு கண்களாகக் கருதி,  சைவ சித்தாந்தமும் செயல்முறையறிவும் என்ற ஆங்கில நூலையும் எழுதியுள்ளார்.   தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை’ மறைமலையடிகளார் அவர்களைப் போற்றி சிறப்பிக்கும் வகையில் செங்கல்பட்டு மாவட்டம், பல்லவபுரம் சாவடித் தெருவில் அமைந்துள்ள அவர்வாழ்ந்த இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரின் திருவுருவச் சிலைக்கு அவருடைய பிறந்த நாளான சூலை 15ஆம் நாளன்று ஆண்டுதோறும் மாலை அணிவித்து மலர்தூவிச் சிறப்பிக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் அவரது திருவுருவச் சிலைக்கு 15.07.2021வியாழன் காலை 11.00 மணிக்குத் தமிழ்நாடு அரசின் சார்பில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள்அரசு உயர் அலுவலர்கள் மற்றும் தமிழறிஞர் ஆகியோர் மாலை அணிவித்து, மலர்தூவிச் சிறப்பிக்கும்  நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.