ஸ்வர்க்கசித்ரா அப்பச்சன் தயாரிப்பில் சித்திக் இயக்கத்தில் இளையராஜா இசையில் விஜய்-சூர்யா இணைந்து நடித்து 2001ம் ஆண்டில் வெளியாகி வெற்றியைப் பெற்ற ‘ப்ரண்ட்ஸ்’ திரைப்படம் 24 ஆண்டுகளுக்கு பின்னர் நவீன தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு வரும் 21ம் தேதி முதல் திரையரங்குகளில் ஜாக்குவார் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் பி.வினோத் ஜெயின் வெளியீட்டில் மீண்டும் திரைக்கு வருகிறது. இதன் அறிவிப்பு நிகழ்வில் தயாரிப்பாளர் வினோத் ஜெயின் பேசுகையில், ”நம் எல்லோருக்கும் நெருக்கமான படம் ‘ப்ரண்ட்ஸ்’. ப்ரண்ட்ஸ் என்றால் நமக்கு நினைவுக்கு வருவது நட்பு, சிரிப்பு. இந்தப் படத்தை எத்தனை முறை பார்த்தாலும் போரடிக்காது. தற்போது நவீன தொழில்நுட்பத்தில் டால்பி அட்மாஸ் ஒலி அமைப்புடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தினை நவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்க உதவிய அனைவருக்கும் நன்றி. இந்தப் படம் 21ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.********
நடிகர் ரமேஷ் கண்ணா பேசுகையில், “இந்தப் படத்தின் இயக்குநர் சித்திக் அவர் எழுதிய வசனங்களை தவிர வேறு எந்த வசனங்களையும் நடிகர்கள் பேச அனுமதிக்க மாட்டார். நான் அவருடன் ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ படத்தில் வசனகர்த்தாவாக பணியாற்றி இருக்கிறேன். ஸ்கிரிப்டில் இருக்கும் டயலாக்கை தவிர வேறு ஒரு வசனத்தை நடிகர்கள் பேசினால் ஒப்புக்கொள்ள மாட்டார். இந்த படத்தில் இடம்பெற்ற ‘ஆணியே புடுங்க வேணாம்’ எனும் டயலாக் கோகுல கிருஷ்ணாவும், டைரக்டர் சித்திக் சாரும் எழுதிய டயலாக் தான். இந்தப் படத்தில் நான் பேசும் ‘ஆடு நடந்தது… மாடு நடந்தது..’ என்ற வசனம் மட்டும் தான் அவர் அனுமதித்த எக்ஸ்ட்ரா டயலாக். அதற்கும் முதலில் ஒப்புக்கொள்ளவில்லை. பிறகு இது ஒரு கல்ட் கிளாசிக் டயலாக் என நான் விளக்கம் சொன்ன பிறகு ஒப்புக்கொண்டார். ப்ரண்ட்ஸ் படப்பிடிப்பு நடந்த போது நானும், சூர்யாவும் கலகலப்பாக பழகினோம். இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற போது அவரும், ஜோதிகாவும் காதலித்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு நான் தூது சென்றிருக்கிறேன். ப்ரண்ட்ஸ் படத்தை பொருத்தவரை இயக்குநர் ரசித்து ரசித்து உருவாக்கினார். அவர் ஒரு சிறந்த நகைச்சுவை உணர்வு மிக்கவர். அது போன்றதொரு சிறந்த இயக்குநர் தற்போது இல்லாதது நமக்கு மிகப்பெரிய இழப்புதான். நேசமணி அவர் உருவாக்கிய அற்புதமான கதாபாத்திரம். இந்த கதாபாத்திரத்தை மலையாளத்தில் சீனிவாசன் நடித்திருப்பார்.
இந்தப் படம் 24 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளியாகிறது அதற்கு ஒரு ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெறுகிறது என்றால் நமக்கெல்லாம் ஆண்டவனின் ஆசி இருக்கிறது என்றுதான் அர்த்தம். நாங்கள் சினிமாவில் அறிமுகமாகும் போது எங்களுக்கு பிடித்த காமெடி படம் எது, என்று கேட்டால்.. நாங்கள் ‘காதலிக்க நேரமில்லை’, ‘ஊட்டி வரை உறவு’ ஆகிய படங்களை சொல்வோம். இந்தப் படங்களை எப்போது பார்த்தாலும் சிரிக்கலாம். அதேபோல் ‘ப்ரண்ட்ஸ்’ படத்தை எப்போது பார்த்தாலும் சிரிக்கலாம். இதனால் இந்த படம் ரீ ரிலீசிலும் மிகப்பெரிய வெற்றி பெறும். இந்தப் படத்தில் இடம்பெறும் கடிகாரம் உடையும் காட்சியை படமாக்கும் போது விஜய்யும், சூர்யாவும் சிரித்து விடுவார்கள். மீண்டும் அந்த காட்சியை படமாக்குவதற்கு அரை மணி நேரத்திற்கு மேலாகும். மீண்டும் படமாக்கும் போது ‘ஐயோ நான் பிடிக்கலடா’ என்ற டயலாக் சொல்லும்போது மீண்டும் விஜயும், சூர்யாவும் சிரித்து விடுவார்கள். படத்தை நீங்கள் உற்றுப்பார்த்தால் விஜயும், சூர்யாவும் திரும்பி நின்று கொண்டு சிரிப்பார்கள். விஜய் படப்பிடிப்புக்கு தளத்திற்கு வந்தால் அமைதியாக இருப்பார். ஆனால் நடிக்கும் போது அற்புதமாக நடித்து அசத்தி விடுவார். அது அவருக்கான கடவுள் கொடுத்த பரிசு. அதேபோல் டப்பிங்கிலும் அவர் நடித்த காட்சிகளை ஒரு முறை தான் பார்ப்பார். அதன் பிறகு எந்த ஒரு பிசிறு இல்லாமல் கச்சிதமாக பேசி விடுவார். எனக்குத் தெரிந்தவரை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான் இது போல் அவர் நடித்த காட்சிகளை ஒரு முறை பார்த்துவிட்டு டப்பிங்கில் முதல் முறையிலேயே கச்சிதமாக பேசி விடுவார். அந்த வகையில் விஜய் அற்புதமான நடிகர் மற்றும் அற்புதமான டப்பிங் ஆர்ட்டிஸ்ட். அதே போல் படப்பிடிப்பு தளங்களில் ஹீரோ என்ற பந்தா எதுவும் இல்லாமல் எங்களுடன் சகஜமாக பழகுவார். இந்தப் படத்தில் தேவயானி கதாபாத்திரத்திற்காக முதலில் ஜோதிகாவிடம் தான் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன் பிறகு சிம்ரனிடம் பேசினார்கள். இறுதியில் தேவயானி தான் நடித்தார். அப்போது அவருக்கு ஒரு அதிர்ஷ்டம் இருந்தது. ‘காதல் கோட்டை’ படத்திலிருந்து அவர் நடித்த எல்லா படங்களும் வெற்றி. அவர் சார்பாகவும் வாழ்த்து தெரிவிக்கிறேன்,” என்றார்.

