இசக்கி கார்வண்ணன், லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்து இயக்கி இருக்கும் ‘பரமசிவன் பாத்திமா’ படத்தில் விமல் கதையின் நாயகனாக நடித்துள்ளார். வரும் ஜூன் 6 அன்று திரையரங்குகளில் ‘பரமசிவன் பாத்திமா’ வெளியாகிறது. இப்படத்தில் விமல் நாயகனாக நடிக்க சாயாதேவி, எம். எஸ். பாஸ்கர், மனோஜ் குமார், ஸ்ரீ ரஞ்சனி, ஆதிரா, அருள்தாஸ், சேஷ்விதா ராஜு, கூல் சுரேஷ், காதல் சுகுமார், வீரசமர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ‘பரமசிவன் பாத்திமா’ திரைப்படத்திற்கு மைனா சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, தீபன் சக்கரவர்த்தி இசை அமைக்க, இசக்கி கார்வண்ணன் எழுதி இயக்கியுள்ளார்.******
‘பரமசிவன் பாத்திமா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், “சிறு வயதிலேயே சிறப்பான இசையை தம்பி தீபன் சக்ரவர்த்தி வழங்கி உள்ளார். இயக்குநர் இசக்கி கார்வண்ணனிடமும் இதைக் கூறியுள்ளேன். தம்பி ஏகாதசியின் வரிகள் வலிமை மிக்கவை. காவியப் படைப்பை தந்துள்ளார். முன்னோட்டத்தை பார்த்தவுடன் ஒளிப்பதிவாளர் யார் என்று தான் கேட்டேன். சுகுமார் என்று சொன்னவுடன் மிக்க மகிழ்ச்சியாக இருந்தது, ஒளியோடு விளையாடி இருக்கிறார். இப்படத்தில் நடித்துள்ள விமல் உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துகள். மொழிப்பற்றும் இனப்பற்றும் என்னையும் இயக்குநர் இசக்கி கார்வண்ணனையும் இணைக்கிறது. ‘பரமசிவன் பாத்திமா’ திரைப்படம் சிறப்பாக உருவாகியுள்ளது. மிகவும் முக்கியமான ஒரு பிரச்சனையை துணிச்சலாக கையாண்டுள்ளார். அவரது போர்க்குணம் தான் இந்தக் கதையை படமாக எடுக்க காரணம். அவருக்கும் அவரது குழுவினருக்கும் பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள்,” என்றார்.
தயாரிப்பாளர்-இயக்குநர் இசக்கி கார்வண்ணன் பேசுகையில், “இது வாழ்வியல் சம்பந்தப்பட்ட கதை. என்னை சுற்றி வாழ்ந்த மக்களின் கதை. இது மதவாத படமல்ல, மனிதம் பேசும் படம். இசையமைப்பாளர் தீபன் சக்ரவர்த்தியும், பாடலாசிரியர் ஏகாதசியும் மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கி உள்ளார்கள். ஒளிப்பதிவாளர் சுகுமார் மிகவும் திறமை வாய்ந்த கலைஞர். இப்படம் அதற்கு மற்றுமொரு சான்று. விமல் ஒரு கடின உழைப்பாளி. சாயா தேவியும் சுகுமாரும் போட்டி போட்டு நடித்துள்ளனர். எம் எஸ் பாஸ்கர் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். எடிட்டர் புவன் படத்தொகுப்பு அருமை. இப்படி அனைவரும் சிறப்பான பங்களிப்பை அளித்தனர்.