கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் முடுக்கிவிட வேண்டும்.

இது குறித்து இவ்வமைப்புகளின் சார்பில் கடலூர் ஊடகவியலாளர் சந்திப்பில் விடுக்கப் பட்டுள்ள ஊடகங்களுக்கான செய்தி. 
 
“பூஜ்ய கொரானா கொள்கையை ( Xero Covid Policy) ” இது வரை பின்பற்றி வந்த
சீனா, அக்கொள்கையை  பொதுமக்களின் போராட்டங்களின் காரணமாக திடீரென கை விட்டதும்,  தடுப்பூசியால் பெறப்பட்ட  எதிர்ப்பாற்றலையும் மீறி உருமாறிய  கொரோனா வைரஸ்கள் பரவுவதால் அந்நாடு  பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சீனாவில் 80 வயதிற்கும் மேற்பட்டோரில் 65 விழுக்காட்டினர் மட்டுமே தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர். இதுவும் பிரச்சனையை சிக்கலாக்கியுள்ளது. 
 
அதே நேரத்தில் தடுப்பூசி அதிகம் வழங்கப்பட்ட ஜப்பான்,அமெரிக்கா,தென்கொரியா,பிரான்ஸ் போன்ற நாடுகளிலும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது. இது கவலை அளிக்கிறது. 
 
பி.எஃப் 7 ,பி.ஏ 5 போன்ற ஒமிக்ரான் வகை உருமாறிய கொரானா வைரஸ் அதிக அளவில் தொற்றுக்களை உருவாக்குகிறது.பி.எஃப் 7வகை உருமாறிய கொரோனா தொற்றுக்கு ஆளானவர் மூலம் 12 முதல் 18 நபர்களுக்கு தொற்று பரவும் நிலை உள்ளது. 
 
ஏற்கனவே, தடுப்பூசிகள் மூலமும்,இயற்கையான தொற்று மூலமும் பெறப்பட்ட எதிர்ப்பாற்றலையும் தகர்த்து ,  புதிய உருமாறிய கொரோனா வைரஸ் பரவுகிறது. 
 
கொரோனா வைரஸ் தொற்றிற்கு உள்ளாபவர்களின் எண்ணிக்கை, இந்தியாவிலும் அடுத்த 40 நாட்களுக்குப் பிறகு  அதிகரிக்கக் கூடும் என ஒன்றிய அரசு கூறியுள்ளது. 
 
# எனவே, ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டும். 
கடந்த கால அனுபவங்களிலிருந்து பெற்ற படிப்பினைகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும். 
 
# பொது சுகாதார துறையை வலுப்படுத்த வேண்டும். மருத்துவ ஆராய்ச்சிகளை அதிகரிக்க வேண்டும். 
 
# கொரோனா முதல் பூஸ்டர் தடுப்பூசிகளை பெற  தகுதி பெற்றவர்களில் வெறும் 26 விழுக்காட்டினரே ,அதை இந்தியாவில் பெற்றுள்ளனர் என ஒன்றிய அரசு கூறியுள்ளது. 
இரண்டாவது தவணை தடுப்பூசி பெற்ற ஏராளமானோர் ,அதைப் பெற்று ஓராண்டுக்கும் மேலாகியுள்ளது . எனவே, தடுப்பூசியால் பெற்ற எதிர்ப்பாற்றல் குறைந்திருக்க வாய்ப்புள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.  தடுப்பூசி வழங்குவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
 
 
# கொரோனா தடுப்பூசிகளை மீண்டும் இலவசமாக வழங்கிட வேண்டும். 
 
# மருத்துவர்கள்,செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு கூடுதல் ஊக்கத் தவணை தடுப்பூசி வழங்கிட வேண்டும். 
 
# இது வரை ஊக்கத் தவணை ( Booster  ) தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு உடனடியாக அதை செலுத்த நடவடிக்கை எடுத்திட வேண்டும். 
 
# கொரோனா பரிசோதனைகளையும், மரபணு ஆய்வு பரிசோதனைகளையும் அதிகரிக்க வேண்டும். 
 
# முகக் கவசம் அணிதல், கைகளை அவ்வப் பொழுது நன்றாக சோப்புப் போட்டுக் கழுவுதல், சானிட்டைசர் பயன்படுத்துதல், தனிநபர் இடைவெளியை பராமரித்தல் போன்ற ,கொரோனா தடுப்பிற்கு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடை முறைகள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் மீண்டும் ஏற்படுத்த நடவடிக்கை எடுத்திட வேண்டும். 
 
# மருத்துவப் படுக்கைகளை அதிகரித்தல் உட்பட அனைத்து மருத்துவக் கட்டமைப்புகளையும் மேம்படுத்துவதோடு, அத்தியாவசிய மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் இருப்புகளை உறுதி செய்வதோடு அதிகரிக்கும் தேவைகளை நிறைவு செய்ய நடவடிக்கை எடுத்திட வேண்டும். 
 
# தமிழக அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் சிகிச்சைப் பெற மருத்துவக் காப்பீட்டு முறை கூடாது.அனைத்து சிகிச்சைகளையும்,பரிசோதனைகளையும் இலவசமாக்கிட வேண்டும். 
 
#  மருத்துவக் கழிவுகள் அகற்றும்  கட்டணத்தை அரசு முறைப்படுத்திட வேண்டும். பல்வேறு மாவட்டங்களில், பல்வேறு வகையான கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. இதனால் சிறிய ரத்தப் பரிசோதனைக் கூடங்கள் பாதிக்கப்படுகின்றன.
எனவே , தமிழக அரசு மருத்துவக்  கழிவுகள் அகற்றும் கட்டணத்தை சிறிய ரத்த பரிசோதனை கூடங்களுக்கு மாதம் ரூபாய் 500 ஆக நிர்ணயம் செய்ய வேண்டும். 
 
# தமிழக அரசே மருத்துவக்  கழிவுகள் அகற்றும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.இத்துறையில்  தனியார் நிறுவனங்கள் கோலோச்ச அனுமதிக்கக் கூடாது. 
  
# மருந்துக் கடைகளில் ரத்த பரிசோதனை மேற்கொள்வதை அரசு தடுத்திட வேண்டும் .
              
# மலேரியா தடுப்புப் பணியில் உள்ள ஆய்வக நுட்புனர்கள் தொடர்ந்து பழிவாங்கப்படுகின்றனர். பழிவாங்கும் நோக்குடன் சிலர் இடம் மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.இந்த பழிவாங்கும் நடவடிக்கைகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். 
 
# மருத்துவர்கள் ,மருத்துவப் பணியாளர்களை உடனடியாக போதிய அளவில் நியமிப்பதோடு,அனைத்து காலிப்பணியிடங்களையும் உடனடியாக நிரப்பிட வேண்டும். 
 
# ஒன்றிய அரசு ,தேசிய மருத்துவ ஆணையம் மூலம்,  மருத்துவ மாணவர்களுக்கு நெக்ஸ்ட் ( NEXT) தேர்வை புகுத்துவதை கைவிட வேண்டும். 
 
# தமிழ்நாடு அரசு ,முதுநிலை மருத்துவ மாணவர்களின் விடுதிகளை தனியார்மயமாக்குவதை கைவிட வேண்டும். 
 
# சென்னை அரசு பல் மருத்துவ மாணவர்களுக்கு தங்குவதற்கு மாற்றிடம் வழங்காமல்,கோட்டை ரயில் நிலையம் எதிரில் தற்போதுள்ள விடுதியை இடித்திடக் கூடாது. 
 
இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் பாரா மெடிக்கல் லேப் கல்வி மற்றும் நலச் சங்கத்தின் அகில இந்தியத் தலைவர் பி.காளிதாசன்,கடலூர் மாவட்டச் செயலாளர்  ஆர். ஜானகிராமன், எம்.சம்பத்குமார், பி.ஜெயராமன் ,ஏ.முகமது ரஃபீக், ஐ.பார்த்திபன் , எஸ்.சசிக்கலா, ஜி.ஜெயபிரதா, எஸ்.சசிக்குமார்,ஆர்.வீரலட்சுமி,ஏ.தமிழ்செல்வன் ,கே.விக்னேஸ்வரன் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 
 
இவண்,
டாக்டர் ஜி.ஆர் .இரவீந்திரநாத், பொதுச் செயலாளர்,
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் .