“பல்ஸ்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா;

குளோபல் பிக்சர்ஸ் அழகராஜ் ஜெயபாலன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் பல்ஸ் திரைப்படத்தை நவீன் கணேஷ் இயக்கியிருக்கிறார். மாஸ்டர் மகேந்திரன் நாயகனாக நடித்திருக்கிறார். கூல் சுரேஷ், அர்ச்சனா, கே.பி.ஒய். சரத் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். அபிஷேக் ஏ.ஆர். இசையாமைத்திருக்கிறார். இப்படத்தின் காணொளி மற்றும் இசை வெளியீட்டு விழாவில் கே.ராஜன் பேசியதாவது: இன்றைய சூழலில் பெரிய நடிகர்களை வைத்து படம் எடுப்பதே தயாரிப்பாளர்களுக்கு சவாலாக மாறியுள்ளது. அந்த நிலையில், புதுமுகங்களை நம்பி, ஒரு நல்ல கதையின் மீது நம்பிக்கை வைத்து பெரிய முதலீடு செய்த தயாரிப்பாளர் விக்ரம் பாராட்டுக்குரியவர். இது மிகுந்த தைரியம் தேவைப்படும் முடிவு, “‘பல்ஸ்’ என்ற தலைப்பை பற்றி பலர் பேசினார்கள். ஆனால் ஒரு படத்தின் வெற்றியை தீர்மானிப்பது தலைப்பு அல்ல, கதையில் இருக்கும் வலிமை தான். மருத்துவமனை பின்னணியில் எடுக்கப்பட்ட இந்த கதையில், பார்வையாளர்களை இருக்கையில் கட்டிப்போடும் அளவுக்கு உள்ளடக்கம் இருக்க வேண்டும், சின்ன வயதிலிருந்தே கதாநாயகன் மகேந்திரனை  கவனித்து வருகிறேன். ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் நடித்தாலும், தனக்கான இடத்தைப் பிடிக்க தொடர்ந்து போராடி வருகிறார். உழைப்பு ஒருநாளும் வீண் போகாது. ஆனால் கதாநாயகனான  பிறகு சம்பள விஷயங்களில் தயாரிப்பாளரை நினைத்தே முடிவு எடுக்க வேண்டும். தயாரிப்பாளர் நலமுடன் இருந்தால் தான் சினிமா துறை நலமாக இருக்கும்,” என்றார்.********

இயக்குனர் நவீன் கணேஷ் பேசும்போது, “புதுமுக இயக்குனராக இருந்த என்னிடம் முழு நம்பிக்கை வைத்து, கதையின் மீது நம்பிக்கை வைத்து எந்த சமரசமும் இல்லாமல் படம் எடுக்க முழு ஆதரவு அளித்த தயாரிப்பாளருக்கு என் முதல் நன்றி. பட்ஜெட் குறித்து கவலைப்படாமல், படத்துக்குத் தேவையான அனைத்தையும் செய்து கொடுத்தார்,” என்று அவர் தெரிவித்தார். படத்தின் தொழில்நுட்ப குழுவை பாராட்டிய நவீன், “ஹாஸ்பிட்டல் கதைக்களம் என்பதால் ரியல் லொகேஷன்களில் படமாக்கினோம். அதற்கு ஏற்ற வகையில் ஆர்ட் டைரக்டர் முகமது மிக இயல்பான செட் வடிவமைப்பை செய்துள்ளார். கன்னட திரையுலகில் முன்னணி எடிட்டராக இருக்கும் சோம் சேகர் இந்த படத்துக்கு பணியாற்றியது எனக்கு பெரிய பலம். ஒரு த்ரில்லர் படத்துக்கு மிக முக்கியமான எடிட்டிங்கை அவர் கிரிஸ்பாகவும் வேகமாகவும் வழங்கியுள்ளார்,” என்றார். ஆக்சன் காட்சிகள் குறித்து பேசுகையில்,“ஸ்டண்ட் மாஸ்டர் மிரட்டல் செல்வா பெயருக்கேற்ற வகையில் ஆக்சன் காட்சிகளை வடிவமைத்துள்ளார். குறிப்பாக கிளைமாக்ஸில் ரோப் மற்றும் டூப் இல்லாமல் மகேந்திரன் செய்த சண்டைக் காட்சி தியேட்டரில் நிச்சயம் கைத்தட்டல் பெறும்,” என்று கூறினார். கதாநாயகன் மகேந்திரன் பற்றி அவர் கூறுகையில், “அவர் ஒரு உண்மையான ‘டைரக்டர்ஸ் ஆர்ட்டிஸ்ட்’. நான் நினைப்பதை திரையில் அப்படியே கொண்டு வருபவர். ‘ஓகே’ சொன்ன பிறகும் இன்னும் சிறப்பாக செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் மீண்டும் டேக் கேட்பது அவரது அர்ப்பணிப்பை காட்டுகிறது. அந்த உழைப்பே படத்தின் தரத்தை உயர்த்தியுள்ளது,” என்று பாராட்டினார். படத்தின் தலைப்பு குறித்து விளக்கிய நவீன் கணேஷ், “இது ‘பைல்ஸ்’ அல்ல, ‘பல்ஸ்’. மனிதனின் இதயத் துடிப்பு எப்படி தொடர்ச்சியாக இருக்கிறதோ, அதேபோல் இந்த படத்தை பார்க்கும் போது பார்வையாளர்களுக்கும் இடைவிடாத பதற்றம் இருக்கும். அதனால்தான் இந்த தலைப்பை தேர்வு செய்தோம்,” என்றார். மேலும், கூல் சுரேஷ் இந்த படத்தில் காமெடியைத் தாண்டி ஒரு முக்கியமான குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளதாகவும், நடிகர் சேது மற்றும் அர்ச்சனா விழாவுக்கு வந்து வாழ்த்தியதற்காக நன்றிகளையும் தெரிவித்தார்.