சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிரான இந்துவ பாசிச சக்திகளின் இனப்படுகொலை அறைகூவல் மற்றும் கிறிஸ்தவ சமூகத்தவர்களுக்கு எதிராக நடைபெற்றுவரும் தாக்குதல்களைக் கண்டித்து சென்னையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் கடந்த மாதம் நடைபெற்ற இந்த்துவ சாமியார்களின் தர்மசன்சாத் மாநாடு மற்றும் டெல்லியில் நடைபெற்ற இந்து யுவவாஹினி கூட்டத்தில் இந்துத்துவ பாசிச சக்திகளால் முஸ்லிம்களுக்கு எதிராக விடுக்கப்பட்ட இனப்படுகொலை அழைப்பை கண்டித்தும், நாடு முழுவதும் கிறிஸ்தவ சமூகத்தவர்களுக்கு எதிராக நடைபெற்றுவரும் சங்கபரிவார் தாக்குதலைக் கண்டித்தும், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக இன்று (ஜன.07) சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாநில செயலாளரும், சென்னை மண்டல தலைவருமான ஏ.கே.கரீம் தலைமை தாங்கினார். மேலும் கட்சியின் மாநில செயலாளர் ரத்தினம், மாநில செயற்குழு உறுப்பினர் பஷீர் சுல்தான் மற்றும் சென்னை மண்டல மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

மேலும், கண்டன ஆர்ப்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணை செயலாளர் மு.வீரபாண்டியன், பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் முகமது சேக் அன்சாரி, விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு, திராவிட விடுதலைக் கழக பொதுச்செயலாளர் விடுதலை ராஜேந்திரன், மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன், இந்திய தவ்ஹீத் ஜமாத் துணைத் தலைவர் முனீர், இந்திய குடியரசு கட்சி மாநில தலைவர் இரா.அன்புவேந்தன் மற்றும் கிறிஸ்தவ மக்கள் களம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் பே.பெலிக்ஸ் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

சிறுபான்மை சமூகத்தவரான முஸ்லிம்கள் மற்றும் கிறித்தவர்களை கொன்றொழிக்க வெளிப்படையாக அறைகூவல் விடுத்த இந்துத்துவ சாமியார்களின் இனவெறிப் பேச்சுகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இந்துத்துவ பாசிஸ்டுகளின் இனப்படுகொலை அழைப்புக்கு எதிராக ஒன்றுதிரள்வதோடு, அவர்களின் நடவடிக்கைக்கு எதிராக ஒன்றிணைந்து போராட அனைவரும் முன்வர வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.