“ஐ.பி.180” திரைப்பட விமர்சனம்

ரேடியண்ட் இண்டர்நேஷ்னல் பிலிம்ஸ், அருள் இண்டியா மூவிஸ் ய்ஹயாரிப்பில் ஜெ.பி. இயக்கத்தில் தன்யா எஸ்.ரவிச்சந்திரன், மறைந்த டேனியல் பாலாஜி, கே.பாக்கியராஜ், அருள்தாஸ், தமிழ், நாயனா சாய், ஸ்வேதா டோராதி, ஷாக் அருணாசலம், ரங்கா ஆகியோரின் அடிப்பில் வெளிவந்திருக்கும் படம், “ஐ.பி.180”. டேனியல் பாலாஜி பிரபலமான ரவுடி. அரசியல்வாதியான கே.பாகியராஜ்க்கு மிகவும் விசுவாசமானவர். பாக்கியராஜுக்காக எல்லைமீறி செயலாற்றக்கூடியவர் டேனியல் பாலாஜி. பாக்கியராஜின் மகள் ஒரு விபத்தில் இறந்து போய்விடுகிறாள். அவளது உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையிலுள்ள பிணவறையில் வைத்திருக்கிறார்கள். அதே மருத்துவமனையில் நேர்மையாக பணியாற்றுபவர் மருத்துவர் தன்யா ரவிச்சந்திரன். தனது மகளின் உடலை பிரேத பரிசோதனை செய்யக்கூடாது என்று மருத்துவர் தன்யாவிடம் கெஞ்சுகிறார். ஆனால் சட்டப்படி பிரேத பரிசோதனை செய்த பிறகுதான் உடலை தருவோம் என்று தன்யா கூறிவிடுகிறார். அதனால் தனக்காக எதையும் செய்துதரக்கூடிய டேனியல் பாலாஜியிடம் தனது மகளின் உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் வாங்கித் தரும்படி கேட்கிறார். டேனியல் பாலாஜியும் மருத்துவர் தன்யாவிடம் பிரேத உடலை கேட்க அவர் மறுக்க கடைசியில் கொலை மிரட்டல் விடுத்து உடலை கேட்கிறார். அந்த கொலை மிரட்டலுக்கெல்லாம் பயப்படாமல் தன்யா பிடிவாதமாக உடலை கொடுக்க மறுத்துவிடுகிறார். இறுதியில் என்ன ஆனது? என்பதுதான் கதை. படத்தின்  முதல் பாதியில் காட்சிகள் பதற்றத்தை ஏற்படுத்துகின்றன. இடைவேளைக்கு முன் கதாநாயகி தன்யா பேசும் வசனம் புதுமையாகவும், ரசிக்கும்படியும் உள்ளது. மறைந்த நடிகர் டேனியல் பாலாஜியின் கடைசிபடம் இதுதான். வில்லத்தனத்தின் உச்சத்தைக் காட்டி நடித்துள்ளார். தன்யா ரவிச்சந்திரன் ஒரு நேர்மையான மருத்துவர் எப்படி இருக்க வேண்டும் என்பதை தனது நடிப்பின் மூலம் மருத்துவர்களுக்கு முன் உதாரணமாக நடித்துக் காட்டியுள்ளார். அமைதியான ஆக்ரோஷத்தை முகத்தில் காட்டியது அருமை. அருள்தாஸ், தமிழ் ஆகியோரும் நல்ல நடிப்பை கொடுத்துள்ளனர். இரண்டாம் பாதியில் டேனியல் பாலாஜியை கடத்த போடும் திட்டமும் நன்றாக இருந்தது. ஜிப்ரானின் பின்னணி இசை படத்திற்கு தேவையான பதற்றத்தை கூட்டுகிறது. ராமலிங்கத்தின் ஒளிப்பதிவும், இளையராஜா சேகரின் படத்தொகுப்பும் படத்திற்கு பலம் சேர்க்கின்றன. இயக்குனர் ஜெ.பி.ஒரு பழிவாங்கும் கதையை வித்தியாசமான முறையில் கொடுக்க முயற்சி செய்து, அதில் வெற்றி பெற்றுள்ளார். உச்சக்கட்ட காட்சியின் முடிவை வித்தியாசமாக காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குநர் ஜெ.பி. கொடூரமாக கொலை செய்யும் ஒரு ரவுடி பிரேத பரிசோதனையை பார்த்து திருந்துவான் என்பதை நம்பமுடியவில்லை, என்றாலும் நம்புவோமாக.