கே.ஜே.கணேஷ் தயாரிப்பில் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் குமரன் தங்கராஜன் , பாயல் ராதாகிருஷ்ணன், ஜி.எம்.குமார், குமாரவேல், பாலசரவணன், வினோத் சாகர், லிவிங்ஸ்டன், வினோத் முன்னா, ஷிவா அரவிந்த், கௌதம் சுந்தரராஜன், அர்ஜை ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “குமாரசம்பவம்”. குமரன் தங்கவேல் திரைப்பட இயக்குநராக வேண்டுமென்ற லட்சியத்தோடு பல தயாரிப்பாளர்களிடம் சென்று கதை சொல்கிறார். ஆனால் யாரும் அவர் சொல்லும் கதைக்கு தயாரிக்க முன்வரவில்லை. இறுதியாக தன் கதைக்கு தாமே படம் எடுக்க முடிவெடுக்கிறார். அதற்கு இரண்டு கோடி ரூபாய் தேவைப்படுகிறது. அந்தப்பணத்துக்காக தன் தாத்தா ஜி.என்.குமாரிடம் சென்று இந்த வீட்டை விற்று படமெடுக்க பணம் தரும்படி கேட்கிறார். அதற்கு ஜி.என். குமார் “இது என்னுடைய சொந்த சம்பாத்தியத்தில் கட்டிய வீடு. இதை விற்க மாட்டேன் என்று கூறிவிட்டு பணம் கொடுக்க மறுத்துவிடுகிறார். அந்த வீட்டின் ஒரு பகுதியில் சமூக போராளி குமரவேல் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். அவரின் பேசைக் கேட்டுதான் தாத்தா வீட்டை விற்க மறுக்கிறார் என நினைத்து குமரன் தங்கராஜன் குமரவேலுவுடன் சண்டை போடுகிறார். இதற்கிடையில் தாத்தா ஜி.என்.குமாரும் வயது மூப்பின் காரணமாக இறந்து போகிறார். அவர் கட்டிய வீடு தற்போது ரூ. 20 கோடிக்கு மதிப்புமிக்கதாயிருக்கிறது. அந்த வீட்டை விற்க குமரன் தங்கராஜ் முற்படும்போது தாத்தா எழுதிய உயில் கிடைக்கிறது. அந்த உயில்படி வாடகைக்கு குடியிருந்த குமரவேலுவுக்கும் ஒரு ப்ங்கு சேரவேண்டும் என்று எழுதியிருக்கிறது. இதற்கிடையில் போராளி குமரவேலுவும் கொலையுண்டுபோக அவரை கொன்றது குமரன் தங்கராஜனாக இருக்கலாம் என்ற சந்தேகம் காவல்த்துறையினருக்கு ஏற்படுகிறது. ஆனால் அவரை நான் கொலை செய்யவில்லை என்று மறுக்கிறார். குமரவேல் போராளியாக இருப்பதால் அவரால் பாதிக்கப்பட்ட பல முதலாளிகளில் ஒருவர் கொன்றிருக்கலாம் என்று காவல்த்துறையினர் விசாரணை மேற்கொள்கிறார்கள். குமரவேலுவை கொன்றது யார் என்பதை கண்டுபிடிக்கும் துப்பறிதல் படமாக இயக்கியிருக்கும் இயக்குநர் பாலாஜி வேணுகோபால் பாராட்டுதலுக்குரியவர். பாண்டியன் ஸ்டோர்ஸ் தொலைக்காட்சி நெடுந்தொடர் மூலம் புகழ்பெற்ற குமரன் இப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். இயக்குநராக முயன்று கொண்டிருக்கும் காட்சிகள், கொலையை விசாரிக்கும் காட்சிகள், காதல் காட்சிகள், நண்பர்களோடு சேர்ந்து கலாட்டா செய்யும் காட்சிகள் மூலம் தன் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். வெள்ளித்திரை இனி அவரை வரவேற்கும் என்று நம்புவோமாக. அவருக்கு இணையாக பாயலும் ஈடுகொடுத்து நடித்துள்ளார். குமரவேலுவின் அமைதியான நடிப்பு கொடுத்து அசத்தியிருக்கிறார். இதில் நடித்த மற்ற நடிகர்கள் அனைவரும் கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து தங்களது திறமைகளை காட்டியுள்ளார்கள். பாடலும் கேட்கும்படி உள்ளது. ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தாகியுள்ளது.
“குமாரசம்பவம்” திரைப்பட விமர்சனம்
