மேக்கேதாட்டு அணைத் திட்ட அறிக்கையை திருப்பி அனுப்ப காவிரி உரிமை மீட்புக் குழு தீர்மானம்

காவிரி உரிமை மீட்புக் குழுக் கூட்டம் 16.07.2021 அன்று மாலை தஞ்சையில் ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், உரிமை மீட்புக் குழுவின் பொருளாளர் திரு. த. மணிமொழியன், தமிழர் தேசிய முன்னணிப் பொதுச்செயலாளர் மருத்துவர் இலரா. பாரதிச்செல்வன், தமிழக விவசாயிகள் சங்கத் தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. ப. செகதீசன், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் திரு. நா. வைகறை, இந்திய சனநாயகக் கட்சி தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. சிமியோன் சேவியர்ராசு, தமிழக உழவர் முன்னணி திருச்சி பொறுப்பாளர்கள் மூ.த. கவித்துவன் மற்றும் வே.க. இலக்குவன், காவிரி உரிமை மீட்புக் குழு நிர்வாகிகள் பழ. இராசேந்திரன், வெள்ளாம்பெரம்பூர் துரை. இரமேசு, ஐம்பதுமேல்நகரம் தி. செந்தில்வேலவன், பூதலூர் சுந்தரவடிவேல், நடுக்காவேரி செந்தில் மற்றும் பனவெளி, நாகத்தி உழவர் அமைப்புப் பொறுப்பாளர்கள், விசிறி சாமியார் திரு. முருகன் உள்ளிட்ட பலரும் கூட்டத்தில் பங்கேற்றனர். மேக்கேதாட்டில் காவிரியின் குறுக்கே அணைகட்டி, தமிழ்நாட்டு வேளாண்மையையும் தமிழ்நாட்டு மக்களின் குடிநீரையும் தடை செய்ய முரட்டுத் தனமாக செயல்படும் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவின் கொடும்பாவியை எரிக்கும் போராட்டத்தில் பங்கேற்ற – கொடும்பாவியை எரித்த உழவர்கள் மற்றும் தமிழின உணர்வாளர்கள் அனைவரையும் காவிரி உரிமை மீட்புக் குழு பேரவை பாராட்டியது. அப்போராட்டத்தில் கைது செய்யப்பட்ட அனைவர்க்கும் உரிமை மீட்புக் குழு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. கொடும்பாவி எரிப்புச் செய்தியை விரிவாக மக்களிடம் கொண்டு சேர்த்த காட்சி மற்றும் அச்சு ஊடகத்தார்க்கும், சமூக வலைத்தள செயல்பாட்டாளர்களுக்கும் காவிரி உரிமை மீட்புக் குழு நெஞ்சு நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது, காவிரி உரிமை மீட்புக் குழுப் பேரவை பின்வரும் தீர்மானங்களை நிறைவேற்றியது. 

 

  1. ஒன்றிய நீர்வளத்துறை பெற்ற மேக்கேதாட்டு அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை (DPR-ஐ)க் கர்நாடகத்திற்கே திருப்பி அனுப்பிவிட வேண்டும்!

கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே சட்டவிரோதமாக மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு மறைமுக ஒப்புதல் அளிக்கும் வகையில் மோடி அரசின் நீர்வளத்துறை 2018ஆம் ஆண்டு மேற்படி அணைக்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரித்து அனுப்புமாறு கர்நாடகத்திடம் கோரி, அந்த அறிக்கையைப் பெற்றது. ஆனால், அந்த விரிவான திட்ட அறிக்கையை (DPR-ஐ) அப்படியே தன்னிடம் வைத்துக் கொண்டு, மேக்கேதாட்டு அணையை அனுமதிக்க மாட்டோம் என்று 16.07.2021 அன்று புதுதில்லியில் தங்களிடம் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் உறுதி அளித்ததாக தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிக்குழுவின் தலைவரும், தமிழ்நாட்டின் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் அவர்கள் புதுதில்லியில் செய்தியாளர்களிடம் கூறியது எந்த அளவுக்கு நம்பகத்தன்மை கொண்டது என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்த வாக்குறுதியை நம்பி தமிழ்நாட்டு அமைச்சர் துரைமுருகன், “ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரின் பதில் திருப்தி அளிக்கிறது; வெற்றி என்று கருதுகிறோம்” என்று தில்லிச் செய்தியாளர் சந்திப்பில் கூறியது காவிரிப் பாசன உழவர்களுக்குக் கவலை அளிக்கிறது. கடந்த காலங்களில் தி.மு.க. ஆட்சியும், அ.இ.அ.தி.மு.க. ஆட்சியும் காவிரி உரிமையை மீட்டுவிட்டதாகக் கொண்டாடிய வெற்றி விழாக்களைக் கண்டும், நம்பியும் ஏமாந்துள்ள நிகழ்வுகள் மனக்கண்ணில் நிழலாடுகின்றன. அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழுவினர் தலைமை அமைச்சர் மோடியைச் சந்தித்து மனுக் கொடுக்க அனுமதி கேட்டும் கிடைக்கவில்லை என்றும், அதனால் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை மட்டும் சந்தித்துத் திரும்பினர் என்றும் அப்போதே செய்திகள் வெளியாயின. ஆனால் அதே நாளில் (16.07.2021) மாலை கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை மோடி சந்தித்துள்ளார். மோடி அவர்களைச் சந்தித்த பின் புதுதில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, “மேக்கேதாட்டு அணைகட்டும் கர்நாடகத் திட்டத்தை பிரதமர் ஏற்றுக் கொண்டார்” என்று கூறினார். இதுவரை மோடி அரசு, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு முழுநேரத் தலைவர், தனி அலுவலகம், தன்னாட்சி அதிகாரம் எதையும் வழங்காமல், ஒன்றிய நீர்வளத்துறையின் ஒட்டுத் திண்ணையில் செயல்படும் வகையில் வைத்துள்ளது. ஒன்றிய நீர்வளத்துறைத் தலைவரின் ஓய்வு நேர உபரிப் பணியாக ஒதுக்கி வைத்துள்ளது. கடந்த காலங்களில் அப்போதைய ஒன்றியக் காங்கிரசு ஆட்சி, காவிரியின் குறுக்கே சட்ட விரோதமாக ஏமாவதி, ஏரங்கி, கபினி, சுவர்ணவதி, யாக்காட்சி போன்ற அணைகளைக் கட்ட அனுமதித்த பட்டறிவு நமக்கு இருக்கிறது. இந்தப் பட்டறிவு 1970களில் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ஏற்பட்டது என்பதை இப்போதுள்ள தி.மு.க. ஆட்சி பாடமாகக் கொள்ள வேண்டும் என்று கனிவுடன் கேட்டுக் கொள்கிறோம். மேக்கேதாட்டில் அணைகட்டி விட்டால் வெள்ளக் காலத்தில் கூட ஒரு சொட்டுத் தண்ணீரும் மேட்டூர் அணைக்கு வராது. காவிரியில் ஆண்டுதோறும் மிகை வெள்ளம் கர்நாடகத்திலிருந்து வெளியேறுவதில்லை. ஐந்தாண்டு அல்லது எட்டாண்டுக்கு ஒருமுறை மிகை வெள்ளம் வெளியேறும். அதுவும் பெரும்பாலும் 50 ஆ.மி.க.(TMC)வுக்கு மேல் வெள்ள நீர் கலப்பதில்லை. மேக்கேதாட்டு அணையின் கொள்ளளவுத் திட்டம் 67.16 ஆ.மி.க. (டி.எம்.சி.). எனவே, வெள்ள நீர் கூட மேட்டூருக்கு வராது. எனவே தமிழ்நாடு அரசு மேக்கேதாட்டு அணைத் திட்டத்தைத் தடுக்க பின்வரும் கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு கேட்டுக் கொள்கிறது. 

  1. ஒன்றிய நீர்வளத்துறை – தான் கோரிப் பெற்ற மேக்கேதாட்டு அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை (DPR) அனுமதி மறுத்து, உடனடியாகக் கர்நாடக அரசுக்குத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும். 

 

  1. மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கான கட்டுமானப் பொருட்கள் அந்த இடத்தில் குவிக்கப்படுவதாக செய்தி வெளியாகி, தென் மண்டல தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு நடந்தது. அணை கட்டுவதற்கான தொடக்கப் பணிகளும், கட்டுமானப் பொருள் குவிப்பும் நடந்துள்ளதனவா என்பதை நேரில் கண்டறிய, வல்லுநர் ஆய்வுக் குழு ஒன்றை தமிழ்நாடு அரசு அனுப்பி அறிக்கை பெற வேண்டும். அவ்வாறு கட்டுமானப் பொருட்கள் அங்கே குவிக்கப்பட்டிருந்தால், உடனடியாக அதை வைத்து உச்ச நீதிமன்றத்தில் தடையாணை கோர வேண்டும். 

 

  1. கடந்த காலங்களில் இந்திய அரசின் அனுமதி பெறாமலும், தமிழ்நாட்டு எதிர்ப்பைப் பொருட்படுத்தாமலும் ஏமாவதி, ஏரங்கி, கபிணி போன்ற அணைகளைக் கர்நாடக அரசு கட்டியிருப்பதால், மேக்கேதாட்டிலும் அவ்வாறு அணை கட்டக்கூடிய அபாயம் இருக்கிறது. தமிழ்நாடு அரசு, சட்ட வழிப்பட்ட எதிர்ப்புகளை ஒருபக்கம் தொடர வேண்டும். அதேவேளை, காவிரி நீர் என்பது டெல்டா மாவட்ட வேளாண் பாசனத்திற்கு மட்டும் உரிய நீரல்ல – 25 மாவட்டங்களுக்குக் குடிநீராகவும், காரைக்கால் உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்குப் பாசன நீராகவும் உள்ளது. 

 

எனவே, ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நீதிக்கான போராட்டத்தை நடத்த வேண்டிய தேவை இருக்கிறது. ஆளுங்கட்சி என்ற முறையில் தி.மு.க., அனைத்துக் கட்சி மற்றும் அனைத்து உழவர் அமைப்புக் கூட்டத்தை நடத்தி, அதில் “காவிரிக் காப்புப் போராட்ட நாள்” என்று ஒரு நாளை தேர்வு செய்து, குமரிமுனையிலிருந்து கும்மிடிப்பூண்டி வரை ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் “மேக்கேதாட்டு அணையைத் தடுப்போம்! காவிரியைக் காப்போம்!” என்ற முழக்கத்தின் கீழ் ஆர்ப்பாட்டங்களும், பேரணிகளும் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டுமென்று காவிரி உரிமை மீட்புக் குழு கனிவுடன் கேட்டுக் கொள்கிறது.