சினிமாவில் கமிஷன்களை ஒழிக்க வேண்டும்: ‘ரெட் லேபில்’ தயாரிப்பாளர் லெனின்

“ரெட் லேபில்” படத்தை கே .ஆர். வினோத் இயக்கியுள்ளார். ரெவ்ஜென் பிலிம் பேக்டரி சார்பில் லெனின் தயாரித்துள்ளார், இப்படத்தின் கதையை பொன்.பார்த்திபன் எழுதியுள்ளார், சதீஷ் மெய்யப்பன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கைலாஷ் மேனன் இசையமைத்துள்ளார். லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பு செய்துள்ளார். நாயகனாக லெனின், நாயகியாக அஸ்மின் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குநர் ஆர். வி. உதயகுமார் நடித்துள்ளார். கெளரவ வேடத்தில் முனிஷ்காந்த் நடிக்க,இயக்குநர் அனுமோகன் தருண், கெவின், கார்மேகம் சசி,அனுஷா ஆகியோரும் நடித்துள்ளனர். வருகிற பிப்ரவரி 6ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் அறிமுக நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளரும் கதாநாயகனாக நடித்துள்ள  லெனின் பேசும் போது,கூறியதாவது: “இந்த சினிமாவில் எதற்கெடுத்தாலும் கமிஷன் என்கிற போக்கு இருக்கிறது. இது மிகவும் தவறானது. இதைப் பார்த்த போது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. சினிமாவில் கமிஷன்கள் ஒழிக்கப்பட வேண்டும்.*********

படம் தொடங்கும்போதே பெப்ஸி பிரச்சினை வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. தொடர்ந்து போன்கள் வந்து கொண்டே இருந்தன. ஆறாவது நாள் நாங்கள் படத்தை நிறுத்தி விடுவோம் என்றார்கள். படப்பிடிப்பை நிறுத்தி விடுவோம் என்றார்கள் .எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.நாம் முதல் போட்டு படம் எடுக்கிறோம்.அவர்கள் என்ன நிறுத்துவது என்று நானே நிறுத்திவிட்டேன். ஆறாவது நாளே படப்பிடிப்பு நின்று விட்டது. பலருக்கும் இந்தப் படம் தொடருமா என்கிற சந்தேகம் வந்திருக்கும்.  இப்படி 2023 இல் கதை விவாதத்தில் தொடங்கி 2026 வெளியாகிற தேதி வரை ஏதாவது தடைகள், முரண்பாடுகள் இருந்து கொண்டே தான் இருந்தன. இருந்தாலும் இயக்குநரும் மற்றவர்களும்  இணைந்து இந்தப் படத்தை முடித்து இருக்கிறோம். சினிமாவில் ஒரு தயாரிப்பாளர் செலவு செய்வது அனைத்தும் செலவுக் கணக்கில் தெரியுமா என்றால் தெரியாது .ஒரு படத்திற்கு  5 கோடி செலவு செய்கிறார்கள் என்றால் பத்திலிருந்து பதினைந்து சதவீதம் செலவில் வராது .கமிஷனாகப் போய் விடுகிறது. இப்படி நாலு ஷெட்யூலுக்கு நாலு யூனிட் மாற்றினேன். முதலில் ஒரு லட்சம் கேட்டார்கள், பிறகு 90 ஆயிரம் , பிறகு 80 ஆயிரம், 70 ஆயிரம் என்று மாறிக்கொண்டே போனது.இது எப்படி இடையில் அவ்வளவு கமிஷன் போகிறது. சம்பளம் வாங்குவது மட்டும் போதாதா? கமிஷன் ஏன் வாங்குகிறார்கள்? சினிமாவில் கமிஷனை ஒழிக்க வேண்டும்.  சங்கர் சார் லஞ்சத்தை ஒழிப்பதற்குப் படம் எடுத்தது மாதிரி இதையும் ஒழிக்கப் படமாக எடுக்க வேண்டும். இந்த கமிஷன் சினிமாவில் வெகு சகஜமாக இருக்கிறது .நான் கஷ்டப்பட்டு சம்பாதித்து படம் எடுக்க வந்தால் இடையில் உள்ளவர்கள் யாராவது சாப்பிட நினைக்கிறார்கள். நான்  சம்பாதித்த காசுக்கு எனக்கு கணக்கு வேண்டும்.இதை நான் விடமாட்டேன். இன்னொரு அனுபவம். ஒரு குணச்சித்திர நடிகரை அணுகிய போது பெரிய சம்பளம் கேட்டார். அது அவரது விருப்பம் பரவாயில்லை.ஆனால் பயணப்படியாக கிலோமீட்டருக்கு இருபது ரூபாய் கேட்டார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏன் நான் கொடுக்க வேண்டும்? அதுபோல உதவியாளர்கள் சம்பளமும் ஒழிக்கப்பட வேண்டும். இப்படி எல்லாம் நிபந்தனை போட்டால் யாரும் வர மாட்டார்கள் .ஆனால் அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை . இந்தப் படத்தில் நாங்கள் நியாயமாக உழைத்திருக்கிறோம்.ஏதாவது எடுத்து ஒப்பேற்றி விடலாம் என்று நாங்கள் நினைக்கவில்லை.  அதனால் தான் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எங்கள் மீது நம்பிக்கை வைத்து எங்களை ஊக்கப்படுத்தி இந்தப் படத்தை வெளியிடுகிறார்கள்.