கனடாவில் நீண்டட காலமாக நேர்த்தியாக இயங்கிவரும் கனடா தமிழ்க் கவிஞர் கழகம் சிறப்புற நடத்திய ‘விருது விழா-2025- 19-07-2025 அன்று சனிக்கிழமையன்று ஸ்காபுறோ நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. கழகத்தின் தலைவர் பாவலர் கணபதிப்பிள்ளை குமரகுரு அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவை கவிஞரும் எழுத்தாளரும் பொறியியலலாளருமான அகணி சுரேஸ் அவர்கள் தொகுத்து வழங்கினார். அன்றைய விழாவில் பண்டிதர் ச. வே. பஞ்சாட்சரம்-கவியாசான் பாவலர் சி. சண்முகராஜா-பாவலர் கந்த ஶ்ரீபஞ்சநாதன்- பாவலர் பவானி தர்மகுலசிங்கம் ஆகிய நான்கு கவிஞர்களுக்கு இவ்வருடத்திற்குரிய விருதுகள் வழங்கப்பெற்றன. வாழும்போதே வாழ்த்துவோம்! என்ற தொனிப்பொருளுக்கு அமைய கனடா தமிழ்க் கவிஞர் கழகம் சிறப்புற நடத்திய இந்த விருது விழாவில் கலை இலக்கிய மற்றும் வாசகப் பெருமக்கள் என பலர் கலந்து சபையை அலங்கரித்தனர்.
தலைமையுரையாற்றிய பாவலர் கணபதிப்பிள்ளை குமரகுரு அவர்களது உரை சிறப்பாக அமைந்திருந்தது. “படைப்பிலக்கியத்துறையில் ஈடுபாடு கொண்டு செயற்படுபவர்கள் அதன் தொடர்ச்சியான பலனையும் அதன் மூலம் உற்சாகத்தையும் அங்கீகாரத்தையும் பெற்றுக்கொள்கின்றார்கள் என்ற கருத்துக்ளை உள்ளடக்கிய சிறப்பான உரையை ஆற்றினார். தொடர்ந்து வாழ்த்துரைகளை வழங்கிய பேராசிரியர் இ. பாலசுந்தரம்- ‘சிந்தனைப் பூக்கள் பத்மநாதன்- ‘உதயன்’ லோகேந்திரலிங்கம்- மற்றும் கவிஞர் சயந்தன் ஆகியோர் விருது பெறுகின்றவர்களையும் கவிதை போன்ற இலக்கியப் படைப்புக்களை மக்களுக்காய் படைப்பவர்களையும் பாராட்டும் வகையில் உரையாற்றினார்கள். வாழ்த்துரையின் போது ‘உதயன்’ லோகேந்திரலிங்கம் அவர்கள் விழாத் தலைவர் அவர்கள் ஆற்றிய உரையானது ஒரு அரசவையில் ;பண்டைய மன்னர் காலத்துப் புலவர்களான கம்பனையும் இளங்கோவையும் பாராட்டி ஏனைய புலவர் பெருமக்கள் ஆற்றும் உரைபோல அமைந்தது என்று பாராட்டிச் சென்றார்.
விருதுகளைப் பெற்ற ஒவ்வொரு கவிஞரையும் வாழ்த்தியும் பாராட்டியும் விருது வழங்கும் வகையில் கனடாவில் எம்மத்தியில் கலை இலக்கியப் பரப்பில் தீவிரமாகவும் அர்ப்பணிப்போடும் பணியாற்றியும் பங்களித்தும் வரும் இலக்கியவாதிகள் பலர் மேடைக்கு அழைக்கபெற்று தங்கள் பணியை செய்தனர். கனடாவில் படைப்பிலக்கிய வடிவங்களில் மேன்மையுடையதாக கவிதைத் துறையை மேம்படுத்தும் வகையில் தொடர்ச்சியாக கவிதை இலக்கண வகுப்புக்களையும் நடத்திவரும் கனடாக் கவிஞர் கழகத்தின் இருப்பு எமக்கு மிக அவசியம் என்பதையும் இந்த விருது வழங்கும் விழா உணர்த்தியது என்றால் அது மிகையாகாது.
-சத்தியன்-