அழகான தமிழ்ப் பெயர்களை சூட்டுங்கள்; தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துத் தாருங்கள்; தமிழர் என்ற உணர்வைப் பெறுங்கள்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று (14/03/2022) அன்று சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெற்ற கழக நிர்வாகி புழல் எம். நாராயணன் மகன் எம்.என். அஜய் தென்னவன் – ஆர். பாரதி ஆகியோரின் திருமண விழாவுக்குத் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார்.

அதுபோது அவர் ஆற்றிய உரை பின்வருமாறு: நீண்ட காலமாகக் கழகப்பணியும் – பொதுப்பணிகளையும் சிறப்போடு, தொடர்ந்து ஆற்றிக் கொண்டிருக்கும், மக்களுக்காகவே தன்னுடைய பணி என்பதை உணர்ந்து அந்த வகையில் கழகத்திற்குப் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கும் நம்முடைய அருமைச் சகோதரர் புழல் நாராயணன் அவர்களுடைய அன்பு மகன் அஜய் தென்னவன் – ஆர்.பாரதி ஆகியோருடைய திருமண விழாவில் கலந்து கொண்டு இந்த மணவிழா நிகழ்ச்சிக்கு தலைமைப் பொறுப்பேற்று மணவிழாவை நடத்தி வைத்து, மணமக்களை வாழ்த்தும் ஒரு சிறப்பான வாய்ப்பைப் பெற்றமைக்கு நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன், பெருமைப்படுகிறேன். புழல் நாராயணன் அவர்களை பொறுத்தவரையில், அவர் ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டார், “எல்லாமே தளபதிதான்”. எனக்கு எல்லாமே இந்தக் கழகம்தான். இந்த இயக்கம்தான். இந்த இயக்கத்தினுடைய தொண்டர்கள்தான். நீங்கள் இல்லை என்று சொன்னால் நானும் இல்லை. மேடையில் இருக்கும் யாரும் இல்லை. எனவே உங்களால் – உங்களுடைய ஓயாத உழைப்பால் – உங்களுடைய பணிகளால் இந்தக் கழகம் இன்றைக்கு கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது. கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது என்று சொன்னால் மட்டும் போதாது. தொடர்ந்து இந்தச் சமுதாயத்தில் – இந்த நாட்டில் சுயமரியாதை உணர்வோடு, இன்னும் வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால் திராவிட உணர்வோடு நம்முடையப் பணி அமையப்போகிறது; அமைந்து கொண்டிருக்கிறது.

எனவே அப்படிப்பட்ட இந்த இயக்கத்தில் தன்னை ஒப்படைத்துக் கொண்டிருக்கும் ஒரு தூய தொண்டராக, வெற்றி வரும் – போகும் – அதைப் பற்றியெல்லாம் கிஞ்சிற்றும் கவலைப்படாமல் நம்முடைய நாராயணன் அவர்கள் கழகத்திற்காக – மக்களுக்காக – ஏழை எளியவர்களுக்காக தொடர்ந்து தன்னுடைய கடமையை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். கழகமே மூச்செனச் செயல்படக் கூடியவர் அவர். பேரறிஞர் அண்ணா அவர்கள் இந்த இயக்கத்தில் பணியாற்றும் தொண்டர்களுக்கு – நிர்வாகிகளுக்குச் சொல்லியிருக்கும் தாரக மந்திரம், ‘மக்களிடம் செல்; அவர்களோடு வாழ்; அவர்களிடமிருந்து கற்றுக் கொள்; அவர்களை நேசி; அவர்களுக்கு சேவை செய்; அவர்களோடு திட்டமிடு; அவர்களுக்கு தெரிந்தவற்றிலிருந்து தொடங்கு; அவர்களிடம் இருப்பதைக் கொண்டு நம்முடைய கடமையைச் செய்;’ என்று நமக்கெல்லாம் அறிவுறுத்தியிருக்கிறார்கள். இதை எதற்காக இந்த நேரத்தில் நான் சொல்லுகிறேன் என்று சொன்னால், அண்மையில் நடைபெற்றிருக்கும் உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலில் ஒரு மிகப்பெரிய வெற்றியை – வரலாற்றில் பதிவாக வேண்டிய ஒரு மிகப்பெரிய வெற்றியை – இதுவரையில் நாம் இப்படிப்பட்ட வெற்றியைப் பார்த்ததில்லை. 100-க்கு 99 சதவிகிதம் இந்த உள்ளாட்சித் தேர்தலில் நாம் ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறோம்.

எனவே அந்த வெற்றி பெற்றிருக்கும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இதை மனதில் வைத்துக் கொண்டு தங்களுடைய கடமையை நிறைவேற்றிட வேண்டும். நம்மீது மக்களுக்கு எந்த அளவிற்கு நம்பிக்கை இருக்கிறது என்பதற்கு இந்த வெற்றிதான் நமக்கு சாட்சியாக அமைந்திருக்கிறது. நாம் எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி – ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி, தொடர்ந்து மக்களுக்காக பணியாற்றிக் கொண்டிருக்கிறோம் – பாடுபட்டுக் கொண்டிருக்கும் – கடமையை நிறைவேற்றி கொண்டிருக்கிறோம். கடந்த காலத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலை நடத்தாத காரணத்தால்தான் மக்கள் பல துன்பங்களுக்கும், இன்னல்களுக்கும் ஆளாக்கப்பட்டார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். அதனால்தான் நாம் எதிர்க்கட்சியாக இருந்த நேரத்தில் கிராமம் கிராமமாக சென்றோம். கிராமசபைக் கூட்டங்களை நடத்தினோம். மக்கள் சபைக் கூட்டங்களை நடத்தினோம். தண்ணீர்ப் பஞ்சம் ஏற்படக் கூடாது என்று தமிழகம் முழுவதும் இருக்கும் எல்லா மாவட்டத்திற்கும் சென்று, எல்லா கிராமப் பகுதிகளுக்கும் சென்று நீர்நிலைகளைத் தூர்வாரினோம். எதிர்க்கட்சியாக இருந்திருந்தாலும் தி.மு.க.தான் ஆட்சியில் இருக்கிறது என்று மக்கள் உணரும் வகையில் நாம் அந்தப் பணியை தொடர்ந்து நிறைவேற்றினோம்.

புயல் – வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது முதலில் ஓடிச் சென்று மக்களுக்கு பணியாற்றக்கூடியவன்தான் தி.மு.க. தொண்டன். இவ்வாறு மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றக்கூடிய காரணத்தால்தான் நம்மீது சொல்லப்படும் பொய்ப் பிரச்சாரங்கள், அவதூறுகளை எல்லாம் முறியடித்து இன்றைக்கு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறோம். மக்கள் நம்மீது நம்பிக்கை வைத்து இந்த வெற்றியை நமக்கு வழங்கியிருக்கிறார்கள். நமக்கென்று ஏதாவது ஆபத்து என்று சொன்னால் உடனடியாக ஓடி வருபவன்தான் தி.மு.க.காரன் என்பதை மக்கள் உணர்ந்த காரணத்தால்தான் இன்றைக்கு மிகப்பெரிய வெற்றி நமக்குக் கிடைத்திருக்கிறது. இன்னொன்றையும் நான் இங்கு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்று சொன்னால், ஏறக்குறைய இரண்டாண்டு காலமாக கொரோனா என்ற ஒரு கொடிய தொற்றில் சிக்கி நான் மட்டுமல்ல நாடே இன்றைக்கு அதில் தவித்துக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட அந்தக் கொரோனா காலக்கட்டத்தில் நாம் எதிர்க்கட்சியாக இருந்தோம். எதிர்க்கட்சியாக இருந்த நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் என்கிற முறையில் தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருந்த அ.தி.மு.க. ஆட்சி – முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைத்தோம். உடனடியாக அரசியலை பார்க்காமல், அரசியல் நோக்கத்தோடு இதைக் கருதாமல் அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டுங்கள். இதை எவ்வாறு சமாளிப்பது என்று யோசியுங்கள் – சிந்தியுங்கள் – உரிய நடவடிக்கை எடுங்கள் என்று சொன்னால், அங்கிருந்து என்ன பதில் வந்தது என்று கேட்டால், “நீங்கள் என்ன டாக்டரா?” என்று திருப்பி நம்மைப் பார்த்து கேட்டார். அதற்கு நான் ஒரே ஒரு விளக்கத்தைச் சொல்ல வேண்டுமென்று சொன்னால், நாம் ஆட்சிக்கு வந்த நேரத்தில் கொரோனா எவ்வாறு இருந்தது; பாதிக்கப்பட்ட மக்களுடைய எண்ணிக்கை எவ்வளவு இருந்தது என்பது உங்களுக்குத் தெரியும்.

அதைச் சந்தித்து, அதைச் சமாளித்து இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவிலேயே கொரோனாவை இன்றைக்கு முழுமையாகக் கட்டுப்படுத்தியிருக்கும் மாநிலமாகத் தமிழ்நாடு விளங்கிக் கொண்டிருக்கிறது என்று சொன்னால், நாம் மக்கள் பணியில் எந்த அளவிற்கு கவனம் செலுத்துகிறோம் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது. எதிர்க்கட்சியாக இருந்தபோது இந்த கொரோனா காலத்தில், ‘ஒன்றிணைவோம் வா’ என்ற ஒரு திட்டத்தை அறிவித்தோம். அவ்வாறு அறிவித்தது மட்டுமல்ல, நேரடியாகச் சென்று மக்களை நாம் சந்திக்க முடியாது; நம்முடைய கட்சித் தோழர்களை சந்தித்து பேச முடியாது; ஆங்காங்கு இருக்கும் நிர்வாகிகளிடத்தில் நம்முடைய கருத்துக்களை நேரடியாக சென்று சொல்ல முடியாது;  எனவே காணொலிக் காட்சியின் மூலமாக ஒவ்வொரு மாவட்ட – ஒன்றிய – நகர – பகுதி – கிளைக் கழகத்தில் இருக்கும் நிர்வாகிகளை, ஏன் கட்சியின் தொண்டர்களை, ஏன் சில இடங்களில் பொதுமக்களையும் அந்தக் காணொலிக் காட்சியின் மூலமாக சந்தித்து, உங்களுக்கு என்ன குறை? அந்தக் குறையை நிறைவேற்ற நாங்கள் இருக்கிறோம்; தி.மு.க. இருக்கிறது என்று சொல்லி நாம் அவர்களுக்கு நிவாரணப்பணிகளில் ஈடுபட்டோம். அவர்களுக்குத் தேவையான மளிகைப் பொருட்களை, அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை, அவர்களுக்கு மருந்து – மாத்திரைகளை, இவற்றையெல்லாம் நாமே காணொலிக் காட்சியின் மூலமாக விசாரித்து, அந்தந்தப் பகுதியில் இருக்கும் கழக நிர்வாகிகள் மூலமாக அந்தப் பணிகளை செய்தோம். அந்தப் பணியை முழுமையாக மாதவரம் பகுதியில் – புழல் பகுதியில் சிறப்பாக நிறைவேற்றிய ஒரு தூய தொண்டர்தான் நம்முடைய புழல் நாராயணன் அவர்கள். இங்கே பேசுகிறபோது, நம்முடைய சுதர்சனம் அவர்களும், மஸ்தான் அவர்களும், பொன்முடி அவர்களும் சொன்னார்கள், புழல் நாராயணன் அவர்கள் எவ்வாறெல்லாம் இந்த இயக்கத்திற்கு பணியாற்றிக் கொண்டிருக்கிறார் என்று. அதிலும் குறிப்பாகப் பொன்முடி அவர்கள் பேசுகிறபோது, புழலில் இருக்கும் சிறையை அவர் நினைவுபடுத்தினார். யார் சிறைக்கு சென்றாலும், வாசலில் நின்று வரவேற்பது; சிறையில் அவர்களுக்கு என்னென்ன வசதிகள் செய்து தர முடியுமோ விதிமுறைக்கு உட்பட்டு அதையெல்லாம் செய்து கொடுத்தார் என்று சொன்னார்.

அவர் புழல் சிறைக்கு மட்டுமல்ல, நம்முடைய சிறையில் இருக்கும் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களின் நினைவிடத்திலும் அவர்தான் ஒரு காவல்காரனாக நின்று, யார் வந்தாலும் அவர்களை அழைத்துக் கொண்டு சென்று தலைவர் இடத்தில் நாம் நம்முடைய மரியாதை செலுத்தும் அந்தப்பணியை செய்தோம் என்றால், அங்கே எப்போது சென்றாலும்; எந்த நேரத்தில் சென்றாலும், நானோ; கழக நிர்வாகிகளோ அல்லது யாராக இருந்தாலும் அங்கு வரும் செய்தி அறிந்தால் அந்த இடத்தில் முதல் ஆளாக நின்று வரவேற்பவர்தான் நம்முடைய புழல் நாராயணன் அவர்கள். எனவே அவருடைய இல்லத்தில் நடைபெறும் இந்த மணவிழா நிகழ்ச்சியில் நான் பங்கேற்பதில் உள்ளபடியே பெருமைப்படுகிறேன். இன்னும் பல நிகழ்ச்சிகள் இருக்கிறது. தரமணிக்கு நான் செல்ல வேண்டும். அதற்குப் பிறகு கோட்டைக்கு செல்ல வேண்டும். எனவே பல பணிகளுக்கிடையே, வரும்போது கூட வீட்டில் – வாசலில் ஒரு திருமணத்தை நடத்தி முடித்து விட்டுதான் வந்திருக்கிறேன். இந்த நாட்டில் வைதீகத் திருமணத்தை நடத்தி வைக்கும் புரோகிதர்களுக்கு அதிக கிராக்கி இருக்கிறதோ இல்லையோ, சீர்திருத்தத் திருமணத்தை நடத்திவைக்கும் இந்த புரோகிதருக்கு அதிகமான கிராக்கி ஏற்பட்டிருக்கிறது. எனவே இந்த இயக்கத்தில் நடக்கிற திருமணமாக – நம்முடைய இல்லத்தில் நடைபெறும் திருமணமாக இந்தத் திருமணம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. நம்முடைய பொன்முடி அவர்கள் பேசுகிறபோது குறிப்பிட்டுச் சொன்னார். தமிழ்ப் பெயர்களை வையுங்கள் என்று அவர் எடுத்துச் சொன்னார். நான் அடிக்கடி பல கூட்டங்களில், பல விழாக்களில், அதிலும் குறிப்பாகத் திருமண விழாக்களில் தொடர்ந்து நான் அதை எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். எனவே நம்முடைய மணமக்களை நான் வாழ்த்துகிற நேரத்தில் அழகான தமிழ்ப் பெயர்களை சூட்டுங்கள்; தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துத் தாருங்கள்; தமிழர் என்ற உணர்வைப் பெறுங்கள் என்பதை மாத்திரம் இந்த நேரத்தில் எடுத்துச் சொல்லி, புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எடுத்துச் சொல்லியிருக்கும், ‘வீட்டிற்கு விளக்காக, நாட்டிற்கு தொண்டர்களாக’ மணமக்கள் வாழ்க… வாழ்க… வாழ்க… என்று வாழ்த்தி விடைபெறுகிறேன். நன்றி.. வணக்கம்… இவ்வாறு அவர் உரையாற்றினார்.