கொடுமுடியில் சார்பு நீதிமன்றம்; மறுமலர்ச்சி தி.மு.க.வின் கோரிக்கை நிறைவேறியது – துரை வைகோ

ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் சார்பு நீதிமன்றம் அமைத்து உதவிடுமாறு தலைவர் வைகோ எம்.பி., அவர்கள் பரிந்துரைத்த கடிதத்தை, தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் மாண்புமிகு எஸ்.ரகுபதி அவர்களிடம் 24.03.2022 அன்று, நேரில் சந்தித்து வழங்கினேன். கொடுமுடியில் மாவட்ட உரிமையியல்  மற்றும் குற்றவியல் நீதிமன்றங்கள் கடந்த 30 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் நிலையில், சார்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்பது அந்த பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை ஆகும். வழக்கறிஞர்கள் சங்கமும் அதற்கான முயற்சியில் பல ஆண்டுகளாக தொடர்ந்து ஈடுபட்டு வந்தது. கடந்த அ.தி.மு.க ஆட்சியிலும்   இது தொடர்பான கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில் நடவடிக்கைகள் ஏதும் இல்லை. அமைச்சர் மாண்புமிகு எஸ்.ரகுபதி அவர்களிடம் இந்த கோரிக்கையை நினைவூட்டி அலைபேசியில் இரண்டு மூன்று முறை பேசினேன். அப்போது அமைச்சர் அவர்கள், நீங்கள் விடுத்த கோரிக்கை பணியாளர்கள் நியமனத்திற்கு அனுமதி பெறுவதற்காக, நிதித்துறை அலுவலகத்திற்கு (Finance section) அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. வரும் சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே கொடுமுடியில் சார்பு நீதிமன்றம் அமைப்பதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றார். மேலும், நிதித்துறை அலுவகத்தையும் தொடர்பு கொண்டு நான் பேசுகிறேன் என்று நம்பிக்கை தெரிவித்தார். அவர் சொன்னபடியே, சட்டமன்ற கூட்டத் தொடர் முடிவதற்கு உள்ளாக, கடந்த ஏப்ரல் 27 ஆம் தேதி அன்று கொடுமுடியில் சார்பு நீதிமன்றம் அமைப்பதற்கான அறிவிப்பு சட்டமன்றத்தில் வெளியிடப்பட்டது. கொடுமுடி பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறி இருக்கிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும்,  உறுதி அளித்தபடியே அறிவிப்பு வெளியாவதற்கு காரணமாக இருந்த சட்டத்துறை அமைச்சர் மாண்புமிகு எஸ்.ரகுபதி அவர்களுக்கும், கொடுமுடி பகுதி பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் சங்கத்தின் கோரிக்கையை நம் கவனத்திற்கு கொண்டுவந்த ஈரோடு கிழக்கு மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் குழந்தைவேலு அவர்களுக்கும், மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்களின் முயற்சியால், கொடுமுடியில் சார்பு நீதிமன்றம் அமையவிருக்கிறது.  நானும், எல்லையற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.