மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில் எஸ்.சாம் இயக்கத்தில் தேவ், தேவிகா, ஆகாஷ் பிரேம்குமார் ,படவா கோபி, விஜே நிக்கி, சுபாஷினி கண்ணன், பிரவீன், யுவராஜ் கணேசன் ,சுவாதி, திவாகர், கலைக்குமார், நித்தி, சுப்பிரமணியன் கோபாலகிருஷ்ணன், தீபிகா, தீப்ஷன், மாதங்கி, கோவிந்தராஜ் ,பிரபு, பூஜா ஃபியா நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “யோலோ” வலையொளி (யூடீப்) தளம் ஒன்றை நடத்தி வருகிறார் கதாநாயகன் தேவ். நாயகி தேவிகாவை பெண்பார்க்க வி.ஜே.நிக்கி தனது குடும்பதாருடன் வருகிறார். விஜே நிக்கிக்கு தேவிகாவை பிடித்துவிடுகிறது. தேவிகாவும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கிறார். அப்போது விஜே நிக்கியின் உறவினர் ஒருவர், இந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதாகவும் வெளிநாட்டில் இவர் தன் கணவருடன் தேன் நிலவுக்கு வந்திருந்ததை தான் பார்த்ததாகவும் கூறுகிறார். இதனால் குழப்பமடைந்த தேவிகா, எனக்கு திருமணம் ஆகவில்லை இதுவரை நான் வெளிநாட்டுக்கும் போனதில்லை என்று கூறுகிறார். அப்படியானால் தேவிகாவின் கடவுச்சீட்டில் வெளிநாட்டுக்குச் சென்ற முத்திரை இருக்கிறதா? பாருங்கள் என்று பெண்பார்க்க வந்தவர்கள் கூறுகிறார்கள். பெண் வீட்டார் தேவிகாவின் கடவுசீட்டை பார்த்தபோது அதில் வெளிநாட்டுக்குச் சென்ற முத்திரை இருக்கிறது. அத்துடன் தேவிகாவுக்கு திருமணம் நடந்த பதிவுத்துறையின் சான்றும் கிடைக்கிறது. ஆனால் இவை அனைத்தும் சம்பந்தப்பட்ட தேவிகாவுக்கு தெரியவில்லை. அதை கண்டறிய வலையொளி நடத்தும் தேவ்விடம் சென்று உதவி கேட்கிறார் தேவிகா. தேவிகாவைப் பார்த்த்தும் அவள் மீது காதல் கொள்கிறார் தேவ். இதற்கிடையில் ஒரு கொலைக் குற்றத்திற்காக தேவ் கைது செய்யப்படுகிறார். அந்தக் கொலையையும் தான் செய்ததாக தேவ்வுக்கும் தெரியவில்லை. இப்படியொரு இடியாப்பச் சிக்கலை கதையின் கருவாக வைத்து உச்சக்கட்டக் காட்சியில் சிக்கலை அழகாக பிரித்தெடுக்கிறார் இயக்குநர் எஸ்.சாம். தேவ்வும் தேவிகாவும் ஒருவருகொருவர் போட்டிபோட்டு நடித்திருக்கிறார்கள். படமுழுக்க இளமையின் துள்ளாட்டம் தூள்பறத்துகிறது. நகைச்சுவைக்காக மட்டுமே விஜே விக்கியை நடிக்க வைத்திருக்கிறார்கள். அவரின் நகைசுவை அவ்வளவாக எடுபடவில்லை. ஒளிப்பதிவும் பின்னணி இசையும் கதைக்களத்தை தாங்கி நிற்கிறது. படத்தின் முன்பகுதி குழப்பம். பின்பகுதி தெளிவு.
“யோலோ” திரைப்பட விமர்சனம்
