தேசிய மருத்துவ ஆணையம் ,நெஸ்ட் தேர்வை காலவரையின்றி தள்ளி வைத்திருப்பது வரவேற்கத்தக்கது. 

எம்பிபிஎஸ் படிப்பில் “நெக்ஸ்ட்”  என்றத் தேர்வை தேசிய மருத்துவ ஆணையம் திணிப்பதற்கு திட்டமிட்டு இருந்தது.  மருத்துவப் படிப்பை முடித்து வெளியேறுவதற்கு, தேசிய வெளியேறும் தேர்வு என்ற “நெக்ஸ்ட்

( NExT) தேர்வை ஒன்றிய அரசு புகுத்த முயன்றது. அதாவது, இத்தேர்வின் படி, இறுதியாண்டு மருத்துவத் எழுத்துத் தேர்வாக நடத்தப்படும் , MCQ அடிப்படையிலான் ,கணினி வழித் தேர்வான “நெக்ஸ்ட் ” முதல்கட்ட தேர்வில்(NEXT STEP ONE) வெற்றி பெற்றால் தான் பயிற்சி மருத்துவராக முடியும். 

பயிற்சி மருத்துவத்தை முடித்த பிறகு,  “நெக்ஸ்ட்” இரண்டாம் கட்டத் தேர்வான ,கிளினிக்கல் (NEXT STEP TWO PRACTICAL )தேர்வில் வெற்றி பெற்றால்தான் மருத்துவராக பதிவு செய்து கொண்டு தொழில் செய்ய முடியும். 

இந்தத் தேர்வுகள் , மாணவர்களை பயிற்சி மருத்துவராகுவதற்கு முன்பும், பயிற்சி மருத்துவக் காலத்திலும்  புத்தகப் புழுக்களாக மாற்றிவிடும். கிளினிக்கல் அறிவை,திறமையை வளர்த்துக் கொள்வதற்கு தடையாக அமையும். மாணவர்களுக்கு கூடுதல் சுமையாக மாறும். 

முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வில் 200 வினாக்கள் மட்டுமே உண்டு.அது மூன்றரை மணி நேரம் மட்டுமே நடக்கும் தேர்வாகும்.ஆனால் நெக்‌ஸ் தேர்வோ‌ 540 வினாக்கள் அடங்கியது. மூன்று நாட்கள் காலை மற்றும் மாலை என்று நடக்கும் 6 தேர்வாகும். எனவே, முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான தேர்வு கடினமாகும். 

தற்பொழுது எம்பிபிஎஸ் இறுதி ஆண்டில் வெற்றி பெற ,மருத்துவம்,குழந்தைகள் மருத்துவம், அறுவை சிகிச்சை, மகப்பேறு மருத்துவம் என்ற நான்கு பாடப்பிரிவுகளில் மட்டுமே தேர்வு நடத்தப்படுகிறது. அதில் வெற்றி பெற்றால் பயிற்சி மருத்துவராக முடியும். அதை நிறைவு செய்த பின்பு,மருத்துவராக பதிவு பெற்று தொழில் செய்ய முடியும். ஆனால் நெக்ஸ்ட் தேர்வே இறுதியாண்டு தேர்வாக மாற்றப்படுவதால்,  முதலாம் ஆண்டு முதல் உள்ள 23 பாடங்களை படித்து ,ஆறு தேர்வுகளாக எழுத வேண்டும். 540 MCQ கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். எனவே, எம்பிபிஎஸ் தேர்ச்சி பெறுவதற்கான தேர்வும் மிகவும் கடினமாகும்.  ஒரு தகுதித் தேர்வையே (Qualifying Examination) போட்டித் தேர்வாக

Competitive Examination)மாற்றுவது சரியல்ல. 

மாநில உரிமைகளுக்கும், மாநில பல்கலைக்கழகங்களின் உரிமைகளுக்கும்  ,மாணவர்கள் நலனுக்கும் எதிரான இத்தேர்வை, ரத்து செய்ய வேண்டுமென , சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தி வந்தது. 

தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கத்துடன் இணைந்து, போராட்டங்களையும் நடத்தி வந்தது. மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டு வந்தது. 

இந்நிலையில், தேசிய மருத்துவ ஆணையம்,  நெக்ஸ்ட் தேர்வை கால வரையின்றி தள்ளி வைப்பதாக அறிவித்துள்ளது. 2024 மக்களவைத் தேர்தல் வருவதால், போராட்டங்களுக்கு அஞ்சி , இத்தேர்வு தள்ளிவைக்கப் பட்டுள்ளதாகத் தெரிகிறது. 

இருப்பினும் , இது வரவேற்புக்குரியது.இது போராட்டங்களுக்கு கிடைத்த மகத்தான வெற்றி.  இத் தேர்வை தள்ளி வைத்தது மட்டும் போதாது, முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.  எக்காலத்திலும் ,இத் தேர்வை  திணிக்கக் கூடாது என, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் , தேசிய மருத்துவ ஆணையத்தையும்,ஒன்றிய அரசையும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது .