உள்ளாட்சித் தேர்தலில் வென்றவர்களை இன்று வாழ்த்தும் நான், அடுத்த சில மாதங்களில் பாராட்டும்படிச் செயல்பட வேண்டும்” – முதல்வர் ஸ்டாலின்

06-03-2022 அன்று தூத்துக்குடியில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலையைத்திறந்து வைத்துச் சிறப்புரையாற்றினார். அதன் விவரம் பின்வருமாறு:

உள்ளாட்சிப் பொறுப்பிற்கு தேர்தல் நடைபெற்று, அதன் இறுதிக்கட்டமாக கடந்த 4-ஆம் தேதி அதனுடைய முடிவுகள் எல்லாம் அறிவிக்கப்பட்டு, முற்று பெறும் நிலையில் ஒரு மிகப்பெரிய வெற்றியை, சாதாரண வெற்றியல்ல, இதுவரையில் கழகம் கண்டிராத வெற்றி. எனவே அப்படிப்பட்ட வெற்றியை பெற்றிருக்கும் நிலையில், அந்த வெற்றியை பெற்றதற்கு பிறகு என்னுடைய முதல் சுற்றுப்பயணம், முதல் நிகழ்ச்சியாக, இந்தத் தூத்துக்குடியில் உங்களை சந்திக்கும் வாய்ப்பை நான் பெற்றிருக்கிறேன். இவ்வளவு பெரிய வெற்றியை காண்பதற்கு நம்முடைய தலைவர் கலைஞர் இல்லையே என்ற ஏக்கம் என்னுடைய உள்ளத்தில் ஆழமாகப் பதிந்திருந்தாலும், “இதோ தூத்துக்குடியில் மாவட்டக் கழக அலுவலகத்திற்கு முன்பு நான் நிற்கிறேன் வாடா” என்று என்னை இங்கு அழைத்து, அதன் மூலமாக அவருடைய திருவுருவச் சிலையை இன்றைக்கு உங்கள் அனைவரின் சார்பில் திறந்து வைக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. அந்த வாய்ப்பினை வழங்கி இருக்கும் மாவட்டக் கழகத்திற்கும், அதேபோல் நாடாளுமன்ற உறுப்பினர் தங்கை கனிமொழி அவர்களுக்கும், இந்த மாவட்டத்தில் இருக்கும் அத்தனை பேருக்கும் நான் இந்த நேரத்தில் என்னுடைய நன்றியைக் காணிக்கையாக்க விரும்புகிறேன். தலைவர் கலைஞர் அவர்களுடைய திருவுருவச் சிலையை அவருடைய மறைவிற்கு பிறகு முதன் முதலில் சென்னையில் இருக்கும் அண்ணா அறிவாலயத்தில் நாம் திறந்து வைத்தோம். அதற்குப் பின்னால் அவருடைய குருகுலமாக விளங்கிக் கொண்டிருக்கும் ஈரோட்டில் திறந்து வைத்தோம். அவரை உருவாக்கிய அண்ணன் பிறந்த காஞ்சிபுரத்தில் தொடர்ந்து திறந்து வைத்தோம். அதற்குப் பின்னால் அவருடைய மூத்தப் பிள்ளையாகக் கருதும் முரசொலி அலுவலகத்தில் திறந்து வைத்தோம்.  இன்றைக்கு தலைவர் கலைஞர் அவர்களுடைய அருமைத் தம்பியாக – பாசத்திற்குரிய தம்பியாக விளங்கிய நம்முடைய அண்ணாச்சி பெரியசாமி அவர்கள் பிறந்த இந்த மண்ணில் அவரால் உருவாக்கப்பட்ட இந்த மாவட்டக் கழக அலுவலகத்திற்கு முன்னால் தலைவர் கலைஞர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட இந்தக் கட்டடத்திற்கு முன்னால் உங்கள் அனைவரின் சார்பில் இன்று திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.

தலைவர் கலைஞர் அவர்களுடைய திருவுருவச் சிலையை இன்றைக்கு நாம் திறந்து வைத்திருக்கிறோம் என்று சொன்னால், அவருடைய வழிநின்று – அவர் எந்த உணர்வோடு பாடுபட்டாரோ, பணியாற்றியிருக்கிறாரோ, எவற்றையெல்லாம் நமக்கு கற்றுத் தந்திருக்கிறாரோ அவற்றையெல்லாம் நாங்கள் நிச்சயமாக உறுதியாக நிறைவேற்றுவோம் என்ற உறுதி எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சியாகத்தான் இந்த நிகழ்ச்சியை நான் கருதிக் கொண்டிருக்கிறேன். பல பொறுப்புகளை ஏற்றுக் கொண்டிருக்கும், உள்ளாட்சியில் இன்றைக்கு மேயர்களாக, துணை மேயர்களாக, மாநகராட்சி மன்ற உறுப்பினர்களாக, பேரூராட்சித் தலைவர்களாக, துணைத் தலைவர்களாக, பேரூராட்சியில் உறுப்பினர்களாக, அதேபோல் ஊரகப் பகுதிகளில் இருக்கும் உள்ளாட்சிப் பொறுப்புகளிலும் பொறுப்பேற்று கொண்டிருக்கும் நண்பர்களுக்கு மட்டுமல்ல, சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும் சரி, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் சரி, ஏன் அமைச்சர்களாக இருந்தாலும், முதலமைச்சராக இருக்கும் நானாக இருந்தாலும் இன்றைக்கு எடுத்துக்கொள்ளும் உறுதிமொழி என்னவென்று கேட்டால், அறிஞர் அண்ணா அவர்கள் அடிக்கடி எடுத்துச் சொல்வதுண்டு “மக்களிடம் செல், மக்களுடன் சேர்ந்து பணியாற்று, மக்களோடு மக்களாக இருந்து வாழ்” என்று நமக்குக் கற்றுத் தந்திருக்கிறார்.  எனவே அதை உணர்ந்து நாம் நம்முடைய கடமையை ஆற்ற அவருடைய திருவுருவச் சிலையைத் திறந்து வைத்திருக்கும் இந்த நேரத்தில் நாம் அத்தனை பேரும் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று உங்கள் அத்தனை பேரையும் நான் கேட்டுக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

தலைவர் கலைஞர் அவர்கள் அடிக்கடி சொல்வதுண்டு. நான் அதைப் பல நேரங்களில் குறிப்பிட்டுச் சொன்னதுண்டு. நான் சென்னை மாநகரத்தின் மேயராக 1996-ஆம் ஆண்டு நாம் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது, சென்னை மாநகராட்சித் தேர்தலில் நான் வெற்றி பெற்று நான் மேயராகப் பொறுப்பேற்றபோது, அந்த மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் ஏற்புரை ஆற்றுவதற்காக நான் ஒரு பேச்சைத் தயாரித்தேன். அவ்வாறு தயாரித்து, அது சரியாக இருக்கிறதா என்று முதல்வராக இருந்த தலைவர் கலைஞரிடத்தில் நான் காண்பித்தேன். அதை முழுமையாக, ஒரு முறைக்கு இரண்டு முறை படித்துப் பார்த்து, இரண்டு இடத்தில் திருத்தம் செய்தார். அந்த இரண்டு இடத்தில் என்ன திருத்தம் செய்தார் என்று கேட்டால், ‘மேயர் பதவி’ என்று நான் போட்டிருந்தேன். அந்தப் ‘பதவி’ என்பதை அடித்துவிட்டு ‘மேயர் பொறுப்பு’ என்று திருத்தம் செய்தார்.  “நான் ஏன் பதவி என்பதை அடித்து, அதில் பொறுப்பு என்று போட்டேன் என்று சொன்னால், மக்கள் உனக்குத் தந்திருப்பது ‘பதவி’ அல்ல, மக்கள் உனக்கு தந்திருப்பது ‘பொறுப்பு’, அதை உணர்ந்து பணியாற்று.” என்று சொன்னார். அதைத்தான் இன்றைக்குப் பொறுப்பேற்றிருக்கும் அத்தனை பேருக்கும் நினைவுப்படுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன். நான் உறுதியோடு சொல்கிறேன், எங்காவது ஒரு சிறு தவறு நடந்தாலும் அதை நான் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருப்பேன். கண்காணித்துக் கொண்டு இருப்பேன் என்பது மட்டுமல்ல, உரிய நடவடிக்கையையும் உடனடியாக எடுப்பேன் என்பதையும் உறுதியோடு தெரிவிக்க நான் கடமைப்பட்டிருக்கிறேன். இது மிரட்டுவதற்காக – அச்சுறுத்துவதற்காக அல்ல, மக்கள் நம்மை நம்பி நம்மிடத்தில் இந்தப் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார்களே, அவர்கள் நம்பிக்கையை நாம் காப்பாற்ற வேண்டும், அதற்காகத்தான். நீங்கள் கடந்த இரண்டு நாட்களாகச் செய்திகளைப் பார்த்துக் கொண்டிருப்பீர்கள். நம்முடைய கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் கட்சிகளுக்கு சில இடங்களை ஒதுக்கி, அந்த இடத்தை அவர்களிடத்தில் ஒப்படைத்தோம். ஆனால் அந்த ஒரு சில இடங்களில் தவறுகள் நடந்தது. அந்த தவறுகள் நடந்த காரணத்தால் நான் வருத்தப்படுகிறேன், வேதனைப்படுகிறேன், கூனிக் குறுகி நிற்கிறேன். எனவே அந்தத் தவறு செய்தவர்கள் உடனடியாகத் திருந்த வேண்டும், ராஜினாமா செய்துவிட்டு வரவேண்டும் இல்லையென்றால், கட்சி உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நான் சொன்னது உங்கள் அத்தனை பேருக்கும் தெரிந்திருக்கும்.

இது செய்திக்காக மட்டுமல்ல, ஏதோ அந்தக் கூட்டணி கட்சியில் இருப்பவர்களைத் திருப்திபடுத்துவதற்காகவோ அல்லது தவறு செய்தவர்களை மிரட்டுவதற்காகவோ அல்ல. நிச்சயமாக, உறுதியாக, அவர்கள் செய்த தவறை உணர்ந்து திருந்தவில்லை என்று சொன்னால் உரிய நடவடிக்கையை நிச்சயமாக நான் எடுப்பேன் என்பதைத் தலைவர் கலைஞர் அவர்கள் சிலையை திறந்து வைத்திருக்கும் இந்த நேரத்தில் நான் உறுதி எடுத்துக் கொண்டிருக்கிறேன். எனவே அந்த உணர்வோடுதான் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களுடைய சிலையை இன்றைக்கு நாம் திறந்து வைத்திருக்கிறோம். அறிஞர் அண்ணா நமக்கு வகுத்துத் தந்திருக்கும் தாரக மந்திரம்,  “கடமை – கண்ணியம் – கட்டுப்பாடு”. அதைத் தலைவர் கலைஞர் அவர்கள் பல நேரங்களில் குறிப்பிட்டுச் சொன்னதுண்டு.  ஆனால் கடமையை விட, கண்ணியத்தை விட, கட்டுப்பாடுதான் நமக்கு மிக மிக முக்கியம். அதைக் கட்சித் தோழர்கள் கடைபிடிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். எனவே இந்த ஆட்சி, நல்ல ஆட்சி என்பதற்காகத்தான், மக்களுக்காக நடைபெறும் ஆட்சி என்பதற்காகத்தான் – தேர்தல் நேரத்தில் சொன்ன உறுதிமொழிகளைத் தொடர்ந்து காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்கிற உணர்வோடுதான் இன்றைக்கு மக்கள் அமோகமான ஆதரவை உள்ளாட்சித் தேர்தலில் நமக்கு வழங்கி இருக்கிறார்கள் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. எனவே இது மேலும் பெருக வேண்டும் என்று சொன்னால், நமக்கு மேலும் பெருமைகள், சிறப்புகள் வந்து சேரவேண்டும் என்று சொன்னால், மேலும் பல வெற்றிகளை அடைய வேண்டும் என்று சொன்னால், உள்ளாட்சி அமைப்புகள்தான் அதற்குக் காரணமாக இருக்கப்போகிறது. எனவே அதை உணர்ந்து உள்ளாட்சியில் பல்வேறு பொறுப்புகளை ஏற்று பணியாற்ற வந்திருக்கும் அத்தனை பேருக்கும் என்னுடைய வாழ்த்துகள் சொல்வது மட்டுமல்ல, இன்றைக்கு நான் வாழ்த்து சொல்கிறேன் என்று சொன்னால், ஒரு ஐந்தாறு மாதம் கழித்து உங்களுக்கு நான் பாராட்டு சொல்ல வேண்டும், உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.  எனவே அந்த வகையில் நீங்கள் பணியாற்ற வேண்டும் என்று உங்களை எல்லாம் அன்போடு கேட்டுக் கொண்டு, இந்த வெற்றிக்குத் துணைநின்ற தோழமைக் கட்சித் தோழர்களுக்கு, நம்முடைய கழக முன்னோடிகளுக்கு, கழக நிர்வாகிகளுக்கு, பல்வேறு மாவட்டங்களில் பொறுப்பேற்றுப் பணியாற்றி இருக்கும் நம்முடைய அமைச்சர் பெருமக்களுக்கு, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, இந்த வெற்றியை பெரிய வெற்றியாக தேடித் தந்திருக்கும் ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்கள் அத்தனைப் பேருக்கும் நன்றி.. நன்றி.. நன்றி.. என்று கூறித் தலைவர் கலைஞர் வழியில் நாம் பீடுநடை போடுவோம் போடுவோம் என்ற அந்த உறுதியோடு விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம். இவ்வாறு அவர் உரையாற்றினார்.