தங்க முகையதீன்
————–
திரவ் தயாரித்து இயக்கியிருக்கும் படம் “மெல்லிசை”. இப்படத்தில் ஜி.கிஷோர் குமார், சுபத்ரா ராபர்ட், ஜார்ஜ் மரியான், ஹரிஷ் உத்தமன், தனன்யா வர்ஷினி, ஜஸ்வந்த் மணிகண்டன் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “மெல்லிசை”. கிஷோர்குமார் ஒரு பாடசாலையில் உடற்பயிற்சி ஆசிரியராக பணியாற்றுகிறார். அதே பாடசாலையில் ஆசிரியராக வேலை பார்க்கிறார் அவரது மனைவி சுபத்ரா. இவர்களின் மகன் ஹரிஸ் உத்தமன் தொழில்நுட்பத்துறை குழுமத்தில் பணியாற்றுகிறார். மகள் தனன்யா வர்ஷினி வேலையின்றி வீட்டில் இருக்கிறார். இயற்கையாகவே பாடும் திறன் கொண்டவர் கிஷோர் குமார். அதனால் அப்பா தொலைக்காட்சியில் பாடவேண்டுமென்று மகள் விரும்புகிறாள். மகளின் விருப்பத்திற்கேற்ப தொலைக்காட்சியில் பாட ஆரம்பிக்கிறார் கிஷோர். அவருக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே கூடுகிறது. தொடர்ந்து தொலக்காட்சியில் போட்டிப் பாடல் பாடுவதால் பாடசாலைக்கு அடிக்கடி விடுமுறை எடுக்கிறார். இதனால் உடற்பயிற்சி ஆசிரியர் வேலையை இழக்கிறார். தொலைக்காட்சி போட்டி பாடலிலும் தோல்வியடைகிறார். இதனால் விரக்தியடைந்த கிஷோர் மதுவுக்கு அடிமையாகி கடனாளியாகவும் ஆகிவிடுகிறார். இந்த நிலையிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? என்பதுதான் கதை. வில்லனாகவும் குணசித்திர நடிகராகவும் வலம் வந்த கிஷோர்குமார் இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அவதாரமெடுத்திருக்கிறார். மேடைப்பாடகனுக்குறிய உடல்மொழியில் தேர்ச்சி பெற்றிருக்கிறார். நிஜக்குடிகாரனுடைய உளறலை தத்ரூபமாக காட்டி நடித்துள்ளார். மனைவி மக்களுடைய குடும்ப பாசத்தை மென்மையாக காட்டி கைத்தட்டலை பெறுகிறார் கிஷோர். நல்லவேளையாக அவர் காதல் பாட்டுக்கு ஆடாமல் இருந்தது பார்வையாளர்கள் செய்த புண்ணியம். குடும்பத்ப்தலைவிக்குறிய பண்புகளை சுபத்ரா அழகாக வெளிக்காட்டி நடித்திருக்கிறார். பெற்றோர்களுக்கு பிள்ளைகள் செய்கின்ற கடமைகளை ஹரிஷ் உத்தமனும் தனன்யா வர்ஷினியும் சிறப்பாக செய்திருக்கிறார்கள். வெட்டு குத்து ரத்தம் அரிவாள் துப்பாக்கி என்ற ரீதியில் படமெடுத்து திரைவானை சிவக்க வைத்த இயக்குநர்களுக்கு நடுவே, ஒரு மென்மையான குடும்பபாங்கான படமெடுத்து திரைவானை பச்சை நிறத்தில் மாற்றியமைத்த இயக்குநர் திரவ் பாராட்டுதலுக்கும் போற்றதலுக்கும் உரியவர்.

