கே ஜே பி டாக்கீஸ் சார்பில் தயாரிப்பாளர் கே. ஜே. பாலாமணி மார்பன் தயாரிப்பில் இயக்குநரும், நடிகருமான விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் வழங்கும் ‘ஹாட் ஸ்பாட் 2 ‘ மச் ‘ திரைப்படம் ஜனவரி 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. இந்நிகழ்வில் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் பேசுகையில், ” ஹாட்ஸ்பாட் டூ மச் படம் வெளியாகி இன்றுடன் ஆறு நாள் ஆகிறது. அதற்குள் ஏன் சக்சஸ் மீட்? என கேட்டார்கள். ஹாட்ஸ்பாட் படத்தின் முதல் பாகம் குறைவான திரையரங்குகளில் வெளியாகி, ஐந்து வாரங்கள் வெற்றிகரமாக ஓடியது. பெரும் வரவேற்பும் இருந்தது. ஹாட்ஸ்பாட் படத்தின் முதல் பாகத்தின் ஒட்டுமொத்த வசூல் எவ்வளவோ.. அதைவிட இரண்டு மடங்கு இப்படம் வெளியான நான்கு நாளில் வசூலித்திருக்கிறது. அந்த வகையில் இந்தப் படம் எங்களுக்கு வெற்றி தான். அதனால் தான் இந்தப் படத்திற்கு ஆறாவது நாளில் நம்பிக்கையுடன் வெற்றி விழாவை ஒருங்கிணைத்திருக்கிறோம். இந்த வெற்றிக்கு காரணமான ரசிகர்கள்- ஊடகங்கள் – விநியோகஸ்தர்கள்- திரையரங்கு உரிமையாளர்கள் – உள்ளிட்ட அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ***********.
இப்படத்தில் என்னுடன் பணியாற்றிய படத்தொகுப்பாளர் – ஒளிப்பதிவாளர்கள்- கலை இயக்குநர் – இசையமைப்பாளர் – தயாரிப்பு நிர்வாகி – நடிகர்கள் ராபின், அஸ்வின் குமார், ஆதித்யா பாஸ்கர் ரக்சன், பிரியா பவானி சங்கர், ஆதித்யா கதிர், பவானி ஸ்ரீ, பிரிகிடா சகா, சஞ்சனா திவாரி மற்றும் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னுடைய எல்லா திரைப்படங்களிலும் முதல் நன்றி ‘குறிஞ்சி’ என்பவருக்கு இருக்கும். இவர்தான் 2013 ஆம் ஆண்டில் எனக்கு இரண்டு லட்ச ரூபாயை கொடுத்து ‘முதல் கனவே’ எனும் என்னுடைய முதல் குறும்படத்தை தயாரித்தவர். அவர் கொடுத்த ஊக்கம் தான் இன்று ஹாட்ஸ்பாட் டூ மச் வரை தொடர்கிறது. அவருக்கு நன்றி தெரிவிப்பது என்னுடைய அனைத்து படங்களிலும் தொடரும்.
இப்படத்தின் விமர்சனங்களில் நாங்கள் இரண்டு குறிப்பிட்ட நட்சத்திரங்களின் ரசிகர்களைத்தான் சுட்டிக் காட்டி இருக்கிறோம் என்று இடம்பெற்று இருந்தது. இது தவறு. பொதுவாகவே ரசிகர்களைப் பற்றிய பார்வை தான் இது. அதனை இரண்டு நட்சத்திரங்களின் வழியாக சொன்னால் நன்றாக இருக்கும் .. எளிதாக புரியும் என்பதாகத்தான் விவரித்து இருக்கிறோம்.
டோனி ரசிகர்கள் கோலியை வசைபாடுவதும், கோலியின் ரசிகர்கள் தோனியை வசை பாடுவதும் இணையத்தில் தொடர்கிறது. ஒரு இசை அமைப்பாளரின் ரசிகர்கள் மற்றொரு இசையமைப்பாளரை விமர்சிக்கிறார்கள். இவை அனைத்தையும் ஒன்றிணைத்து தான் நாங்கள் ரசிகர்களின் கோணத்தில் அவர்களுடைய உணர்வாக பேசி இருக்கிறோமே தவிர.. குறிப்பிட்ட இரண்டு நட்சத்திரங்களின் ரசிகர்களை பற்றி நாங்கள் ஒருபோதும் எங்கும் குறிப்பிடவில்லை.
அதே சமயத்தில் தம்பி ராமையா பேசும் வசனங்கள் தொடர்பாகவும் இணையத்தில் ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் விமர்சனங்கள் இடம் பிடித்திருக்கிறது. ஒரு படம் பிடித்திருக்கிறது என்பதும் ஒரு படம் பிடிக்கவில்லை என்பதும் படத்தை பார்த்த ஒவ்வொரு ரசிகர்களின் தனிப்பட்ட கருத்து. இதை நாங்கள் மதிக்கிறோம். வரவேற்கிறோம். ஆனால் பெண்ணியவாதிகள் சிலர் தங்களின் கருத்துக்களை இணையத்தில் பகிர்ந்து கொள்கிறார்கள். ஆனால் இவர்கள் இந்த திரைப்படத்தை முழுமையாக பார்க்காமல்.. இணையத்தில் வெளியான துண்டு காணொளிகளை மட்டும் பார்வையிட்டு சில சூடோ ஃபெமினிஸ்ட்டுகள் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறார்கள். இது தவறு. அவர்கள் இந்தப் படத்தை முழுமையாக பார்த்துவிட்டு தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
ஒரு படைப்பை பற்றிய விமர்சனங்களை முன் வைப்பதற்கு எப்படி பார்வையாளர்களுக்கு முழு உரிமை இருக்கிறதோ… அதே போல் ஒரு படைப்பை எப்படி வழங்கிட வேண்டும் என்பதில் படைப்பாளனாகிய எனக்கும் முழு உரிமை உள்ளது.
நான் என்னுடைய மனசாட்சிக்கு உட்பட்டு எனக்குத் தெரிந்த வகையில் நிறைய மக்களுடன் விவாதித்து அதனை எப்படி குழப்பம் இல்லாமல் தெளிவாக மக்களுக்கு வழங்கிட இயலும் என்பதையும் எப்படி சமூக பொறுப்புடன் இதனை சொல்ல வேண்டும் என்பதையும் மனதில் வைத்து தான் இந்த படைப்பை உருவாக்கி இருக்கிறேன். ஒரு படைப்பாளனாக ஒரு படைப்பை உருவாக்குவதற்கு எனக்கு முழு சுதந்திரமும், உரிமையும் உண்டு என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்” என்றார்.
தயாரிப்பாளர் – நடிகர் கே.ஜே. பாலாமணி மார்பன் பேசுகையில், ” படம் வெளியாகி ஆறாவது நாளில் வெற்றி விழா கொண்டாடும் அளவிற்கு இப்படத்தை மக்கள் திரையரங்குகளில் பார்த்து கொண்டாடுகிறார்கள். வரவேற்றிருக்கிறார்கள். இதற்கு ஊடகங்களும், விமர்சனங்களும் எங்களுக்கு பேராதரவை அளித்ததுடன் ரசிகர்களை திரையரங்கிற்கு அழைத்து வந்தது. இதனால் படத்தை வெற்றி பெறச் செய்த அனைவருக்கும் முதலில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் இப்படத்தின் கதை மீது நம்பிக்கை வைத்திருந்தாலும் படத்திற்கு இப்படி ஒரு வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. படம் வெளியான நான்கு நாட்களில் சென்னை, கோவை உள்ளிட்ட மாநகரங்களில் 90 சதவீதத்திற்கும் மேலான பார்வையாளர்கள் திரையரங்குகளுக்கு வருகை தந்திருந்தனர். தமிழகத்தின் தென்பகுதிகளில் 70 சதவீதத்திற்கும் மேலான பார்வையாளர்கள் திரையரங்குக்கு வருகை தந்திருந்தனர்.
அத்துடன் நாங்கள் இப்படத்திற்கான வரவேற்பு மெதுவாக நடைபெற்று அதன் பிறகு விரிவடையும் என எதிர்பார்த்தோம். ஆனால் படம் வெளியான இரண்டாவது நாளே அனைத்து திரையரங்குகளிலும் பார்வையாளர்கள் நிரம்பி வழிந்தனர்.
படம் வெளியான பிறகு நாங்கள் 15 திரையரங்குகளுக்கு ரசிகர்களின் வரவேற்பை காண சென்று இருந்தோம். அனைத்து திரையரங்குகளிலும் ரசிகர்களின் ரசனையும் , வரவேற்பும் ஒரே மாதிரியானதாக இருந்தது. இதன் மூலம் இப்படத்தை மக்கள் கொண்டாடுகிறார்கள் என்பதை நேரில் கண்டு மகிழ்ச்சி அடைந்தோம்.
இப்படத்தின் வெற்றிக்காக வழி விட்ட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு அவர்களுக்கு இந்த தருணத்தில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
எங்கள் திரைப்படம் கிட்டத்தட்ட 200 திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இதனை சாத்தியப்படுத்திய விநியோகஸ்தர் ‘பைவ் ஸ்டார்’ செந்தில் மற்றும் அவரது குழுவினருக்கு எங்கள் நிறுவனத்தின் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

