ஒகேனக்கல் இரண்டாவது கூட்டு குடிநீர் திட்டத்தை எதிர்க்க கர்நாடகத்திற்கு எந்த உரிமையும் கிடையாது!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர்  எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை:

தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர் திட்டமான ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 2008ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

தர்மபுரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நிலத்தடி நீரில் புளோரைடு அதிக அளவில் கலந்திருப்பதால் அந்த குடிநீரை உட்கொள்ளும் அப்பகுதி மக்களுக்குப் பல், எலும்பு மற்றும் சிறுநீரக  பிரச்சினைகள் ஏற்படுவதாகக் கருதி ஒகேனக்கலில் வரும் தண்ணீரைக் குடிநீராக்கி அதனைத் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு விநியோகம் செய்வதே ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் அத்தியாவசிய பணியாகும்.

தற்போது ஒகேனக்கல் இரண்டாவது கூட்டு குடிநீர் திட்டத்தைத் தமிழக முதலமைச்சர் திரு மு. க. ஸ்டாலின் அவர்கள் கடந்த வாரம் 4600 கோடி ரூபாய் மதிப்பில் நிறைவேற்றப்படும் என்று அறிவித்தார்கள். இந்த அறிவிப்பையடுத்து ஒகேனக்கல் இரண்டாவது கூட்டு குடிநீர் திட்டத்தைக் கர்நாடக அரசு சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிர்க்கும் என்று அம்மாநில முதலமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளது கண்டனத்திற்குரியது.

 ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது கர்நாடக அரசின் வரம்பு மீறிய செயலாகும். ஜப்பான் நாட்டுக் கூட்டுறவு வங்கி உதவியுடன் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்த திட்டம் முற்றிலும் தமிழக எல்லைக்குள் செயல்பட்டுவரும் திட்டமாகும். இந்த திட்டத்தைக் கர்நாடக அரசு எதிர்ப்பதற்கு எந்தவித தார்மீக உரிமையும் இல்லை.

எனவே தமிழக அரசு இந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி