கமல்ஹாசன் தயாரிப்பில் மணிரத்தினம் இயக்கத்க்தில் கமல்ஹாசன், சிம்பு, நாசர், திரிஷா, ரவி மோகன், கவுதம் கார்த்திக், ஐஸ்வரியா லட்சுமி, ஜோஜூ ஜார்ஜ், அபிராமி, அசோக் செல்வன், வையாபுரி, சினி ஜெயந்த், வடிவுக்கரசி, மகேஷ் மஞ்சுரேகர், பகவதி பெருமாள், குமாரவேல் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “தக் லைப்”. டில்லியில் பலம் பொருந்திய தாதாவாக இருக்கும் கமல்ஹானின் வீட்டை போலீஸ் முற்றுகையிட்டு துப்பாக்கி சூடு நடத்துகிறது. பதிலுக்கு கமல்ஹாசனும் அவரது அடியாட்களும் போலீஸ் மீது துபாக்கி சூடு நடத்துகிறார்கள். கமல்ஹாசனின் துப்பாக்கியிலிருந்து வந்த குண்டு நாளிதழ்கள் போடவந்த குமாரவேலுவின் நெஞ்சை துளைத்து விடுகிறது. அவர் அங்கேயே மரணமடைகிறார். குமாரவேலுவின் உடல் அருகே சிறுவனாக இருக்கும் சிம்பு “அப்பா அப்பா” என்று அழுகிறார். இதைபார்த்த கமலஹாசன் “போலீசை நான் சுடும்போது உனது அப்பா குறுக்கே வந்துவிட்டார். நான் உன்னை காப்பாற்றுகிறேன்” என்று சிறுவன் சிம்புவை தூக்கிக் கொண்டு செல்கிறார். அப்போது அச்சிறுவன் “சந்திரா சந்திரா” என்று கூப்பிடுகிறார். “யார் அந்த சந்திரா” என்று கமல்ஹாசன் கேட்கிறார். “அது என் தங்கை” (ஐஸ்வரியா லட்சுமி) என்று சிறுவன் சிம்பு சொல்ல, “நான் அவளை தேடி கண்டுபிடித்து உன்னிடம் சேர்க்கிறேன்” என்று சொல்லிவிட்டு சிறுவன் சிம்புவை வளர்த்து வருகிறார். சொன்னபடி ஐஸ்வரியா லட்சுமியை சிம்புவிடம் சேர்த்தாரா? இல்லையா? என்பதுதான் கதை. மேலோட்டமாக படத்தை ரசிக்கும் ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு வரப்பிரசாதம். இசையும் ஒளிபதிவும் பாடலும் சண்டைக்காட்சிகளும் மிகமிக அற்புதமாக படமாக்கப்பட்ட்ருக்கிறது. ஆனால் கதையின் கரு விரசமாக உள்ளது. சிம்புவின் தங்கை சந்திராவை (ஐஸ்வரியா லட்சுமி) தேடி விலைமாது விடுதிக்கு செல்கிறார் கமல்ஹாசன். அங்கு திரிஷாவை பார்க்கிறார். “உன் பெயர் சந்திராவா?” என கேட்கிறார். “நான் சந்திரா இல்லை இந்திராணி” என்று திரிஷா சொல்கிறார். “சரி என்னுடன் வா” என்று அழைத்துச் சென்று அவளுடன் உல்லாச வாழ்க்கை நடத்துகிறார் கமல்ஹாசன். தாலி கட்டிய மனைவி அமிராமியிடம் “சிலருக்கு சர்க்கரை வியாதி, ரத்த கொதிப்பு நோய் இருப்பதுபோல் எனக்கு பெண்ணாசை நோய் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளேன்” என்று சொல்லி சமாளிக்கிறார் கமல்ஹாசன். இது ஒருபுறமிருக்க சிம்பு “எனக்காகத்தானே தங்கையை தேடி போனார். அவள் கிடைக்கவில்லை என்பதால்தானே திரிஷாவை கூட்டிவந்தார். அப்படி என்றால் திரிஷாவை எனக்குத்தானே தர வேண்டும்?”. என்று வாதிட்டு திரிஷாவுடன் வாழ்கை நடத்துகிறார் சிம்பு. இதை பார்த்த விமர்சகர்கள் தலையில் அடித்துக்கொள்ளாமல் வேறென்ன சொல்ல முடியும். பெண்ணாசையை மைய்யக் கருவாக கொண்டு படமாக்கப்பட்டிருக்கிறது. அரிப்பு எடுத்தவன் நகம் நோக சொறிந்து கொள்வதைப் போல், படம் முழுக்க பிராண்டி வைத்திருக்கிறார் மணிரத்தினம். கமல்ஹாசன், சிம்புவின் நடிப்பு உச்சத்தை தொட்டிருக்கிறது. நாசர், வடிவுக்கரசி, திரிஷா, ரவி மோகன், கவுதம் கார்த்திக், ஐஸ்வரியா லட்சுமி, ஜோஜூ ஜார்ஜ், அபிராமி, அசோக் செல்வன், வையாபுரி, சினி ஜெயந்த், மகேஷ் மஞ்சுரேகர், பகவதி பெருமாள், குமாரவேல் ஆகியோர் தங்களின் கதாபாத்திரத்தை உள்வாங்கி சிறப்பாக நடித்துள்ளார்கள். அருமையான ஒளிப்பதிவும் இசையும் படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மானின் இசை திரையரங்கில் ரசிகர்களை துள்ளாட்டம் போட வைக்கிறது. வலுவான அடித்தளம் இல்லாத அழகான மணிமண்டபம் “தக் லைப்”.
“தக் லைப்” திரைப்பட விமர்சனம்
